தஞ்சாவூர் புகழ் திருவையாறு அல்வா எனப்படும் அசோகா அல்வா உருவானது இப்படித்தான்…

அல்வா என்றாலே நமக்கு நியாபகம் வருவது திருநெல்வேலி அல்வா தான். ஆனால் அதே போல் பிரபலமானது தான் தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறில் உருவான திருவையாறு அல்வா எனப்படும் அசோகா அல்வா. பாசிப்பருப்பை பிரதானமாக கொண்டு செய்யப்படும் இந்த அல்வா அவ்வளவு சுவையாக இருக்கும்.

திருவையாறில் அமைந்திருக்கும் ஆண்டவர் அல்வா கடை கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக பாரம்பரியமான மற்றும் சுவையான அசோகா அல்வாவை விற்பனை செய்து வருகின்றனர். சூடான அசோகா அல்வாவை வாழை இலையில் வைத்து அதன் சுவையை கூட்டுவதற்காக சிறிது மிக்சரையும் வைத்துக் கொடுக்கின்றனர். இது கோதுமை அல்வாவிலிருந்து மிகவும் வித்தியாசமானது.

ஆண்டவர் அல்வா கடையின் உரிமையாளரான ராமு ஐயர் என்பவர் தான் முதன் முதலாக 50 ஆண்டுகளுக்கு முன்பு அசோகா அல்வாவை தயாரித்து விற்பனை செய்ய ஆரம்பித்தார். அதே கைப்பக்குவதில் இன்றளவும் தொடர்ந்து அந்த கடையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இது அல்வாக்களின் அரசன் என்று கருதப்படுவதால் இதற்கு அசோகா அல்வா என்று பெயரிடப்பட்டதாக கூறுகிறார்கள்.

சாதாரண விலையில் நல்ல ருசியான அல்வாவிற்கு சிறந்த இடம் என்றால் அது ஆண்டவர் அல்வா கடைதான். மேலும் கோதுமை அல்வா, காரசேவ், மிக்சர் மற்றும் ஓமப்பொடி ஆகியவற்றையும் விற்பனை செய்கிறார்கள். இந்த அசோக அல்வா தஞ்சாவூர் வட்டாரத்தில் பிரபலமானது மற்றும் இது பாரம்பரியமாக தஞ்சாவூர் மாவட்டத்தின் டெல்டா பகுதியில் உள்ள விழாக்களில் முக்கியமாக திருமண விழாக்களில் பரிமாறப்படுகிறது.

வரலாற்று ரீதியாக பார்க்கும் பொழுது, இரண்டாம் உலகப் போரின் போது அசல் அல்வாவின் முக்கிய மூலப்பொருளான கோதுமைக்கு தட்டுப்பாடு இருந்ததாகவும் ,அதனால் தஞ்சாவூரில் உள்ள மக்கள் அத்தகைய அல்வாவை உருவாக்க மாற்று வழிகளைத் தேடி பின்னர் அவர்கள் பாசி பருப்பை வைத்து உருவாக்கியதாகவும் கூறுகிறார்கள். அசோகா அல்வாவின் சுவை பொதுவாக பிரபலமான வட இந்திய மூங் தால் அல்வாவிலிருந்து முற்றிலும் வேறுபட்டது ஆகும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews