அதிகரிக்கும் ஆன்லைன் மோசடி.. ஒருவருக்கு ஒரு சிம்கார்டு விதி வருகிறதா?

நாளுக்கு நாள் ஆன்லைன் மோசடிகள் அதிகரித்துக் கொண்டு வரும் நிலையில் சைபர் கிரைம் கூட சில மோசடிகளை கண்டுபிடிக்க முடியவில்லை என்றும் அதனால் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு மட்டும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது என்பதும் தெரிந்தது. இந்த நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு ஆன்லைன் மோசடிகளை கட்டுப்படுத்த ஒருவருக்கு ஒரு சிம்கார்டு என்ற விதியை வரையறுக்குமாறு உச்சநீதிமன்றம் பரிந்துரை செய்திருந்த நிலையில் தற்போது இது குறித்து ஆய்வுகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

பெரும்பாலான ஆன்லைன் மோசடிகள் செல்போன்  மூலம் நடக்கிறது என்பதும், நினைத்த நேரத்தில் நினைத்த பெயரில் எத்தனை சிம் கார்டு வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ளலாம் என்ற நிலை இருப்பது தான் இந்த பிரச்சனைக்கு காரணம் என்றும் கூறப்படுகிறது. ஒருவர் தன் பெயரில் எத்தனை சிம் கார்டு வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ளலாம் என்ற நிலையை மாற்ற வேண்டும் என்று பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றம் பரிந்துரை செய்த நிலையில் உச்சநீதிமன்றமும் இதனை உறுதி செய்துள்ளது.

ஆன்லைன் மோசடி, சோசியல் மீடியாவில் போலியான லைக் மற்றும் கமெண்ட் உள்பட பல்வேறு ஏமாற்று செயல்கள் சிம்கார்டு மூலமாக தான் வருகிறது என்றும் ஒரு ஆன்லைன் மோசடி செய்த பின்னர் அந்த சிம்கார்டை தூக்கி போட்டுவிட்டு அடுத்த சிம்கார்டை பயன்படுத்த தொடங்குவதால் குற்றங்கள் கண்டுபிடிக்க முடியாத நிலை ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது.

ஆதார் எண்ணை ஆதாரமாக காட்டி பயோமெட்ரிக் பரிசோதனைகளை முடித்த பிறகு ஒருவர் சிம்கார்டு வாங்க முடியும் என்ற கட்டுப்பாடு தற்போது இருந்தாலும், ஆதாருடன் இணைக்கப்பட்ட செல்போன் எண்ணுக்கு வரும் ஓடிபி கொடுத்தால் மட்டுமே சிம்கார்டு வாங்க முடியும் என்ற பாதுகாப்பு இருந்தாலும் ஒரே பெயரில் பல சிம்கார்டுகள் வாங்குவதை தடுக்க முடியவில்லை என்றுதான் கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தற்போது ஒரு நபர் தனது பெயரில் அதிகபட்சமாக 9 சிம்கார்டுகள் வாங்க முடியும் என்ற நிலை இருக்கும் நிலையில் இதனை மாற்றி ஒருவருக்கு ஒரு சிம் கார்டு மட்டுமே வாங்க முடியும் என்ற விதியை மத்திய அரசு ஏற்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வருகிறது.

ஒருவர் ஒரு புதிய சிம்கார்டு வாங்கும் போது தனது பெயரில் இதற்கு முன் சிம்கார்டு இருக்கிறதா என்பதை தெரிவிக்க வேண்டும் என்ற விதி இருந்தாலும் இந்த விதிகள் பின்பற்றப்படுவது இல்லை என்றும் ஒருவர் தன் பெயரில் இருக்கும் அனைத்து சிம்கார்டுகளையும் ஆதார் எண்ணுடன் இணைப்பது, வங்கி கணக்குடன் இணைப்பது போன்ற கட்டாயம் இல்லை என்றும் ஒரு சிம்கார்டு எண்ணை மட்டும் இணைத்தால் போதும் என்ற நிலைதான் தற்போது இருப்பதால் பல முறைகேடுகள் நடந்து வருவதாகவும் கூறப்பட்டு வருகிறது.

எனவே உச்ச நீதிமன்றம் கொடுத்த பரிந்துரையை மத்திய அரசு ஏற்றுக்கொண்டு விரைவில் தொலைத்தொடர்புத்துறை சட்டத்தில் ஒருவருக்கு ஒரு சிம் கார்டு என்ற விதியை அமல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வருகிறது. ஒருவருக்கு ஒரு சிம் கார்டு என்ற விதி அமல்படுத்தப்பட்டால் ஆன்லைன் மூலம் நடக்கும் மோசடிகள் பெரும்பாலும் குறையும் என்று தொலைதொடர்பு வல்லுனர்களும் கூறி வருகின்றனர்.

பொதுமக்கள் தரப்பில் இது குறித்து கருத்து கேட்டபோது ஒருவருக்கு ஒரு சிம் கார்டு என்பது ஆன்லைன் மோசடியை குறைக்கும் என்பது உண்மைதான் என்றாலும் குறைந்தபட்சம் ஒருவருக்கு இரண்டு சிம் கார்டுகளை வாங்க அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர். இது குறித்து மத்திய அரசு என்ன முடிவு எடுக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...