இந்தியா கடைசியா ஜெயிச்ச 9 டி20 உலக கோப்பை போட்டிக்கும்.. மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் உள்ள சூப்பர் ஒற்றுமை..

டி20 உலக கோப்பை தொடரில் தற்போது இந்தியா, தென்னாபிரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. இதில் இங்கிலாந்து அணி ஒரு சில தோல்விகளை சந்தித்து தற்போது அரை இறுதிக்கு முன்னேறி உள்ளது. அவர்களை போல ஆப்கானிஸ்தான் அணியும் சூப்பர் 8 சுற்றின் முதல் போட்டியில் இந்தியாவுக்கு எதிராக தோல்வியடைந்தாலும் அடுத்த இரண்டு போட்டிகளில் தொடர்ச்சியாக வெற்றி பெற்று முன்னேறி உள்ளது.

அதிலும் நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட அணிகளை ஆப்கானிஸ்தான் வீழ்த்தி இருந்தது பெரிய அளவில் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருந்தது. இதே ஃபார்மை அவர்கள் தொடர்ந்தால் நிச்சயம் தென்னாபிரிக்காவுக்கு அதிர்ச்சி கொடுத்து இறுதிப் போட்டிக்கும் முன்னேறிவிடலாம்.

இன்னொரு பக்கம் இந்தியா மற்றும் சவுத் ஆப்பிரிக்கா ஆகிய அணிகள் இந்த டி20 உலக கோப்பை தொடரில் ஒரு போட்டியில் கூட தோல்வி அடையாமல் இருந்து வருகின்றனர். லீக் சுற்றில் நான்கு போட்டிகளிலும் வெற்றி பெற்றிருந்த தென்னாப்பிரிக்க அணி, சூப்பர் 8 சுற்றில் அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஆகிய அணிகளை அடுத்தடுத்து வீழ்த்தி இருந்தது.

இவர்களைப் போல இந்திய அணி லீக் சுற்றில் மூன்று போட்டிகளிலும் சூப்பர் 8 சுற்றில் 3 போட்டிகளிலும் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறி உள்ளதுடன் இங்கிலாந்து அணியையும் சந்திக்க உள்ளனர். ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய அணி இந்த முறை மற்ற அனைத்து அணிகளை விடவும் பேட்டிங், பவுலிங் என அனைத்திலும் அசுரபலத்துடன் திகழ்ந்து வருகிறது.

கடந்த சில ஐசிசி தொடர்களிலும் ஆதிக்கம் செலுத்தி இருந்தாலும் நாக் அவுட் போட்டிகள் என வரும்போது இந்திய அணி வீரர்கள் சொதப்பி இருந்தனர். ஆனால் இந்த முறை எந்த தவறுகளும் நடக்காமல் நிச்சயம் இந்திய அணி இறுதி போட்டியிலும் வெற்றி பெற்று 17 ஆண்டுகளுக்கு பிறகு டி20 உலக கோப்பையைக் கைப்பற்றும் என்றும் தெரிகிறது.

இதனால் ரோஹித் ஷர்மாவின் தலைமை மீதும் மிகுந்த எதிர்பார்ப்பு உள்ள நிலையில் இந்திய அணி கடைசியாக ஆடிய 9 டி20 உலக கோப்பை போட்டிகளுக்கும், மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் உள்ள ஒற்றுமை ஒன்றை பற்றி தற்போது பார்க்கலாம்.

இந்திய அணி நடப்பு டி20 உலக கோப்பை தொடரில் மொத்தம் 6 போட்டிகளில் ஆடியுள்ளது. இதில் முதல் இரண்டு போட்டிகளில் பும்ரா ஆட்டநாயகன் விருது வென்றிருந்தார். அடுத்த போட்டியில் அர்ஷ்தீப் சிங்கும், சூப்பர் 8 சுற்றின் முதல் போட்டியில் சூர்யகுமார் யாதவும், 2 வது போட்டியில் ஹர்திக் பாண்டியாவும், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் ரோஹித் ஷர்மாவும் ஆட்டநாயகன் விருதினை வென்றிருந்தனர்.

இந்த ஆறு போட்டிகளில் ஐந்து முறை ஆட்டநாயகன் விருது வென்றவர்கள் மும்பை இந்தியன்ஸ் அணியை சேர்ந்தவர்கள் தான். அதேபோல கடந்த டி 20 உலக கோப்பை போட்டிகளில் இந்திய அணி கடைசியாக வென்ற மூன்றில் சூர்யகுமார் இரண்டு முறை ஆட்டநாயகன் விருதை வென்றிருந்தார். இப்படி டி20 உலக கோப்பை போட்டிகளில் இந்திய அணி வென்ற 9 ஆட்ட நாயகன் விருதில் 7 முறை மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்கள் தான் அதனை வென்றுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews