7 மாச பகை.. இந்தியாவுக்கு கிடைச்ச பொன்னான வாய்ப்பு.. வரலாறு படைப்பாரா ரோஹித்?..

ஐசிசி தொடர் வரலாற்றிலேயே இந்திய அணிக்கு இதைவிட ஒரு சிறந்த தருணம் கிடைக்குமா என்பதுதான் நிதர்சனமான உண்மை. கடந்த 2013 ஆம் ஆண்டு தோனி தலைமையில் ஐசிசி சாம்பியன்ஷிப் தொடரை இந்திய அணி கைப்பற்றி இருந்தது. அதன் பின்னர் பல ஐசிசி தொடர்களில் பலம் வாய்ந்த அணியாக இந்தியா இருந்த போதிலும் நாக் அவுட் போட்டிகளில் செய்த தவறால் அவர்கள் கோப்பையை கைப்பற்றும் வாய்ப்பையும் இழந்திருந்தனர்.

இவை அனைத்தையும் விட முக்கியமாக கடந்த 2023 ஆம் ஆண்டு இரண்டு ஐசிசி கோப்பைகளை வெல்லும் வாய்ப்பு இந்தியாவிற்கு கிடைத்திருந்தது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் ஒரு நாள் உலகக் கோப்பை என இரண்டிலும் இறுதிப்போட்டி வரை முன்னேறி இருந்த இந்திய அணி, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தோல்வி அடைந்ததால் இரண்டாவது இடம்பிடித்து ஏமாற்றம் அளித்திருந்தது.

மற்ற இருதரப்பு தொடர்களில் எல்லாம் பட்டையைக் கிளப்பும் இந்திய அணியால் ஐசிசி தொடர்களில் சாதிக்காமல் இருந்து வருவது பெரிய அளவில் விமர்சனத்தையும் சந்தித்து வந்தது. அப்படி ஒரு சூழலில் தான் தற்போது நடைபெற்று வரும் டி 20 உலக கோப்பை தொடரை வெல்வதற்கு இந்திய அணிக்கு பொன்னான ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது.

லீக் சுற்றில் 3 போட்டிகளிலும் சூப்பர் 8-ல் இரண்டு போட்டிகளிலும் ஆடியுள்ள இந்திய அணி 5 போட்டிகளிலும் வெற்றி பெற்று அசைத்து பார்க்க முடியாத அணிகளில் ஒன்றாகவும் உள்ளது. இதே ஃபார்மை தொடர்ந்தால் இறுதி போட்டியில் நிச்சயம் இந்திய அணியால் இந்த முறை சாதிக்க முடியும் என்பதும் ரசிகர்களின் நம்பிக்கையாக உள்ளது.

அப்படி இருக்கையில் தான் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கடந்த இரண்டு ஐசிசி தொடரின் இறுதி போட்டியில் தோல்வியடைந்ததற்கு பழி வாங்குவதற்கான ஒரு சிறந்த தருணம் ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய அணிக்கு தற்போது கிடைத்துள்ளது. சூப்பர் 8 சுற்றில் இந்தியா, ஆப்கானிஸ்தான், ஆஸ்திரேலியா மற்றும் பங்களாதேஷ் ஆகிய நான்கு அணிகளும் ஒரே பிரிவில் இடம் பிடித்துள்ளது.

இதில் இந்திய அணி 2 போட்டிகளில் வெற்றி பெற, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு போட்டி மட்டும் மீதம் இருக்கிறது. ஆனால் ஆஸ்திரேலியா அணி பங்களாதேஷ் அணியை வீழ்த்தியிருந்தாலும் சமீபத்தில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக தோல்வியடைந்திருந்தது.

இதனால் இந்திய அணிக்கு எதிரான போட்டியில் நிச்சயம் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற கட்டாயத்திலும் ஆஸ்திரேலிய அணியினர் உள்ளனர். ஆனால், இந்திய அணி அவர்களை வீழ்த்தி விட்டால் பழிக்கு பழி வாங்கி ஆஸ்திரேலியாவை வெளியே அனுப்ப முடியும். ஒருவேளை பங்களாதேஷ் அணி, ஆப்கானிஸ்தானை அடுத்த போட்டியில் வீழ்த்தினாலும் ஆஸ்திரேலிய அணியின் ரன் ரேட்டை குறைக்கும் வேலையை இந்தியா பார்த்து விட்டாலே அவர்கள் அரை இறுதிக்கு முன்னேறாமல் வெளியேறி விடுவார்கள்.

இதனால் கடந்த ஆண்டு தவறவிட்ட கோப்பைக்கு ஆஸ்திரேலியாவை பழிவாங்கும் பொன்னான வாய்ப்பு இந்தியாவிற்கு கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...