வீட்டுக் கடன் வாங்கியவர்கள் வருமான வரி கணக்கு தாக்கல் செய்யும் போது கூடுதல் வரி விலக்கு பெறுவது எப்படி?

சென்னை: Home Loan ON Income Tax : வீட்டுக் கடன் வாங்கியவர்கள் வருமான வரி கணக்கு தாக்கல் செய்யும் போது கூடுதல் வரி விலக்கு பெறுவது எப்படி என்பது குறித்து பிரபல பொருளாதார வல்லுநர் கே ராஜேஷ் விளக்கம் அளித்துள்ளார்.

நம்மில் பலருக்கும் வீடு கட்ட வேண்டும் என்பது கனவாக இருக்கும். ஆனால் இன்றைய பொருளாதார சூழலில் அதற்கு வாய்ப்புகள் குறைவாகி கொண்டே வருகிறது. அதே நேரம் வீடு கட்ட வேண்டும் என்று ஆசைப்படுவோர் வங்கி கடன் வாங்கி வீடு கட்டலாம். ஏனெனில் நம் நாட்டு மக்களின் பொருளாதார சூழலை உணர்ந்துதான் மத்திய அரசு, வீட்டுக்கடன் வாங்கியவர்களுக்கு வருமான வரிச்சலுகை அளிக்கிறது. பலர் வருமான வரி சேமிப்புக்காகவே வீடு வாங்கினார்கள். அடுக்குமாடி குடியிருப்புகளை வாங்கிப்போட்டார்கள். முதல் தலைமுறை பணக்காரர்கள் பலர் வீடு வாங்கவும், வருமான வரியை சேமிக்கவும் வீட்டுக்கடன் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் வீட்டு கடன் வாங்கியவர்கள் வருமான வரி கணக்கு தாக்கல் செய்யும் போது, அதிகபட்சமான வருமான வரி விலக்கு பெறுவது எப்படி என்று பிரபல பொருளாதார நிபுணர் கே ராஜேஷ் விளக்கியுள்ளார். வீட்டுக்கடன் வாங்கியவர்கள் வருமான வரி பிரிவில் கணக்கு தாக்கல் செய்யும் போது, ஐடிஆர் 2ஐ தேர்வு செய்தால் கணிசமான வரியைச் சேமிக்க முடியும் என்று கூறியுள்ளார்.

பிரபல பொருளாதார நிபுணர் கே ராஜேஷ் வெளியிட்ட எக்ஸ் தள பதிவில் “வீட்டுக் கடன்- வருமானவரி விலக்கு.. புதிதாக வீட்டுக்கடன் வாங்கியோர் கவனத்திற்கு.. உங்களது வீட்டுக்கடனுக்கு, நீங்கள் கட்டும் வரியானது, முதல் ஐந்து வருடங்களுக்கு ரூ.2,00,000 க்கு மேல் கண்டிப்பாக இருக்கும். இருந்தாலும், வீட்டுக்கடனுக்கான வருமான வரி விலக்கு, Section 24 ன் கீழ், வெறும் ₹2,00,000 மட்டுமே கிடைக்கும். பாக்கி, நீங்கள் கட்டிய வரிக்கு விலக்கு கோரலாம்.

வீட்டுக்கடன் வருமான வரி விலக்கு கோருவது எப்படி? நீங்கள் வருமானம் வரிப் படிவத்தை தேர்வு செய்கையில், ITR2 ஐ தேர்வு செய்து, “Income from House Property” யின் கீழ், உங்களது முழு வட்டியையும் குறிப்பிட்டு, இரண்டு லட்சத்திற்கு மேலுள்ள அனைத்தையும், நஷ்டமாக காண்பித்து, அடுத்த வருடத்திற்கு carry over செய்யலாம்.

அடுத்த வருடத்தில் இருந்து, இந்த நஷ்டத்தையும் சேர்த்து, உங்களுக்கு அதிக வரிவிலக்கு பெறுவதற்கான வாய்ப்பு உண்டு. இந்த முறையை பயன்படுத்தி, அதிக வரியை, வருடா வருடம் சேமியுங்கள். சேமித்த வரியினை முதலீடு செய்து பயனடையுங்கள்” என்று அவர் பதிவிட்டுள்ளார்.

வருமான வரி தாக்கல் செய்வது தொடர்பாக சந்தேகம் இருந்தால், உங்கள் ஆடிட்டர்கள், உங்கள் நிறுவன ஹெச்ஆர்களிடம் ஆலோசனை பெறலாம். வருமான வரி தொடர்பாக முதலீடு செய்ய விரும்பினால் பொருளாதா நிபுணர்களிடம் ஆலோசனை பெற்று முடிவு செய்யுங்கள். பழைய முறைப்படி 12 லட்சம் வரை கூட வருமான வரி விலக்கு பெற முடியும். 3.5 லட்சத்திற்கு மேல் வரிமான வரி விலக்கு வேண்டும் என்றால் தாராளமாக பொருளதார ஆலோசகர்களின் உதவியை நீங்கள் நாடலாம்.

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...