2014 மேட்ச்ல நடந்ததே தான்.. 10 வருஷம் கடந்தாலும் கொஞ்சம் கூட மாறாத கோலியின் பேட்டிங்..

டி20 உலக கோப்பையின் இறுதி போட்டி வரை எந்த போட்டியிலும் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தாமல் கடுமையாக தடுமாறி வந்தார் விராட் கோலி. லீக் சுற்றின் மூன்று போட்டிகளில் ஐந்து ரன்கள் மட்டுமே சேர்த்திருந்த விராட் கோலி, அடுத்து நடந்த சூப்பர் 8ல் 3 போட்டிகளில் சேர்த்து 61 ரன்கள் சேர்த்திருந்தார். இதனால் மொத்தமாக 6 போட்டிகளில் 66 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த விராட் கோலியால் எந்த இன்னிங்ஸிலும் நல்லதொரு பேட்டிங்கை வெளிப்படுத்த முடியவில்லை.

அவரது பாதகமான விஷயங்களை தெரிந்து வைத்திருந்த எதிரணி பந்துவீச்சாளர்கள் மிக சுலபமாக கோலியின் விக்கெட்டை கைப்பற்ற, இந்திய அணியும் ஆரம்பத்திலேயே தடுமாற்றம் கண்டு வந்தது. அதுவும் அவர் தொடக்க வீரராக களமிறங்கியதே பெரிய அளவில் விமர்சனத்தை சந்திக்க நிச்சயம் மூன்றாவது வீரராக அவர் களமிறங்கினால் தான் சரியாக இருக்கும் என்பதும் பலரது கருத்தாக இருந்தது.

இதனிடையே இங்கிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதி போட்டியில் ஒன்பது ரன்களில் அவுட்டாகி இருந்த விராட் கோலி மொத்தமாக 7 போட்டிகளில் 75 ரன்கள் தான் எடுத்திருந்தார். இந்திய அணி தொடர்ச்சியாக வெற்றிகளை பெற்றும் கோலி மீது எதிர்ப்புகள் உருவாக, அவருக்கு ஆதரவாக அரையிறுதிக்கு பின் பேசியிருந்தார் கேப்டன் ரோஹித்.

விராட் கோலி அனைத்து போட்டிக்கும் சேர்த்து இறுதிப் போட்டியில் நிச்சயம் பட்டையை கிளப்புவார் என ரோஹித் கூற, அதனை செய்தும் காட்டியுள்ளார். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 40 ரன்கள் சேர்ப்பதற்குள் 3 முக்கிய விக்கெட்டுகளை இந்திய அணி இழந்து தடுமாற தொடக்க வீரர் விராட் கோலி, சரிந்த இந்திய அணியை அக்சர் படேலுடன் சேர்ந்து மீட்டெடுத்திருந்தார்.

59 பந்துகளில் 76 ரன்கள் அடித்திருந்த விராட் கோலி, மார்கோ யான்சென் பந்துவீச்சில் அவுட்டானார். இதனிடையே விராட் கோலியின் இந்த சிறந்த இன்னிங்ஸ், 2014 ஆம் ஆண்டு சம்பவம் ஒன்றை நினைவு கூர்ந்துள்ளது. அதே ஆண்டில் நடந்த டி20 உலக கோப்பைத் தொடரின் இறுதி போட்டியில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதி இருந்தது.

இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 130 ரன்கள் மட்டுமே எடுக்க, அவர்களை வீழ்த்தி 18-வது ஓவரில் வெற்றி பெற்று கோப்பையை சொந்தமாக்கி இருந்தது இலங்கை அணி. கடைசி கட்டத்தில் யுவராஜ் சிங் இந்த போட்டியில் தடுமாற இந்திய அணியின் ரன்னும் ஏறாமல் போனது. ஆனால் விராட் கோலி 58 பந்துகளில் நான்கு சிக்ஸர்களுடன் 77 ரன்கள் எடுத்திருந்தார்.

இருந்தும் மற்ற பேட்ஸ்மேன்கள் நல்ல பங்களிப்பை அளிக்காததால் இந்திய அணி தடுமாற்றம் கண்டு தோல்வியடைந்திருந்தது குறிப்பிடத்தக்கது. அதே போல 10 ஆண்டுகள் கழித்து தற்போது டி20 உலக கோப்பையின் இறுதி போட்டியில் விராட் கோலியின் அபாரமான பேட்டிங், ரசிகர்களை உற்று நோக்க வைத்துள்ளது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...