நம்ம கட்டிய இன்சூரன்ஸ் வெறும் 45 பைசா தான்.. ஆனால் பல கோடி ரூபாய் சம்பாதித்த இந்திய ரயில்வே

டெல்லி: நாம் கட்டியது இன்சூரன்ஸ் தொகையாக வெறும் 45 பைசா மட்டுமே.. ஆனால் இந்திய ரயில்வே பல கோடி ரூபாய் வருவாய் சம்பாதித்துள்ளது. காப்பீடு நிறுவனங்கள் நல்ல கல்லா கட்டியுள்ளன.

ஒவ்வொரு ரயில் டிக்கெட் வாங்கும்போதும் இன்சூரன்ஸ்கான பணம் சேர்த்து வாங்கப்படுவது வழக்கமாகும். ரயில் பயணத்தின் போது ஏதாவது அசம்பாவிதங்கள் நிகழ்ந்தால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்துக்கு இழப்பீடு தருவதற்காக இன்சூரன்ஸ் வசூலிக்கப்படுகிறது.

அப்படி இன்சூரன்ஸ் தொகையாக ஒவ்வொரு டிக்கெட்டிலும் 45 பைசா பிரீமியமாக ஐஆர்சிடிசி வசூலிக்கிறது. இந்த 45 பைசா இன்சூரன்ஸ்க்கு கட்டினால், ரயிலில் செல்லும் போது ஏதாவது அசம்பாவிதம் நடந்தால், 10 லட்சம் ரூபாய் இழப்பீடு கிடைக்கும். பல இன்சூரன்ஸ் நிறுவனங்கள் இணைந்து இந்த காப்பீடு வசதிகளை ஐஆர்சிடிசி மூலம் செய்து தருகின்றன. விபத்துகள் நடந்தால் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் ரயில் பயணிகளுக்கு இழப்பீடை தருகின்றன.

ரயில் இன்சூரன்ஸ் மூலம் ரயில் விபத்தில் இறந்தவர்கள் குடும்பத்துக்கு ரூ.10 லட்சமும், பகுதி செயலிழப்புக்கு ரூ.7.5 லட்சமும், ரூ.2 லட்சம் மருத்துவமனை செலவுகளுக்காகவும் தரப்படும். ரயில் காப்பீடு மூலம் எந்த அளவிற்கு காப்பீடு நிறுவனங்களும் ரயில்வேயும் சம்பாதித்துள்ளன என்பது பற்றி பார்ப்போம்.

இது தொடர்பான புள்ளி விவரம் ஒன்று வெளியாகி உள்ளது. இதன்படி 2016-17 நிதியாண்டில் பயணிகளின் இன்சூரன்ஸுக்காக 11 கோடி ரூபாயை காப்பீடு நிறுவனங்கள் பெற்றுள்ளன. அதில் 76 லட்சம் மட்டுமே காப்பீடு தொகையாக தந்துள்ளன.

2017-18 நிதியாண்டில் இன்சூரன்ஸ் பிரீமியமாக ரூ.38.54 கோடி வழங்கப்பட்ட நிலையில், ரூ.3.59 கோடி மட்டுமே இழப்பீடாக தரப்பட்டுள்ளது. இந்த ஆண்டில் பயணிகளிடமிருந்து பிரீமியம் பெறப்படவில்லை. அதை ஐஆர்சிடிசியே செலுத்தியது.

எனினும் 2018-19 நிதியாண்டில் பயணிகளிடமிருந்து ரூ.8.53 கோடி இன்சூரன்ஸ் பிரீமியம் வசூலிக்கப்பட்டுள்ளது. அதில் அந்த ஆண்டு ரூ.6.12 கோடி இழப்பீடாகத் தரப்பட்டது. 2019-20 நிதியாண்டில் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் ரூ.12.71 கோடி பிரீமியம் பெற்றன. இதில் ரூ.3.53 கோடி இழப்பீடாகத் தரப்பட்டிருக்கிறது. .

மொத்தத்தில் ரயில் இன்சூரன்ஸுக்காக 45 பைசாக்களை வசூலிக்கும் இந்திய ரயில்வே இதுவரை பல கோடி ரூபாய் வருமானமாக ஈட்டி உள்ளது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews