நான் அடிச்ச எல்லாருமே டான் தான்.. டி 20 உலக கோப்பையில் எந்த பந்து வீச்சாளரும் செய்யாததை செஞ்சு அசத்திய சவுரப்..

டி20 உலக கோப்பை தொடரில் இந்த முறை எதிர்பாராத பல்வேறு விஷயங்கள் அரங்கேறி வருகிறது என்பதுதான் நிதர்சனமான உண்மை. இந்திய அணியை பொருத்தவரையில் பந்துவீச்சு மிக பலமாக இருக்கும் நிலையில் அவர்கள் தற்போது சூப்பர் 8 சுற்றிலும் ஆடி வருகின்றனர். இன்னொரு பக்கம் கேன் வில்லியம்சன், போல்ட், சான்ட்னர், டிம் சவுதி உள்ளிட்ட பல தலைசிறந்த வீரர்கள் இருந்தபோதிலும் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக தோல்வியடைந்த நியூசிலாந்து அணி லீக் சுற்றுடன் வெளியேறி இருந்தது.

அவர்களைப் போல பாகிஸ்தான் மற்றும் இலங்கை உள்ளிட்ட அணிகளும் லீக் சுற்றுடன் நடையைக் கட்ட, அமெரிக்கா, ஆப்கானிஸ்தான், வங்காளதேசம் உள்ளிட்ட அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறியது பலரையும் வியந்து பார்க்க வைத்திருந்தது. இதில் ஆப்கானிஸ்தான் மற்றும் வங்காளதேச அணிகள் ஐசிசி தொடர்களில் ஆடிய அனுபவம் இருந்தாலும் அமெரிக்க அணி அந்த அளவுக்கு பெரிய அணிகளுடன் மோதியது கிடையாது.

அப்படி இருந்தும் பாகிஸ்தான் அணிக்கு எதிராக லீக் போட்டியில் வெற்றி பெற்றிருந்த அமெரிக்கா, சவுத் ஆப்பிரிக்காவுக்கு எதிரான சூப்பர் 8 போட்டியிலும் அவர்களுக்கு பயத்தைக் காட்டி இருந்தனர். 195 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய போதிலும் அசராமல் இருந்த அமெரிக்கா அணியின் பேட்ஸ்மேன்கள் மிகச் சிறப்பாக ஆடி போட்டியை நெருக்கி கொண்டு வந்தனர்.

ஆனாலும் கடைசி ஓவர்களில் சில சாதகங்கள் அமையாமல் போனதால் அவர்கள் தோல்வியடையும் நிலையும் உருவாகி இருந்தது. அமெரிக்காவில் பல இந்திய வம்சாவளி வீரர்கள் இடம் பெற்றுள்ள நிலையில் பந்துவீச்சாளர்களிலும் சவுரப் நெட்ராவல்கர் என்ற வீரரும் இடம் பெற்றுள்ளார். இவர் இந்திய அணிக்காக U 19 உள்ளிட்ட போட்டிகளில் ஆடியுள்ள நிலையில் பின்னர் அமெரிக்காவுக்கு குடி பெயர்ந்ததால் தற்போது அந்த அணிக்காகவும் ஆடி வருகிறார்.

டி 20 உலக கோப்பை போட்டியில் ஆடி வந்தாலும் ஒரு சாஃப்ட்வேர் இன்ஜினியரான அவர் மற்ற நேரங்களில் வேலை பார்த்துக் கொண்டும் கிரிக்கெட் ஆடி வருவதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. அந்தளவுக்கு தொழிலும், கிரிக்கெட்டிலும் மிகுந்த அர்பணிப்புடன் இருந்து வரும் சவுரப்பை பலரும் பாராட்டி வரும் நிலையில் இந்த டி20 உலக கோப்பைத் தொடரில் அவர் எடுத்த முக்கியமான விக்கெட்டுகளை தற்போது பார்க்கலாம்.

பாகிஸ்தான், இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகளுக்கு எதிராக சிறப்பாக பந்து வீசியிருந்த சவுரப் நெட்ராவல்கர், மொத்தம் 6 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார். அதிலும் அவர் கைப்பற்றிய விக்கெட்டுகள் அனைத்துமே பெரிய தலைகள் தான். முகமது ரிஸ்வான், கோலி, இப்திகார் அகமது, ரோஹித் ஷர்மா, ரீஷா ஹென்ரிக்ஸ், மார்க்ரம் என சர்வதேச கிரிக்கெட்டில் தலைசிறந்த வீரர்கள் விக்கெட்களாகும்.

அதிலும் பவர் பிளேவில் விராட் கோலி, ரோஹித் மற்றும் ரீசா ஹென்ரிக்ஸ், முகமது ரிஸ்வான் என நான்கு முக்கிய விக்கெட்டுகளை பவர் பிளே ஓவர்களில் சவுரப் நெட்ராவல்கர் வீழ்த்தியுள்ளார். அமெரிக்க அணியால் அரையிறுதி சுற்றுக்கு முன்னேற முடியாமல் போனாலும் நிச்சயம் சவுரப் நெட்ராவல்கரின் பந்துவீச்சு அவரை ஐபிஎல் உள்ளிட்ட பல முக்கியத் தொடரில் ஆடுவதற்கு வழி செய்யும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews