சித்தர்களின் ரகசியம் அடங்கிய சதுரகிரி மலைக்கு ஒரு பயணம் செல்வோமா…?

விருதுநகர் மாவட்டத்தில் இருக்கும் ஸ்ரீவில்லிபுத்தூர் எனும் ஊரில் இருந்து சற்று தொலைவில் மேற்கு தொடர்ச்சி மலைகளில் அமைந்திருக்கிறது இந்த சதுரகிரி மலை. நான்கு திசைகளிலும் மலைகளால் சூழப்பட்டிருப்பதால் இந்த மலைக்கு சதுரகிரி மலை என பெயரிடப்பட்டுள்ளது. இந்த சதுரகிரி வனப்பகுதி மொத்தம் அறுபத்தி நான்காயிரம் ஏக்கர் பரப்பளவு கொண்டது.

சதுரகிரி மலையில் அமைந்துள்ள சுந்தரமகாலிங்க சுவாமி திருக்கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. சித்தர்களின் முதல் குரு சிவபெருமான் ஆவார். பல இடங்களில் சித்தர்கள் சிவபெருமானுக்கு கோவில் அமைத்து வழிபட்டிருக்கின்றனர். அதன்படி அகஸ்திய சித்தர் இந்த மலையில் தங்கி தவமியற்றிய போது ஒரு லிங்கத்தை ஸ்தாபித்து வழிபட்டிருக்கிறார். அந்த லிங்கத்தை பின்னாளில் சுந்தரானந்த சித்தர் பூஜித்து வந்ததால் அது சுந்தரமகாலிங்கம் என அழைக்கப்படலாயிற்று.

இன்றும் அருவமாக சித்தர்கள் வாழ்ந்து வருவதாக கருதப்படும் மலை சதுரகிரி மலையாகும். இங்கு உள்ள இயற்கை எழிலும் நிசப்தமும் நமக்குள் ஆழமான அமைதியை உண்டாக்குகின்றன. இது தியானம் செய்யவும், மவுனம் மேற்கொள்ள விரும்புவர்களுக்கும் உகந்த இடம் ஆகும்.

சதுரகிரி மலை பல அற்புத மூலிகைகளின் பிறப்பிடமாக உள்ளது. முறிந்த எலும்பை கூட வைக்கும் திறன் கொண்ட மூலிகை இலை இங்கு உள்ளதாம். முறிந்த எலும்புகளை ஒன்று கூட்டி, அந்த மூலிகை இலையை வைத்துக் கட்டினால் அதிசயிக்கத்தக்க வகையில் எலும்பு கூடி விடுமாம். பூமியில் எங்கும் காணக் கிடைக்காத ஜோதி விருட்சம், சாயா விருட்சம் போன்ற அதி அற்புதமான மரங்கள் இங்குள்ளன. இறவாமை அளிக்கக்கூடிய கருநெல்லி போன்ற அரிய கனி வகைகளும் இருக்கின்றனவாம்.

அதுமட்டுமல்லாமல் இந்த மலையில் தூய்மையான அருவிநீர் உள்ளது. அதனால் இந்த சதுரகிரி மலையில் பாதயாத்திரை மேற்கொண்டு இங்கிருக்கும் தீர்த்தங்களில் நீராடி, சிவபெருமானை வழிபடுவதால் எப்பேர்ப்பட்ட உடல்நலக்குறைபாடுகளும் நீங்குவதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

ஒவ்வொரு பௌர்ணமி அன்றும் முக்கியமாக சித்ரா பௌர்ணமி அன்றும் பக்தர்கள் இந்த மலைக்கு பாதயாத்திரை மற்றும் கிரிவலம் வந்து சிவனை வழிபடுகின்றனர். திருமணம், குழந்தை பேறு, நோய்கள் நீங்க, தொழில் முன்னேற்றம் போன்றவைகள் நிறைவேற சதுரகிரி யாத்திரை சிறந்தது என்று கூறுகிறார்கள். இன்றும் சதுரகிரி மலையில் விலங்குகள், பறவைகள் வடிவிலும் மற்றும் அருவமாகவும் சித்தர்கள் வாழ்ந்து கொண்டிருப்பதாகவும் அங்கு சென்று வழிபடும் போது அனைத்து சித்தர்களின் ஆசிர்வாதம் நமக்கு கிடைக்கிறது என்பது ஐதீகம்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...