இந்த கோடை விடுமுறையை கொண்டாட ஆலப்புழா படகு வீட்டிற்கு ஒரு நாள் ட்ரிப் போவோமா…?

கேரளா என்றாலே நமக்கு நினைவிற்கு வருவது இயற்கை. கேரளாவிற்கு ‘கடவுளின் சொந்த நாடு’ என்ற பெயரும் உண்டு. கேரளாவிற்கு சுற்றுலா செல்வது வாழ்க்கையில் மறக்கமுடியாத அனுபவத்தைக் கொடுக்கும். வசதியான படகுகள், பசுமையான மலை வாசஸ்தலங்கள், நீர்வீழ்ச்சிகள், தேயிலை மற்றும் மசாலாத் தோட்டங்கள், ஆயுர்வேத மசாஜ் மற்றும் சுவையான உணவுகள் ஆகியவை கேரளாவில் உண்டு.

கேரளாவில் அமைந்துள்ள ஆலப்புழா படகு வீடுகள் மிக பிரபலமானவை. ஒரு நாள் ஆலப்புழா படகில் தங்குவது நம் மனதை கவரும் ஒன்றாகும். இயந்திரமயமான வாழ்க்கையில் இருந்து விடுப்பு எடுத்துக் கொண்டு ஆலப்புழா படகு வீட்டில் தங்கி இயற்கை அழகை ரசித்து பாருங்கள், அதுதான் பூலோக சொர்கம் என்று நமக்குத் தோன்றும்.

ஆலப்புழா படகு வீடு கேரளாவின் பேக் வாட்டர்ஸில் மிதந்து செல்லும் போது, சுற்றிலும் இயற்கை காட்சிகள், வளைந்த சதுப்பு காடுகள், தென்னை மரங்கள் என கேரளாவின் மொத்த அழகும் நம் கண்ணிற்கு விருந்தாக அமையும். அந்த நேரத்தில் அந்த இடத்தில் நம் மனதிற்கு நெருக்கமானவர்கள் நம்முடன் இருந்தால் அந்த தருணம் இன்னும் நீளாதா என்று மனது ஏங்கும்.

ஆலப்புழா படகு வீடு ஒன்று முதல் ஐந்து பெட்ரூம்கள் என சிறியது முதல் பெரியது வரை உள்ளது. அதில் நம் வசதிக்கு ஏற்ப தேர்வு செய்துக் கொள்ளலாம். இந்த படகு வீட்டை ஆன்லைன் மூலமாகவும் புக்கிங் செய்துக் கொள்ளலாம். பெரும்பாலும் சுற்றுலா பயணிகள் ஒரு நாள் ட்ரிப்பையே தேர்வு செய்வர். படகு வீட்டில் ஒரு சமையல்காரரும், இரண்டு ஓட்டுநர்களும் இருப்பர்.

அதன்படி நீங்கள் காலை 11 மணிக்கு படகு வீட்டில் ஏறியதும் நாம் குளித்துவிட்டு சுற்றுலாவை தொடங்கலாம். முதலாவதாக வெல்கம் டிரிங்க் அல்லது சூடான பஜ்ஜியும் தேநீரும் தருவார்கள். போகும் வழியில் பல பிரெஷான மீன் கடைகளை காண முடியும். நம் விருப்பத்திற்கேற்ப மீன்களை வாங்கி கொடுத்தால் அங்கு சமைத்து தருவார்கள். அது மட்டுமல்லாமல் படகு வீட்டில் உணவு பட்டியலும் உண்டு. அதில் நம் விருப்பத்திற்கேற்ப தேர்வு செய்துக் கொள்ளலாம். இரவில் ஒரு இடத்தில் படகை நிறுத்துவார்கள். அங்கு மின்சாரம், டிவி வசதியும் இருக்கும். இயற்க்கை சூழலோடு பேக் வாட்டர்ஸில் இரவு பொழுதைக் கழிக்கலாம். மறுநாள் காலை 11 மணிக்கு ஒரு நாள் படகு சுற்றுலா முடிந்துவிடும். இந்த கோடை விடுமுறையில் ஆலப்புழா படகு வீட்டிற்கு சென்று மறக்கமுடியாத அனுபவத்தைப் பெறுங்கள்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...