ஆர்சிபி ஃபைனல்ஸ் போவது உறுதி.. பல சீசன்களில் நடந்த அதே விஷயம்.. உற்சாகத்தில் பெங்களூரு ரசிகர்கள்..

இந்த சீசனில் பல அணிகளும் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் என எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில் பெங்களூர் அணி என்ன செய்தாலும் அவர்கள் முன்னேற மாட்டார்கள் என்று தான் அந்த அணியின் ரசிகர்களும் கூட நினைத்து வந்தனர். ஆனால் சமீபத்திய சில போட்டிகளில் மற்ற அணிகளின் ரசிகர்களே வியந்து பார்க்கும் அளவுக்கு உயர்ந்துள்ள ஆர்சிபி, பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் அணிகளில் ஒன்றாகவும் மாறி உள்ளது.

முதல் 8 போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்றிருந்த ஆர்சிபி அணி அடுத்த ஐந்து போட்டிகளில் தொடர்ச்சியாக வெற்றி பெற்றுள்ளது. பேட்டிங் மற்றும் பவுலிங் என அனைத்திலுமே கோளாறாக இருந்த ஆர்சிபி, தற்போது அதனை எல்லாம் மிகச் சிறப்பாக கையாண்டு வெற்றிகளை குவித்து வருகிறது. மேலும், சென்னை அணிக்கு எதிரான கடைசி லீக் போட்டியில் ஆர்சிபி வெற்றி பெற்று மற்ற சில போட்டிகளில் முடிவும் சாதகமாக அமைந்துவிட்டால் அவர்கள் மிக எளிதாக பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறிவிடலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பேட்டிங்கை பொருத்தவரையில் விராட் கோலி, வில் ஜேக்ஸ், ராஜத் படிதர் மற்றும் தினேஷ் கார்த்திக் என அனைவருமே தொடர்ந்து நல்ல பங்களிப்பை அளித்து வரும் நிலையில் பந்து வீச்சிலும் யாஷ் தயாள் உள்ளிட்ட பலரும் விக்கெட்டுகளை எடுத்து எதிரணிக்கு நெருக்கடியையும் அதிகரிக்க தொடங்கி விட்டனர்.

இதே தந்திரத்தை அனைத்து போட்டிகளிலும் சிறப்பாக செயல்படுத்தி வெற்றிகளை குவித்து வரும் ஆர்சிபி, இந்த முறை ஃபைனலுக்கு முன்னேற வேண்டும் என்பதும் ரசிகர்களின் விருப்பமாக உள்ளது. அப்படி ஒரு சூழலில் தான் மிக முக்கியமான ஒரு கணக்கை போட்டு நிச்சயம் இந்த முறை ஆர்சிபி அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறும் என்றும் ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர். நடப்பு ஐபிஎல் சீசனில் 5 போட்டிகளில் தொடர்ச்சியாக வென்ற ஒரே அணியாக ஆர்சிபி தான் இருந்து வருகிறது. இவர்கள் இதற்கு முன்பாக கடந்த 2009 மற்றும் 2016 ஆகிய ஆண்டுகளில் 5 போட்டிகளில் தொடர்ச்சியாக வெற்றி பெற்றிருந்தது.

அதேபோல 2011 ஆம் ஆண்டு 7 போட்டிகளில் தொடர்ச்சியாக வென்றிருந்த ஆர்சிபி, மேற்குறிப்பிட்ட மூன்று ஆண்டுகளிலும் இறுதி போட்டிக்கு முன்னேறி உள்ளது. இப்படி ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட போட்டிகளில் தொடர்ச்சியாக ஆர்சிபி வென்ற போட்டிகளில் எல்லாம் அவர்கள் இறுதி போட்டிக்கு முன்னேற்றம் கண்டுள்ள நிலையில், இந்த முறை அப்படி ஒரு விஷயம் நடந்துள்ளதால் அவர்கள் நிச்சயம் இறுதி போட்டிக்கு முன்னேறுவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews