ஒரே ஓவர்ல 43 ரன் போனதே சாதனைனா.. அப்ப 77 ரன்ஸ் போனத என்ன சொல்றது.. கிரிக்கெட் அரங்கையே மிரள வைத்த ஃப்ளேஷ்பேக்..

கிரிக்கெட் போட்டியை பொறுத்தவரையில் பொதுவாக ஒரு ஓவரில் 25 முதல் 30 வரை ரன்கள் வரை சேர்க்கப்படுவது என்பது அவ்வப்போது நடக்கும் நிகழ்வாக இருக்கும். ஆனால் அதே வேளையில் ஆறு பந்துகளையும் சிக்ஸர்கள் அடித்து 36 ரன்கள் சேர்க்கும் வழக்கம் என்பது அரிதாக தான் கிரிக்கெட் அரங்கில் நிகழ்ந்து வரும்.

கடந்த 2007 ஆம் ஆண்டு நடந்த டி20 உலக கோப்பையில் ஸ்டூவர்ட் பிராட் வீசிய ஒரே ஓவரில் 6 சிக்ஸர்கள் அடித்திருந்தார் இந்திய வீரர் யுவராஜ் சிங். இதே போல ஹெர்சில்லி கிப்ஸ், அஷ்ரதுல்லா சாசாய், பொல்லார்ட், ரவி சாஸ்திரி உள்ளிட்ட பலரும் ஆறு பந்துகளில் 6 சிக்ஸர்கள் எடுத்து மிக முக்கியமான மைல்கல்லையும் பதிவு செய்துள்ளனர்.

இப்படி ஆறு சிக்ஸர்கள் எடுத்து சாதனை புரிவது ஒரு பக்கம் இருக்க, இன்னொரு பக்கம் 36 ரன்களைத் தாண்டி ஒரே ஓவரில் ரன்கள் செல்லும் நிகழ்வு அரிதாக நடந்து கிரிக்கெட் அரங்கில் மிகப்பெரிய பேசு பொருளாக மாறும். ஆறு சிக்ஸர்கள் பறந்து கொண்டிருக்கும் வேளையில் ஏதாவது வீரர்கள் நோபால் அல்லது வைடு என எக்ஸ்டரா ரன்களை கொடுக்கும் போது அது அதிக ரன்கள் கொடுத்த மோசமான சாதனையாக மாறவும் வாய்ப்புள்ளது.

இதனிடையே அப்படி ஒரு சம்பவம் தான் சமீபத்தில் நடைபெற்ற கவுண்ட்டி கிரிக்கெட் போட்டி ஒன்றில் நடைபெற்றுள்ளது. கவுண்டி கிரிக்கெட்டில் சமீபத்தில் நடந்த போட்டி ஒன்றில் லீசெஸ்டர்ஷைர் மற்றும் சக்ஸஸ் ஆகிய அணிகள் மோதியது. இதில், சக்ஸஸ் வீரர் ஒல்லி ராபின்சன் வீசிய ஒரே ஓவரில் லீசெஸ்டர்ஷைர் வீரர் லூயிஸ் கிம்பர் ஒட்டுமொத்தமாக 43 ரன்களை சேர்த்தது பலரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது.

மொத்தம் இந்த ஓவரில் 3 சிக்ஸர்கள் மற்றும் 5 ஃபோர்கள் செல்ல, நோ பாலையும் அதிகமாக வீசி இருந்தார் ஒல்லி ராபின்சன். இதனால், மொத்தம் 43 ரன்கள் இந்த ஓவரில் சேர்க்கப்பட, லூயிஸ் கிம்பரும் அதிக ரன்களை ஒரே ஓவரின் கவுண்டி கிரிக்கெட்டில் அடித்து சாதனை புரிந்துள்ளார். ஒரு ஓவரில் 43 ரன்கள் என்பதே பலரையும் மிரள வைத்து வரும் சூழலில், முதல் தர கிரிக்கெட்டில் மொத்தம் 77 ரன்கள் ஒரே ஓவரில் சேர்க்கப்பட்டது தான் அதிக ரன்கள் போன உலக சாதனையாக இருந்து வருகிறது.

கடந்த 1989 – 90 ல் நடந்த முதல் தர கிரிக்கெட் ஒன்றில் ராபர்ட் வேன்ஸ் என்ற பந்து வீச்சாளர் கேன்டர்பேரி என்ற அணிக்கு எதிராக ஒரே ஓவரில் 77 ரன்கள் கொடுத்துள்ளார். மொத்தம் 17 நோ பாலுடன் 22 பந்துகள் வீசிய ராபர்ட், 8 சிக்ஸர்கள் மற்றும் 6 ஃபோர்களை கொடுத்திருந்தார். அப்போதெல்லாம் நோ பாலில் ரன் சேர்க்கப்பட்டால் அந்த பந்திற்கான எக்ஸ்டரா ரன் வராது என்பது குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews