அன்பே வா படத்துக்கு வந்த சிக்கல்..பாட்டில் இருந்த அந்த ஓர் வார்த்தை.. சென்சார் போட்ட கத்தரி..

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் ஏவிஎம் நிறுவனத்தின் தயாரிப்பில் நடித்த ஒரே படம் என்ற சிறப்பைப் பெற்றது அன்பே வா திரைப்படம். 1966-ல் வெளியான இத்திரைப்படம் வழக்கமான எம்.ஜி.ஆர் படங்களின் பார்முலாவினை உடைத்து ஜாலியான பொழுதுபோக்குத் திரைப்படமாக வெளிவந்தது. ஹாலிவுட்டில் வெளியான Come September திரைப்படத்தின் தழுவல்தான் இந்த அன்பே வா திரைப்படம். எம்.ஜி.ஆருடன் சரோஜாதேவி, நாகேஷ், டி.ஆர்.ராமச்சந்திரன், அசோகன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

பாடல்களுக்காகவும், இயற்கை எழில் சூழ்ந்த காட்சிகளுக்காகவும் படம் பாராட்டைப் பெற்றது. வசூலிலும் சக்கைப் போடு போட்டது. குறிப்பாக ராஜாவின் பார்வை, புதிய வானம் போன்ற பாடல்கள் இன்றும் காலத்தால் அழியாத காவியப் பாடல்களாகத் திகழ்கின்றன. அன்பே வா திரைப்படத்தில் இடம்பெற்ற புதிய வானம்.. புதிய பூமி பாடல் தணிக்கைக் குழுவில் ஒரு சிக்கலைச் சந்தித்தது.

இப்படத்தின் இயக்குநர் ஏ.பி.நாகராஜிடம் ஏவிஎம் சரவணன், குமரன் ஆகியோர் எம்.எஸ்.வி இசையில் வாலி எழுதிய பாடலை கொண்டு போய் காட்ட, அவர் செட்டியார் கேட்டுவிட்டார் அல்லவா அவருக்குத் திருப்தி என்றால் எனக்கும் ஓகே என்று கூறி கடைசிவரை பாடலைக் கேட்கவே இல்லை.

இந்நிலையில் படத்தின் அனைத்துப் பணிகளும் முடிந்து தணிக்கைக்குச் சென்ற போது தணிக்கை அதிகாரிகள் படத்தினைப் பார்த்துள்ளனர். அப்போது ஓப்பனிங் பாடலான புதிய வானம்.. புதிய பூமி எங்கும் பனிமழை பொழிகிறது பாடலில் சரணத்தில் இடம்பெற்ற ஒரு இடத்தில் உதய சூரியனின் பார்வையிலே.. என்ற வரிகள் இருந்தது.

அப்பாவின் வழியில் செல்லத் தயாராகும் ஹிப் ஹாப் ஆதி.. PT சார் எடுத்த அந்த திடீர் முடிவு

இதனைக் கவனித்த அந்த சென்சார் அதிகாரி இந்த வரிகளை நீக்குங்கள் என்று கூறியிருக்கிறார். இது நீங்கள் திட்டமிட்டு எடுத்ததா அல்லது இயல்பாக அமைந்ததா என்று கேட்க, படக்குழுவினரும் இயல்பாக அமைந்தது தான் என்று கூறியிருக்கின்றனர்.

அப்போது தணிக்கை அதிகாரி இந்த வரிகளை நீக்குங்கள் அல்லது அந்தக் காட்சியை நீக்குங்கள் என்று கூற, படக்குழுவினர் எவ்வளவோ கேட்டும் அதை தணிக்கை அதிகாரி ஏற்க மறுத்தார். பின் அங்கே வந்திருந்த கவிஞர் வாலியை அழைத்து இந்த வரிகளுக்குப் பதிலாக வேறு வரிகளைக் கேட்க, உதய சூரியன் என்ற இடத்தில் புதிய சூரியன் என்று வார்த்தையை மாற்றி எழுதி தணிக்கை அதிகாரியிடம் காட்ட பின்னர் அவர் எந்த மறுப்பும் சொல்லாமல் ஓகே சொல்லியிருக்கிறார்.

இப்படித்தான் இந்தப் பாடல் உருவானது. இப்பாடலை டி.எம்.சௌந்தர்ராஜன் பாடியிருப்பார். அந்தக் காலத்தில் அன்பே வா திரைப்படம் எம்.ஜி.ஆர் சரோஜா தேவியின் திரை வரலாற்றில் மற்றொரு மைல்கல்லாக விளங்கியது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews