ஒரே சமயத்தில் வெளியான தேவயானியின் நான்கு படங்கள்.. அதுல எத்தனை படங்கள் ஹிட்டுன்னு தெரியுமா?

பொதுவாக பண்டிகை காலங்கள் வரும் போது அதனை எந்த அளவுக்கு மக்கள் கொண்டாடுகிறார்களோ அந்த அளவுக்கு அந்த சமயத்தில் ரிலீஸ் ஆகும் திரைப்படங்களையும் கூட கொண்டாடுவார்கள். கடந்த சில ஆண்டுகளாக பொங்கல், தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகளின் போது ஒரு சில படங்கள் மட்டுமே ரிலீசாகி வருகிறது.

ஆனால், அதற்கு முன்பெல்லாம் ஒரே நேரத்தில் 6 முதல் 7 படங்கள் வரை ரிலீசாகி, பண்டிகை காலத்தில் ஒட்டுமொத்த மக்களும் திரையரங்கம் வந்து அதனை திருவிழா போலவும் கொண்டாடி மகிழ்வார்கள். ஆனால், சமீப காலமாக, ஓடிடி உள்ளிட்ட தளங்களின் தாக்கத்தால் அப்படி ஒரு நிகழ்வை காண்பதே அரிதாகி விட்டது. அப்படி இருந்தும் சில முக்கியமான படங்கள் வந்தால் மக்கள் அதனை கொண்டாடவும் தவறுவதில்லை.

முன்பு ஒரே பிரபலங்களின் படங்கள் ஒரே பண்டிகை காலத்தில் வெளியாவதும் அதிகம் நிகழும் சூழலில், பிரபல நடிகை தேவயானியின் படங்களும் அப்படி வெளியானது பற்றிய செய்தியை காணலாம். தமிழ் சினிமாவின் தொண்ணூறுகளில் பிரபல நடிகையாக இருந்தவர் தான் தேவயானி. இவர் கமல்ஹாசன், விஜய், அஜித், சரத்குமார் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.

அதிலும் அஜித்துடன் அவர் நடித்திருந்த காதல் கோட்டை திரைப்படம், காலம் கடந்தும் பேசும் தமிழ் சினிமாவின் முக்கிய மைல்கல்லும் கூட. விஜய்யுடன் அவர் இணைந்து நடித்திருந்த நினைத்தேன் வந்தாய் திரைப்படமும் மக்களை வெகுவாக கவர்ந்திருந்தது. இதே போல, சரத்குமாருடன் தேவயானி இணைந்து நடித்திருந்த சூர்யவம்சம், 2 கே கிட்ஸ்களும் கூட ரசிக்கும் படைப்பாகும். அது மட்டுமில்லாமல் கமலுடன் இணைந்து அவர் நடித்த தெனாலி, பஞ்சதந்திரம் ஆகிய திரைப்படங்களில் காமெடி கதாபாத்திரத்திலும் பின்னி பெடலெடுத்திருப்பார்.

இப்படி பல சூப்பர்ஹிட் படங்களில் நடித்துள்ள தேவயானி, இயக்குனர் ராஜகுமாரனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதன் பின்னரும் தற்போது வரை திரைப்படங்கள் நடித்து வரும் தேவயானி, தனக்கான கதாபாத்திரத்திற்கு ஏற்ற வகையில் கதையை தேர்வு செய்து நடித்து வருகிறார்.

இந்த நிலையில் தான், கடந்த 1998 ஆம் ஆண்டு பொங்கல் விருந்தாக வெளியான திரைப்படங்களில் நான்கு படங்களில் நாயகியாக நடித்திருந்தார் தேவயானி. கிழக்கும் மேற்கும், மறுமலர்ச்சி, மூவேந்தர், உதவிக்கு வரலாமா என நான்கு படங்களில் தேவயானி நடித்திருந்தார். இதில் கிழக்கும் மேற்கும், மறுமலசர்ச்சி ஆகிய படங்கள் ஜனவரி 14 ஆம் தேதியும், மூவேந்தர் ஜனவரி 12 ஆம் தேதியும், உதவிக்கு வரலாமா திரைப்படம் ஜனவரி 16 ஆம் தேதியில் கடந்த 1998 ஆம் ஆண்டு வெளியாகி இருந்தது.

இதில் கிழக்கும் மேற்கும் திரைப்படத்தில் நெப்போலியனும், மறுமலர்ச்சி படத்தில் மம்மூட்டியும், உதவிக்கு வரலாமாவில் கார்த்திக்கும், மூவேந்தர் படத்தில் சரத்குமாரும் நாயகனாக நடித்திருந்தனர். இப்படி தேவயானி படத்தில் வெளியான நான்கு படங்களுமே எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியை பெற்றிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.