அந்த சீன் வேணாம்.. மாமன்னன் ரிலீஸ் வரை.. பகத், மாரிக்கு நடுவே இருந்த சண்டை.. முடிவுக்கு வந்தது எப்படி..

பரியேறும் பெருமாள் என்ற அறிமுக திரைப்படத்திலேயே தன்னை ஒரு சிறந்த இயக்குனராக முன்னிறுத்தியவர் மாரி செல்வராஜ். இயக்குனர் ராமிடம் ஆபீஸ் பாயாக இருந்து பின்னர் மெல்ல மெல்ல கதையில் கவனம் செலுத்தி திறனை வளர்த்தியுதுடன் பா. ரஞ்சித் தயாரிப்பின் மூலம் தனது இயக்குனர் கனவையும் நிஜமாக்கினார் மாரி செல்வராஜ்.

தமிழ் சினிமாவில் அரிதாக பேசப்பட்டு வந்த சாதி பிரச்சனைகளை மிக துணிச்சலாக தனது கதையில் சொல்லிய மாரி செல்வராஜ், கதிர் மற்றும் கயல் ஆனந்தி ஆகியோர் மூலம் மிக இயல்பான கதைக் களத்தை நிறைய வலிகளுடன் செதுக்கி இருந்தார்.

முதல் திரைப்படமே சிறந்த இயக்குனர் என்ற அந்தஸ்தை பெற்றுக் கொடுக்க மாரி செல்வராஜ் அடுத்து இயக்க போகும் படம் எதுவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பும் எழுந்து விட்டது. இதனிடையே, கர்ணன் என்ற திரைப்படத்தில் மற்றொரு சமுதாய பிரச்சனையை களமாக எடுத்து தனுஷ் மூலம் இன்னும் சத்தமாக எடுத்துரைத்தார் மாரி செல்வராஜ்.

இப்படி மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான 2 திரைப்படங்களும் மிக பெரிய அதிர்வலைகளையும், தாக்கத்தையும் தமிழ் சினிமாவில் ஏற்படுத்த, தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் நடித்த மாமன்னன் என்ற திரைப்படத்தையும் இயக்கி இருந்தார். எப்போதும் காமெடி கதைக் களத்தில் நிறைய நடித்திருந்த வடிவேலுவை அப்படியே வேறொரு பரிமாணத்தில், ஒரு குணச்சித்திர நடிகராக மாமன்னன் படத்தில் மாற்றி இருந்தார் மாரி செல்வராஜ்.

மேலும் உதயநிதி, வடிவேலு ஆகியோருடன் பகத் பாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். இதில் பகத் பாசிலின் வில்லத்தனமான நடிப்பு, பார்க்கும் அனைவருக்குமே ஒருவித வெறுப்பை உருவாக்கும் சூழலில், ஊர் பக்கம் இருக்கும் அரசியல்வாதியாகவே மாறி இருப்பார். மேலும் இந்த திரைப்படத்தில் பகத் பாசிலின் வில்லத்தனத்தை பிரதிபலிக்க நாய் ஒன்றை கொடூரமாக அவர் அடித்து கொல்லும் காட்சியை படத்தில் வைத்திருப்பார் மாரி செல்வராஜ்.

இந்த நிலையில், இதன் பின்னணி பற்றி நடிகர் பகத் பாசில் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். “ரத்னவேலு என்ற கதாபத்திரத்தின் வில்லத்தனத்தை பிரதிபலிக்க மாமன்னன் படத்தில் வரும் மற்ற காட்சிகளே போதும். இதனால், நாயை கொடூரமாக நான் தாக்கி கொலை செய்யும் காட்சியை படத்தில் வைக்க வேண்டாம் என மாமன்னன் ரிலீசுக்கு முன்பு வரை நானும், மாரி செல்வராஜும் சண்டை போட்டு கொண்டே இருந்தோம்.

ஆனால் அவர் அந்த காட்சியை வைத்தே தீர வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். அது இல்லை என்றாலும் ரத்னவேலு யார் என்பதை சொல்ல முடியும் என நான் சொல்லி பார்த்தும் அவர் கேட்கவில்லை. அவர் ஒரு எடிட் கட் வைத்திருந்ததால் அந்த காட்சியை வைத்தே தீர வேண்டுமென முடிவாக இருந்தார். எனக்கு நாயை துன்புறுத்தும் காட்சி மீது கொஞ்சம் கூட விருப்பமில்லை” என கூறி இருந்தார் பகத் பாசில்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews