என்னது இந்தப் பாடகர் அரச பரம்பரையைச் சேர்ந்தவரா? துளியும் பந்தா இல்லாமல் எவர்கிரீன் ஹிட்ஸ் கொடுத்த ஜெயச்சந்திரன்!

எஸ்.பி.பியும், யேசுதாசும் தென்னிந்திய சினிமாவையே கலக்கிக் கொண்டிருந்த காலகட்டம் அது. திடீரென ஒரு பாடல் வானொலியில் இடைவிடமால் ஒலித்தது. எப்போது பார்த்தாலும் இந்தப்பாட்டையே ரசிகர்கள் ஆவலுடன் கேட்டுக் கொண்டிருந்தனர். ஆம்..! எஸ்.பி.பி, யேசுதாஸ் இவர்கள் இருவரின் காம்போவையும் இணைந்த ஒரு பாடகர் கிடைத்தால் ரசிகர்கள் சும்மா விடுவார்களா? அள்ளிக் கொண்டது தமிழ் சினிமா, அந்தப் பாடகர்தான் ஜெயச்சந்திரன்.

இவரின் அப்பா மிகப்பெரிய இசைக்கலைஞர். கொச்சி அரச பரம்பரையைச் சேர்ந்தவர். ஆனாலும் எளிமையாகத்தான் வாழ்ந்தார்கள். அதேபோன்றே ஜெயச்சந்திரனையும் எளிமையாகவே வளர்த்தார்கள்.

பாடகர் ஆகும் ஆசையில் சென்னைக்கு வந்தார். அவருக்குள் இரண்டறக் கலந்திருந்த குரலின் மீது அசைக்கமுடியாத நம்பிக்கை இருந்தது.

1965-ம் ஆண்டு, போருக்கு நிதிதிரட்டும் நிகழ்ச்சி நடந்தது. இதில் மெய்யுருகப் பாடினார். இந்தப் பாடலை இந்தியாவின் ஒளிப்பதிவு மேதை என்று போற்றப்பட்டவரும் இயக்குநர் ஸ்ரீதரின் ஆஸ்தான ஒளிப்பதிவாளருமான ஏ.வின்சென்ட், தயாரிப்பாளர் ஆர்.எஸ்.பிரபு இருவரும் கேட்டார்கள். உடனே ஜெயச்சந்திரனை அழைத்து கைகுலுக்கினார்கள். தோள் தட்டிப் பாராட்டினார்கள். ’குஞ்சாலி மரக்கார்’ எனும் படத்துக்கு பாடவைத்தார்கள். இதுவே அவருக்கு முதல் படம்; முதல் பாட்டு!

அதன்பின் மெல்லிசை மன்னர் எம்.எஸ் விஸ்வநாதன் ’மூன்று முடிச்சு’ படத்தில் பாட வாய்ப்பு வழங்கினார். இன்றைக்கும் ‘வசந்தகால நதிகளிலே வைரமணி நீரலைகள்’ என்ற பாடல் எப்போது கேட்டாலும் தனி சுகம் தரும்.
பின்னாளில் 1970களின் மத்தியில் வந்த இளையராஜா, எஸ்பி.முத்துராமன் இயக்கத்தில் ‘காற்றினிலே வரும் கீதம்’ என்ற படத்துக்கு இசையமைத்தார். ‘சித்திரச்செவ்வானம் சிரிக்கக் கண்டேன்’ என்ற பாடலை வழங்கினார். இந்தப் பாடல்தான் ஜெயச்சந்திரனுக்கு நல்ல அடையாளத்தைக் கொடுத்தது. வானொலிப் பெட்டிகளை இந்தப் பாடல் ரீங்காரமிட தொடர்ந்து பாரதிராஜாவின் ‘கிழக்கே போகும் ரயில்’ படத்தில், ‘மாஞ்சோலைக் கிளிதானோ மான்தானோ வேப்பந்தோப்புக்குயிலும் நீதானோ’ என்ற பாடலில் தன்னை இசையுலகில் நிலை நிறுத்தினார் ஜெயச்சந்திரன்.

டி.ராஜேந்தருக்கு முதன்முதலாக இசையமைத்த ‘ஒருதலை ராகம்’ படத்திலேயே, ‘கடவுள் வாழும் கோயிலிலே கற்பூரதீபம்’ என்ற பாடலைக் கொடுக்க தனது குரலால் அனைவரையும் கரைய வைத்தார். பின் ‘இரயில் பயணங்களில்’ படத்தில், ’வசந்தகாலங்கள் இசைந்து பாடுங்கள்’ என்ற பாடலில் மாயாஜாலம் நிகழ்த்தினார் ஜெயச்சந்திரன்.

விஜயகாந்த் பட பாடலால் புகழின் வெளிச்சத்துக்கு வந்த பாடகி.. இவரது மகளா?

இளையராஜா ‘’எங்கிட்ட அஞ்சு டியூன் இருக்கு. அதை தனித்தனியா தரமாட்டேன். மொத்தமா ஒரே படத்துக்குத்தான் தருவேன்’’ என்று இளையராஜா, நீண்டநாட்களாக அந்த ஐந்து டியூன்களை அடைகாத்து வைத்திருக்க, ஆர்.சுந்தர்ராஜன், அந்த டியூன்களைத் தட்டிக்கொண்டு செல்லவேண்டும் என்று ‘வைதேகி காத்திருந்தாள்’ உருவாக்கினார்.

ராசாத்தி உன்னைக் காணாத நெஞ்சு காத்தாடி போலாடுது’ என்கிற பாடல், காதலர்களின் ஏக்கப் பாடல். ‘காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதம்மா’ என்பது காதலின் துக்கப்பாடல். ‘இன்றைக்கு ஏனிந்த ஆனந்தமே இன்பத்தில் ஆடுது என் மனமே’ என்கிற பாடல், காதலின் குதூகலம் உணர்த்திய பாடல். இந்த மூன்று பாடல்களும் முக்கனிச்சுவை. இந்த முக்கனிகளையும் தனது குரலால் அள்ளினார் ஜெயச்சந்திரன்.

தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் கிட்டத்தட்ட 10,000க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடிய ஜெயச்சந்திரன் இரண்டு தேசிய விருதுகளுக்கும் சொந்தக்காரர் ஆவார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.