தட்கல், ரயில் டிக்கெட் புக்கிங்.. ஐஆர்சிடிசியில் உறவினர்களுக்கு டிக்கெட் முன்பதிவு செய்ய முடியாதா?

டெல்லி: ஐஆர்சிடிசி இணையதளத்தில் ஒருவர் தனது பயனாளர் ஐ.டி.யை பயன்படுத்தி, தன்னுடைய நண்பர்கள், குடும்பத்தினர், உறவினர்களுக்கு டிக்கெட் எடுக்க முடியாது என்று பரவும் தகவல் உண்மையா அல்லது பொய்யா என்று பார்ப்போம்.

ஐஆர்சிடிசி இணையதளத்தில் டிக்கெட் புக்கிங் செய்து ரயிலில் பயணிப்பது என்பது பலருக்கும் சிக்கலான விஷயமாக உள்ளது. ஐஆர்சிடிசி வெப்சைட்டில் உறவினர்கள், நண்பர்கள் மூலமாகவே பலர் எப்படி டிக்கெட் எடுக்கிறார்கள்.

இந்நிலையில் ஐ ஆர் சி டி சி இணையதளத்தில் கணக்கு வைத்துள்ள தனிநபர்கள், வெவ்வேறு குடும்ப பெயர்களுடன் கூடிய மற்றவர்களுக்கு தங்கள் கணக்கில் ரயில்வே இ-டிக்கெட் எடுக்க முடியாது என்று சமூக வலைத்தளங்களில் வேகமாக ஒரு தகவல் பரவி வருகிறது. இதனால் ஐஆர்சிடிசி இணையதளம் பயன்படுத்தி நண்பர்கள், உறவினர்களுக்கு டிக்கெட்டு எடுத்து வந்தவர்கள் கவலையில் உள்ளனர். இந்த செய்தி வதந்தி என்று ரெயில்வே அமைச்சக செய்தித் தொடர்பாளர் மறுத்துள்ளார்,

இது தொடர்பாக அவர் கூறுகையில், ஐ ஆர் சி டி சி இணையதளத்தில் கணக்கு வைத்துள்ளவர்கள், மற்றவர்களுக்கும் தங்கள் கணக்கில் இ-டிக்கெட் எடுக்கலாம். இதற்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டதாக வெளியாகி உள்ள தகவல் தவறானது. ஒருவர் தனது பயனாளர் ஐ.டி.யை பயன்படுத்தி, தன்னுடைய நண்பர்கள், குடும்பத்தினர், உறவினர்கள் என யாருக்கு வேண்டுமானாலும் ஐஆர்சிடிசி தளத்தின் மூலம் இ-டிக்கெட் எடுக்கலாம். ஒருவரின் கணக்கில் இருந்து மாதத்துக்கு 12 இ-டிக்கெட் வரை பதிவு செய்யலாம்.

கணக்கு வைத்திருப்பவர் ஆதார் மூலம் உறுதி செய்யப்பட்டவராக இருந்தால், மாதத்துக்கு 24 இ-டிக்கெட் வரை எடுக்கலாம். ஆனால், ஒவ்வொரு டிக்கெட்டிலும் ஒரு பயணியாவது ஆதார் மூலம் உறுதி செய்யப்பட்டவராக இருத்தல் வேண்டும். அதே சமயத்தில், இந்த டிக்கெட்டுகளை வணிக ரீதியாக விற்கக்கூடாது. அப்படி செய்வது ரயில்வே சட்டப்படி குற்றச்செயல் ஆகும்” என்றார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews