பாலச்சந்தருக்கு தெரியாம போச்சே.. 50 வயதுக்கு பிறகு நடிக்க வந்த இயக்குனர் சிகரத்தின் மருமகள்.. மாமன்னன் படத்துல நடிச்சவங்களா?

இயக்குனர் சிகரம் கே பாலச்சந்தர் நூறு படங்களுக்கு மேல் இயக்கி சாதனை செய்தவர் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம். அதே போல, அவர் பல புதுமுக நட்சத்திரங்களை அறிமுகப்படுத்தி உள்ளார் என்பதுடன், ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகிய இருவருக்குமே குருவாக ஒரு காலத்தில் விளங்கியவர் என்பதும் எல்லோருக்கும் தெரிந்த தகவல் தான்.

இப்படி பலரும் முன்னணி நட்சத்திரமாக மாற காரணமாக இருந்த பாலச்சந்தரின் வீட்டுக்குள்ளேயே ஒரு மிகப்பெரிய நடிகை இருந்திருக்கிறார் என்பதை அவரால் கண்டுபிடிக்க முடியவில்லை. அவர் தான் கீதா கைலாசம். பாலச்சந்தரின் மருமகளான கீதா கைலாசம், பாலச்சந்தர் இயக்கத்தில் உருவான தொலைக்காட்சி தொடர்களின் தயாரிப்பு நிறுவனமான மின் பிம்பங்கள் நிறுவனத்தின் நிர்வாகியாக இருந்தார்.

இந்நிறுவனத்தின் கணக்கு வழக்குகளை பார்ப்பதோடு, பாலச்சந்தரின் தொடர்களில் நடிக்க வரும் நட்சத்திரங்களுக்கு கதை சொல்வது மற்றும் அவர்களுக்கு நடிப்பை சொல்லிக் கொடுப்பது ஆகிய பணிகளை செய்து வந்தார். அவருக்கு சிறுவயதிலிருந்தே நடிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தாலும் மற்ற பணிகளில் பிஸியாக இருந்ததால் அவர் தனது ஆசையை வெளிப்படுத்தவே இல்லை.

குறிப்பாக பாலசந்தரிடம் அவர் ஒரு வார்த்தை சொல்லி இருந்தால் பல படங்களில் அவரை நடிக்க வைத்திருப்பார். இந்த நிலையில் தான் கீதா கைலாசம் அவர்களின் கணவர் மறைந்த பிறகு அவர் என்ன செய்வது என்று தெரியாமல் இருந்தார். அப்போதுதான் தனது சிறுவயது நடிப்பு ஆசையை நிறைவேற்றிக் கொள்ள முடிவு செய்தார்.

அதற்கு ஏற்றார் போல் பா ரஞ்சித் இயக்கத்தில் உருவான ’சார்பாட்டா பரம்பரை’ திரைப்படத்தில் ஒரு சில காட்சிகளில் மட்டுமே வந்து போகும் கேரக்டரில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அந்த படத்தில் பசுபதியின் மனைவியாக சில காட்சிகளில் நடித்து நடிப்பில் மிரட்டி இருப்பார் கீதா கைலாசம். இதனைத் தொடர்ந்து வீட்ல விசேஷங்க படத்தில் நடித்திருந்த நிலையில் அதில் நர்ஸ் கேரக்டரில் சில நிமிடங்களே வரும் காட்சியில் நடித்திருந்தாலும் அவரது நடிப்பு சிறப்பாக இருக்கும்.

மேலும் இந்த படத்தில் நடித்த ஊர்வசி மற்றும் சத்யராஜூடனும் நல்ல நட்பில் இருந்ததால் அவர்களுடன் நடிப்பதில் அவருக்கு எந்தவிதமான பிரச்சனையும் இல்லாமல் இருந்தது. இதனை அடுத்து அவர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்த ’மாமன்னன்’ திரைப்படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்தார்.  இதையடுத்து அவருக்கு தொடர்ச்சியாக சில படங்களில் நடிக்க வாய்ப்பு வந்து கொண்டிருப்பதாக பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

மின் பிம்பங்கள் தயாரிப்பு நிறுவனத்தால் உருவான ரமணி வெர்சஸ் ரமணி, மர்மதேசம் உள்ளிட்ட சீரியல்களில் கீதாவின் உழைப்பு அதிகம். திரைக்குப் பின்னால் நீண்ட காலம் அனுபவம் இருந்ததால் அவருக்கு திரைக்கு முன்னால் நடிப்பதிலும் பெரிய சிரமம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. வெந்து தணிந்தது காடு திரைப்படத்திலும் சின்ன கதாபாத்திரத்தில் கீதா கைலாசம் நடித்திருந்த நிலையில், பல நட்சத்திரங்களை உருவாக்க்கிய பாலச்சந்தர் வீட்டிலேயே ஒரு நடிகை 50 வயதுக்கு மேல் அறிமுகமாகி இருந்தது பலருக்கும் ஆச்சரியமான விஷயம் தான்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews