பத்திர ஆபிஸ் போறீங்களா.. இன்று முதல் இதுதான் புதிய வழிகாட்டி மதிப்பு.. எப்படி பார்ப்பது?

சென்னை: தமிழ்நாட்டில் பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. திருத்தப்பட்ட வழிகாட்டி மதிப்பின் வரைவு பட்டியல் கடந்த மாதம் வெளியிடப்பட்ட நிலையில், பொதுமக்கள் கருத்துக்கு பிறகு அமல்படுத்தப்பட்டுள்ளது.

தமிழ்நாடடில் நிலங்களுக்கான வழிகாட்டி மதிப்புகள் கடந்த 2012ம் ஆண்டு சீரமைக்கப்பட்ட நிலையில், அதில் சில குளறுபடிகள் ஏற்பட்டதாக புகார்கள் எழுந்தது. இதனால் கடந்த 2017ல், வழிகாட்டி மதிப்புகளில், ஒரேயடியாக 33 சதவீதம் குறைக்கப்பட்டது.

இந்த விவாகரத்தில் கடந்த 2023ம் ஆண்டு பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசிய அன்றைய நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், ” 01.04.2012 அன்று உயர்த்தப்பட்ட நிலத்தின் வழிகாட்டி மதிப்பு, 09.06.2017 அன்று முதல் ஒரே சீராக 33 சதவீதம் என குறைக்கப்பட்டது. மேலும், விற்பனை, நன்கொடை, பரிமாற்றம் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கு இடையே அல்லாத ஏற்பாடு ஆவணங்களுக்கான பதிவுக் கட்டணம் ஒரு சதவீதத்திலிருந்து நான்கு சதவீதம் என உயர்த்தப்பட்டது.

சந்தை மதிப்பிற்கு ஏற்ப வழிகாட்டி மதிப்பை உயர்த்தவும், பதிவுக் கட்டணத்தைக் குறைக்கவும் பல்வேறு தரப்பினரிடமிருந்து தொடர்ந்து கோரிக்கைகள் வந்தது. இந்த கோரிக்கைகளை ஏற்று, வழிகாட்டி மதிப்பில் திருத்தத்தைப் பரிந்துரைக்க ஒரு குழுவை அரசு அமைத்திருக்கிறது.
இக்குழு நிலஅளவை எண் வாரியாக திருத்தம் மேற்கொள்ள கால அவகாசம் தேவைப்படும்.

இது ஒருபுறம் எனில் வெளிச்சந்தையில் சொத்துகளின் மதிப்பு கணிசமாக அதிகரித்துள்ளதால், இக்குழுவின் அறிக்கை பெறும்வரை, வழிகாட்டி மதிப்பை 08.06.2017 வரை கடைபிடிக்கப்பட்டு வந்த வழிகாட்டி மதிப்பிற்கு ஈடாக உயர்த்த அரசு முடிவு செய்திருக்கிறது. நிலம் வாங்குபவர்களின் சுமையைக் குறைக்க, பதிவு கட்டணத்தை 4 சதவீதத்திலிருந்து 2 சதவீதமாகக் குறைக்கவும் அரசு முடிவு செய்திருக்கிறது.

ஆகவே சொத்து விற்பனை, நன்கொடை, பரிமாற்றம் ஆகிய ஆவணங்களுக்கு, 8-6-2017 வரை கடைப்பிடிக்கப்பட்ட வழிகாட்டி மதிப்பில் 5 சதவீதம் முத்திரைத் தீர்வை, 2 சதவீதம் சொத்து மாற்று வரி மற்றும் 2 சதவீதம் பதிவுக் கட்டணம் செலுத்தை பொதுமக்கள் வேண்டும். குடும்ப உறுப்பினர்களுக்கு இடையே அல்லாத ஏற்பாடு ஆவணத்திற்கு 7 சதவீதம் முத்திரைத் தீர்வை, 2 சதவீதம் பதிவுக் கட்டணம் செலுத்த வேண்டும். இந்த நடவடிக்கைகள் எளிய, நடுத்தர மக்களுக்கு, குறிப்பாக வங்கிக் கடன் மூலம் வீடு வாங்குபவர்களுக்கு நிச்சயம் பெரிய அளவில் பயனளிக்கும்” என்று பிடிஆர் தெரிவித்தார்.

இந்நிலையில் அமைச்சர் அறிவித்தபடியே பத்திரப்பதிவு துறை கடந்த 2023-ம் ஆண்டு ஏப்ரல் 1-ந்தேதி வெளியிட்ட நிலத்திற்கான வழிகாட்டி மதிப்பின் அடிப்படையில் பத்திரப்பதிவு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகத்தில் 9 பதிவுத்துறை மண்டலங்கள், 50 பதிவு மாவட்டங்கள், 571 சார்பதிவு அலுவலகங்கள் உள்ளன. பத்திரப்பதிவு செய்யப்படும் வழிகாட்டி மதிப்பீட்டில் கிரையம் பெறுவதற்கு 7 சதவீதம் முத்திரைத் தாள் கட்டணம், 2 சதவீதம் நிர்வாகக் கட்டணம் என மொத்தம் 9 சதவீத கட்டணத்தை பொதுமக்கள் செலுத்தி வருகிறாரகள்.

இந்த நிலையில் அரசு அறிவித்தபடி இந்த வழிகாட்டி மதிப்பில் பல்வேறு முரண்பாடுகள் மற்றும் குறைகளை களைய மாவட்ட அளவில் ஆட்சியர் தலைமையில் துணைக்குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவில் பத்திரப்பதிவு, வருவாய், உள்ளாட்சி உள்ளிட்ட துறைகளின் அலுவலர்கள் இடம் பெற்று இருந்தாரக்ள். இந்த குழுவினர் வழிகாட்டு மதிப்பை தெருக்கள் வாரியாகவும், சர்வே எண் வாரியாகவும் விரிவாக ஆய்வு செய்து முரண்பாடுகளை களைந்தார்கள்.

திருத்தப்பட்ட இந்த வரைவு வழிகாட்டி மதிப்பு பட்டியல் பத்திரப்பதிவு துறையின் இணையதளமான https://tnreginet.gov.in/portal/ என்ற இணையதளத்தில் கடந்த மாதம் (ஜூன்) 10-ம் தேதி வெளியிடப்பட்டது. இதில் தெரு பெயர் அல்லது புல எண் பிரிவில் போய், 14 மண்டலத்தில் எந்த மண்டலம் என்பதை குறிப்பிட்டு, அதில் சர்பதிவாளர் அலுவலகம் மற்றும் கிராமம், தெருவை குறிப்பிட்டால் திருத்தப்பட்ட வழிகாட்டி மதிப்பு வெளியிடப்பட்டது.

அதன் மீது பொதுமக்கள் கருத்துக்கள் சொல்ல 15 நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டது. பின்னர் பொதுமக்களிடம் இருந்து வரப்பட்ட ஆலோசனைகள் மற்றும் கோரிக்கைகளை மாவட்ட கலெக்டர்கள் தலைமையிலான துணைக்குழுக்கள் ஆய்வு செய்தன. அதில் தகுதியானவை ஏற்றுக்கொள்ளப்பட்டு வரைவு வழிகாட்டி மதிப்பு பட்டியலில் திருத்தம் செய்யப்பட்டு இறுதி பட்டியல் தயார் செய்யப்பட்டன.

இந்த திருத்தம் செய்யப்பட்ட வழிகாட்டி மதிப்பிற்கு பத்திரப்பதிவு துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கடந்த 29-ம் தேதி ஒப்புதல் கொடுத்தார். இந்த புதிய வழிகாட்டி மதிப்பை பொறுத்தவரை கிராமப்புறங்களில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை. ஆனால், நகர்ப்புறங்களில் சில இடங்களில் மட்டும் 10 சதவீதம் அதிகரித்தும், சில இடங்களில் 10 சதவீதம் குறைத்தும் மதிப்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்த புதிய வழிகாட்டி மதிப்பினை இன்று (திங்கட்கிழமை) முதல் நடைமுறைப்படுத்த பத்திரப்பதிவு துறை முடிவு செய்தது. அதன்படி இன்று முதல் பத்திரப்பதிவு செய்பவர்கள் புதிய வழிகாட்டி மதிப்பின் அடிப்படையில் மட்டுமே பதிவு செய்ய முடிகிறது. ஏற்கனவே ஆவணங்களை பதிவு செய்ய இணையதளத்தில் பதிவேற்றம் செய்து இருந்தால், அவர்கள் தற்போதைய மதிப்பின் அடிப்படையில் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியது அவசியம் ஆகும். அதேநேரம் நிலத்தன் வழிகாட்டி மதிப்பு குறைந்து இருந்தால், அந்த தொகை திருப்பி அளிக்கப்படும். ஒரே தெருவில் இருவிதமான வழிகாட்டி மதிப்புகள் ஒரே மதிப்பிற்கு மாற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews