டி 20 உலக கோப்பை ஃசெமி பைனல்களில் கோலி செஞ்ச சம்பவம்.. அதே மேஜிக்கை திரும்ப செய்வாரா…

2022 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிராக தோல்வியடைந்து வெளியேறி இருந்தது. அப்படி ஒரு சூழலில் அதற்கெல்லாம் சேர்த்து தக்க பதிலடி கொடுப்பதற்கான ஒரு சிறந்த வாய்ப்பு தான் ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய அணிக்கு தற்போது கிடைத்துள்ளது.

டி20 உலக கோப்பை தொடரில் தற்போது மூன்று அணிகளில் ஒன்று தான் கோப்பையை வெல்லப்போகிறது. தென்னாபிரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையே அரையிறுதி போட்டி நடந்தது. இதில் ஆப்கானிஸ்தான் அணியை 56 ரன்களில் சுருட்டி, முதல் முறையாக ஐசிசி தொடரின் இறுதி போட்டிக்கு முன்னேற்றம் கண்டுள்ளது மார்க்ரம் தலைமையிலான தென்னாப்பிரிக்க அணி.

இதனைத் தொடர்ந்து இந்தியா மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகள் இரண்டாவது அரையிறுதி போட்டியில் மோத உள்ளது. இந்தப் போட்டி நடைபெற உள்ள கயானா மைதானம் மழையால் சூழப்பட்டிருக்கும் நிலையில், போட்டி நடக்காமல் போனால் இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆனால் மழையெல்லாம் பெரிதாக வராமல் இங்கிலாந்து அணிக்கு எதிராக ஆடி இந்திய அணி வெற்றி பெற வேண்டும் என்பதும் ரசிகர்களின் விருப்பமாக உள்ளது. இந்த முறை பந்துவீச்சு மற்றும் பேட்டிங்கிலும் சில வீரர்கள் கலக்கி வரும் அதே வேளையில் கோலியின் ஃபார்ம் அவுட் தான் இந்திய அணிக்கு நாக் அவுட் போட்டிகளில் பெரிய பிரச்சனையாக இருக்கும் என தெரிகிறது.

பல ஐசிசி தொடர்களில் இந்திய அணி நிறைய வெற்றிகளை குவிக்க முக்கிய காரணமாக இருந்த விராட் கோலியால் நடப்பு டி20 உலக கோப்பை தொடரில் ஒரு சிறந்த இன்னிங்சை கூட வெளிப்படுத்த முடியவில்லை. அதிகபட்சமாக 37 ரன்கள் மட்டுமே அவர் அடித்துள்ள நிலையில் 6 போட்டிகளில் 66 ரன்கள் அடித்துள்ளது ரசிகர்களை ஏங்க வைத்துள்ளது.

இதனால் இங்கிலாந்து அணிக்கு எதிரான அரை இறுதி போட்டியில் நிச்சயம் தனது ஆட்டத்தை வெளிப்படுத்தியே ஆக வேண்டும் என்ற சூழலிலும் தள்ளப்பட்டுள்ளார் விராட் கோலி. அப்படி ஒரு நிலையில் தான் விராட் கோலி இதுவரை நடந்த டி20 உலக கோப்பையின் அரை இறுதி மற்றும் இறுதிப் போட்டியில் அடித்த ரன்கள் தொடர்பான விவரம் இந்திய ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது.

2014 ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான அரையிறுதி போட்டியில் 72 ரன்கள் அடித்திருந்த கோலி, அதே ஆண்டின் இறுதிப்போட்டியில் இலங்கைக்கு எதிராக 77 ரன்கள் சேர்த்திருந்தார். இதனைத் தொடர்ந்து 2016 ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான அரை இறுதியில் 89 ரன்கள் சேர்த்திருந்த கோலி, 2022 ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான அரை இறுதியில் 50 ரன்கள் சேர்த்து அசத்தியிருந்தார்.

இப்படி டி20 உலக கோப்பையின் அரையிறுதி மற்றும் இறுதி போட்டியில் கோலி பேட்டிங் செய்த 4 போட்டியிலும் அரைச்சதம் அடித்துள்ளதால் மீண்டும் அந்த மேஜிக்கை திரும்ப ஃபார்மிற்கு வந்து செய்வார் என்றும் ரசிகர்கள் குறிப்பிட்டு வருகின்றனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews