தொலைந்து போன அம்மாவை தேடும் இரு மகன்களின் கண்ணீர் கதை.. ஜே. பேபி விமர்சனம்!

குடும்ப கஷ்டத்தால் மனசு லேசாக பாதிக்கப்பட்ட நிலையில், வீட்டை விட்டே வெளியேறுகிறார் பேபி (ஊர்வசி). அம்மா காணாமல் போய் விட்டார் என்பதை அறிந்தவுடன் எப்படியாவது அம்மாவை தேடி கண்டுபிடித்தே தீர வேண்டும் என மகன்களாக நடித்துள்ள அட்டகத்தி தினேஷ் மற்றும் லொள்ளு சபா மாறன் தேடி அலையும் கதை தான் இந்த ஜே. பேபி.

ஜே. பேபி விமர்சனம்:

வெங்கட் பிரபுவின் உதவி இயக்குநரான பா. ரஞ்சித் அட்டகத்தி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகி மெட்ராஸ், கபாலி, காலா, சார்பட்டா பரம்பரை, தங்கலான் வரை பல படங்களை இயக்கி வெங்கட் பிரபுவையே தாண்டி வேறலெவலுக்கு சென்று விட்டார்.

வெங்கட் பிரபுவின் உதவி இயக்குனராக பா ரஞ்சித் இருக்கும் போது அவருடன் பணியாற்றியவர்தான் சுரேஷ் மாரி. பல்லாண்டு கால போராட்டத்திற்கு பிறகு ஜே. பேபி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகியுள்ளார். முதல் படத்திலேயே தரமான இயக்கத்தை கொடுத்து ரசிகர்களின் பாராட்டுகளை பெற்று வருகிறார்.

எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் தனது நடிப்பால் பிரித்து மேய்ந்து விடும் நடிகை ஊர்வசியை முதன்மை கதாபாத்திரமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த ஜே பேபி படத்தில் ஊர்வசி நடிப்பு உச்ச கட்டத்தில் உள்ளது. ஊர்வசியை தொடர்ந்து லொள்ளு சபா மாறன் இதுவரை பார்த்திராத ஒரு யதார்த்த நடிப்பை ரசிகர்களுக்கு காட்டியிருக்கிறார். மேலும், அட்டக்கத்தி, குக்கூ, விசாரணை, இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு உள்ளிட்ட வித்தியாசமான படங்களில் நடித்த அட்டகத்தி தினேஷ் இந்தப் படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார்.

மாறன் மற்றும் தினேஷ் இருவரும் தனது தாயைத் தேடிக் கொண்டு மேற்கு வங்கத்திற்கு பயணம் செய்து கொல்கத்தாவில் அம்மாவை தேடும் காட்சிகள் ரசிகர்களை கலங்க செய்து விடுகிறது. மனநல பாதிப்புடன் கொல்கத்தாவில் சுற்றித் திரியும் ஊர்வசியை கடைசியாக இவர்கள் இருவரும் எப்படி எங்கே கண்டுபிடிக்கின்றனர் என்பதுதான் நெகிழ்ச்சியான கிளைமாக்ஸ்.

படத்தைப் பார்த்துவிட்டு வெளியே வரும் ரசிகர்கள் பலரும் கண்கள் குளமாகி வருவதுதான் இந்தப் படத்திற்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி என்று கூறலாம். பா ரஞ்சித் தயாரிப்பில் வெளியான ப்ளூ ஸ்டார் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று ஓடியது. பட்ஜெட்டை விட அதிகமாக வசூல் செய்தது. அதே போல இந்த ஜே பேபி திரைப்படமும் வெற்றி பெறும் எனது பார்க்கப்படுகிறது.

ஜே. பேபி – ஜெயம்!

ரேட்டிங் – 3.75/5.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews