வதந்திகளை தயவு செஞ்சு நம்பாதீங்க.. 2 நாள்ல நல்ல செய்தி வரும்.. கேப்டன் விஜயகாந்த் உடல்நிலை பற்றி விளக்கம் கொடுத்த பிரேமலதா!

Vijayakanth : தமிழ் சினிமாவின் தொண்ணூறுகளில் சிறந்த நடிகராக வலம் வந்தவர் கேப்டன் விஜயகாந்த். ஆக்ஷன் திரைப்படங்கள், மக்களுக்காக போராடும் கதைக்களம் என தொடர்ந்து தனது நடிப்பால் மக்கள் மனம் கவர்ந்த விஜயகாந்த், சினிமாவில் மட்டுமில்லாமல் நிஜ வாழ்க்கையிலும் ஹீரோவாக திகழ்ந்தார்.

சினிமாவில் தன்னுடன் நடித்த பல நடிகர்களுக்கு நல்ல உள்ளத்தோடு விஜயகாந்த் உதவி செய்ததுடன் மக்கள் பலருக்கும் கூட தன்னாலான உதவியை செய்து அனைவரிடமும் மிகவும் அன்பாக நெருங்கி பழகும் வகையிலும் விஜயகாந்த் திகழ்ந்தார். 2010 ஆம் ஆண்டுக்கு பிறகு திரைப்படங்களில் அதிகம் நடிக்காமல் இருந்து வந்த விஜயகாந்த்,முழுமையாக அரசியலில் கவனம் செலுத்தி வந்தார்.

தேமுதிக என்ற கட்சியை தொடங்கி தேர்தலை சந்தித்த விஜயகாந்திற்கு கடந்த சில ஆண்டுகளாகவே உடல்நிலை சரியில்லாமல் இருந்து வருகிறது. ஒரு காலத்தில் கணீர் குரலுடன் அரசியலில் தைரியமாக வலம் வந்த விஜயகாந்த்திற்கு இப்படி ஒரு நிலையா என வேதனையுடன் பலரும் குறிப்பிட்டு வருகின்றனர். இதற்கு மத்தியில், கடந்த சில தினங்களாக அவரது உடல்நிலை குறித்து பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வலம் வந்த வண்ணம் உள்ளது.

மருத்துவமனையில் தற்போது சிகிச்சை பெற்று வரும் விஜயகாந்தின் உடல்நிலை மோசமடைந்து வருவதாகவும், திரை பிரபலங்கள் அவரை பார்க்க மருத்துவமனைக்கு வருகை புரிவதாகவும் சில தகவல்கள் வெளியாகி, பலரையும் சோகத்தில் ஆழ்த்தி இருந்தது. இதனால், என்ன ஆகுமோ என்ற கவலையும் பலர் மனதில் ஒட்டிக் கொண்டது. இந்த நிலையில், விஜயகாந்தின் மனைவி பிரேமலதா விஜயகாந்த் அனைத்தும் வதந்தி தான் என விளக்கமளித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

“இரண்டு நாட்கள் முன்பு கூட கேப்டனின் உடல்நிலை குறித்து வரும் வதந்திகளை நம்ப வேண்டாம் என நாங்கள் ஒரு வீடியோ பகிர்ந்தோம். அப்படி பணிவாக நாங்கள் கேட்டுக் கொண்ட போதும் தொடர்ந்து வதந்திகளை பரப்பிக் கொண்டிருக்கிறீர்கள். அவர் வெண்டிலெட்டரில் இருப்பதாகவும், செயற்கை சுவாசம் பயன்படுத்துவதாகவும், முதலமைச்சர் சந்தித்து ஆறுதல் கூறியதாகவும் பொய்யான தகவல்கள் யூடியூப் சேனல்களில் பகிரப்பட்டு வருகிறது.
Vijayakanth family

இது எங்களையும், தொண்டர்களையும், சினிமா பிரபலங்களையும் பெரும் மனஉளைச்சலுக்கு உள்ளாக்கி வருகிறது. கேப்டனுடன் இங்கு நாங்கள் மருத்துவமனையில் இருக்கிறோம். அவர் எந்த பரபரப்பும் இல்லாமல் நல்லபடியாக இருக்கிறார். தயவு செய்து மனசாட்சியோடு வதந்தி செய்திகளை பரப்புவதை நிறுத்திக் கொள்ளுங்கள். கேப்டன் நல்லபடியா இருக்காரு. இரண்டு நாட்களில் நல்ல செய்தி வரும். வெகு விரைவில் கேப்டன் வீடு திரும்புவார். அனைவரையும் அவர் சந்திக்க இருக்கிறார். வீண் வதந்திகள், பரபரப்பு செய்திகளை யாரும் நம்பாதீங்கன்னு நான் மறுபடியும் கேட்டுக்குறேன். கேப்டனுடன் இருக்கும் புகைப்படங்களையும் நாங்கள் பகிர்ந்திருக்கிறோம்” என வேதனையுடன் பிரேமலதா விஜயகாந்த் குறிப்பிட்டுள்ளார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews