இரண்டு முறை ஆரஞ்சு கேப் ஜெயிச்சும் கோலிக்கு கிடைக்காத பெருமை.. ஒரு தடவை ஜெயிச்சே ருத்துராஜ் சாதிச்சது எப்படி…

ஐபிஎல் இறுதி போட்டி நடந்து முடிந்துள்ள நிலையில் தற்போது மூன்றாவது முறையாக கோப்பையை வென்ற கொல்கத்தா அணிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதே வேளையில் ஹைதராபாத் அணி இறுதி போட்டியில் மிக பரிதாபமாக தோல்வியடைந்தாலும் இதுவரை முன்னேறியதற்கான அவர்களின் உத்வேகத்தையும் பலர் பாராட்டி வருகின்றனர்.

அப்படி இருக்கையில் தான் கடந்த 16 சீசன்களாக கோப்பையை வெல்லாமல் இருந்து வரும் பலம் வாய்ந்த அணியாகத் திகழும் ஆர்சிபி அணி, நிச்சயம் இந்த முறை இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் என்று தான் அனைவரும் கருதினர். ஆனால் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறிய ஆர்சிபி அணி, தங்களின் முதல் போட்டியிலேயே தோற்று வெளியேறி இருந்தது.

ஒருவேளை ராஜஸ்தானை வீழ்த்தி இருந்தால் நிச்சயம் அவர்கள் அதிக பலத்துடன் திகழ்ந்து இறுதிப் போட்டிக்கு கொல்கத்தா அணிக்கும் சவாலாக இருந்திருப்பார்கள் என்றும் ரசிகர்கள் ஏக்கத்துடன் குறிப்பிட்டு வந்தனர். இப்படி சென்னை, மும்பை வரிசையில் அதிக ரசிகர்களை கொண்ட பெங்களூரு அணி இதுவரை ஒரு முறை கூட ஐபிஎல் கோப்பையில் கை வைக்காமல் இருப்பது மிகப்பெரிய பரிதாபமான நிலையாக தான் பார்க்கப்படுகிறது.

அதிலும் ஒவ்வொரு சீசனிலும் புதிய வீரர்கள் இடம் பெற்று வந்தாலும் கடந்த 17 சீசன்களாக பெங்களூர் அணிக்காக மட்டுமே ஆடிவரும் விராட் கோலியை நினைத்து தான் ரசிகர்கள் அதிகம் மனம் உடைந்து போயுள்ளனர். ஒவ்வொரு முறையும் விராட் கோலி தனது பேட்டிங்கில் முழு திறனை வெளிப்படுத்தி வரும் போதிலும் மற்ற வீரர்கள் சொதப்பி வருவதால் அந்த அணியால் கோப்பையை வெல்ல முடியாமல் போய் விடுகிறது.

கடந்த 2016 ஆம் ஆண்டு விராட் கோலி 973 ரன்களை ஐபிஎல் தொடரில் அடித்திருந்த நிலையில் அந்த சீசனிலும் இறுதி போட்டியில், அவர்கள் தோல்வி அடைந்திருந்தனர். தொடர்ந்து இந்த சீசனில் 741 ரன்கள் சேர்த்து இரண்டாவது முறையாக ஆரஞ்சு கேப்பை வென்றுள்ளார் கோலி. ஆனாலும் அவர்களால் இறுதி போட்டிக்கு முன்னேற முடியாமல் தோல்வியடைந்திருந்தது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக தான் இருந்துள்ளது.

மேலும் இரண்டு முறை ஆரஞ்ச் கேப் வென்ற முதல் இந்திய வீரர் என்ற சிறப்பை கோலி பெற்றிருந்தாலும் ருத்துராஜிற்கு கிடைத்த முக்கிய சிறப்பு அவருக்கு கிடைக்கவில்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை. அதாவது ஐபிஎல் வரலாற்றிலேயே ஆரஞ்சு கேப்பை வென்ற வீரரின் அணி, இரண்டு முறை தான் ஐபிஎல் கோப்பையை வென்றிருந்தது.

கடந்த 2014 ஆம் ஆண்டு ஆரஞ்சு கேப்பை வென்ற உத்தப்பா ஆடிய கொல்கத்தா அணி, அந்த சீசனில் கோப்பையை வென்றிருந்தது. இதனைத் தொடர்ந்து 2021 ஆம் ஆண்டு சிஎஸ்கேவில் ஆடிய ருத்துராஜ் ஆரஞ்சு கேப்பை வெல்ல, அவர்கள் ஐபிஎல் கோப்பையும் வென்றிருந்தனர். ஆனால் இவர்களை விட அதிக முறை ஆரஞ்சு கேப்பை கோலி வென்றாலும் அவர் ஆடிய அணி இதுவரை கோப்பையை வெல்லாமல் இருப்பது தான் இதில் குறிப்பிடத்தக்க விஷயம்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews