மோசமாக திட்டிய வடிவேலு.. எதிரியா தன்னை பார்த்த போதும் கேப்டன் விஜயகாந்த் எடுத்த அக்கறை..

தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் விஜயகாந்த் மற்றும் வடிவேலு ஆகியோர் இணைந்து நடித்திருந்தாலும் அரசியலில் விஜயகாந்த் நுழைந்த பின் இருவரும் ஏதோ எதிரிகள் போல மாறி இருந்தது பலரும் அறிந்த செய்தி தான்.

தவசி, சின்ன கவுண்டர் உள்ளிட்ட திரைப்படங்களில் விஜயகாந்த் மற்றும் வடிவேலு இணைந்து நடித்திருந்த காமெடி காட்சிகள் இன்று வரை தமிழ் சினிமாவில் எவர்க்ரீன் காமெடி காட்சிகளில் ஒன்றாகும். சினிமாவை தாண்டியும் அவர்கள் சிறந்த வகையில் நட்பு பழகி வந்த சூழலில் தான், அரசியல் களத்தில் விஜயகாந்த் குதித்த பின்னர் அனைத்தும் தலைகீழாக மாறிவிட்டது.

திமுக கட்சிக்காக பிரச்சாரம் செய்து வந்த வடிவேலு, தேமுதிக தலைவர் விஜயகாந்தை கடுமையாக பல இடங்களில் விமர்சனம் செய்து பேசி இருந்தார். நேரடியாகவே வடிவேலு விஜயகாந்தை விமர்சித்த போதிலும் இதற்கு பதில் கருத்து எதையும் கேப்டன் பேசவில்லை என்றும் தெரிகிறது. முன்னதாக, வடிவேலு சினிமாவில் நடிக்கத் தொடங்கிய காலகட்டத்தில் பல படங்களில் அவரை நடிக்க சிபாரிசு செய்தவர் விஜயகாந்த் தான். அப்படி இருந்தும் இந்த ஒரு மோதல், பெரிய அளவில் சர்ச்சைகளையும் உண்டு பண்ணி இருந்தது.

இப்படி நல்ல குணம் படைத்தவராக இருந்த விஜயகாந்த், கடந்த சில ஆண்டுகளாக உடல்நிலை சரியில்லாமல் அவதிப்பட்டு வருகிறார். சமீபத்தில் கூட மருத்துவமனையில் சில நாட்கள் சிகிச்சை முடிந்து அவர் வீடு திரும்பி இருந்தார். இதனிடையே, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக விஜயகாந்தை நேரில் சந்தித்து வடிவேலு மன்னிப்பு கேட்டதாகவும் ஒரு தகவல் தீயாய் பரவி இருந்தது.

இந்த நிலையில், விஜயகாந்த் மற்றும் வடிவேலு மோதல் இருந்த சமயத்தில் நடந்த ஒரு சம்பவம் குறித்து பிரபல காமெடி நடிகர் சாரைப்பாம்பு சுப்புராஜ் நேர்காணல் ஒன்றில் சில கருத்துக்களைத் தெரிவித்துள்ளார். “விஜயகாந்தை ஒரு சமயம் சந்தித்த போது அவர் என்னிடம், ‘வடிவேலு ஏன் இப்ப படமே நடிக்குறதில்ல. அவனை நடிக்க சொல்லுடா. அவன் காமெடி தான்டா நல்லா இருக்கு’ என என்னிடம் கூறினார். நானும் இதை அப்படியே வடிவேலுவிடம் சொல்லி விடவா என கேட்டேன்.

அவரும் சரி என சொல்ல, நான் வடிவேலுவிடம் இது பற்றி கூறினேன். அவரும் விஜயகாந்த் அண்ணன் அப்படி சொன்னாரா என என்னிடம் ஆச்சரியமாக கேட்டு தெரிந்து கொண்டார். தன்னை எதிரி போல கருதிய ஒருவரையே இப்படி நல்ல முறையில் கேட்டுக் கொண்ட விஜயகாந்தின் குணம், பலரையும் ஊக்குவிக்கும் சிறப்பம்சம் வாய்ந்ததாகும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews