அப்பாவின் வழியில் செல்லத் தயாராகும் ஹிப் ஹாப் ஆதி.. PT சார் எடுத்த அந்த திடீர் முடிவு

மேற்கத்திய நாடுகளில் மட்டுமே பிரபலமாக இருந்த பாப் இசையை தமிழில் கிளப்புல மப்புல பாடலின் மூலம் கடைக்கோடி தமிழனுக்கும் அறிமுகப்படுத்தியவர் இசையமைப்பாளர், பாடகர், நடிகர், பாடலாசிரியர் என பன்முகம் கொண்ட ரங்காதித்யா என்ற ஆதி. ஹிப் ஹாப் தமிழன் என்ற பெயரில் ஜீவா மற்றும் ஆதி ஆகிய இருவரும் பல புகழ்பெற்ற ஆல்பம் பாடல்களை இயற்றினர். இவரது பாடல்கள் அனைத்தும் திரையிசைப் பாடல்களைத் தாண்டி சக்கைப் போடு போட்டது. மேலும் இணைய உலகமும் இவருக்குக் கை கொடுக்க மளமளவென வளர்ந்தார் ஹிப் ஹாப் ஆதி.

இவரது திறமையை அறிந்த இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி ‘நான்’ படத்தில் தப்பெல்லாம் தப்பே இல்லை என்ற பாடலைப் பாட வைத்தார். இந்தப் பாடல் ஹிட்டானது. தொடர்ந்து அனிருத் எதிர்நீச்சல் படத்தில் டைட்டில் டிராக்கை பாட வைத்தார். இந்தப் பாடலும் ஹிட் ஆக சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார் ஆதி.

தொடர்ந்து சுந்தர் சி இவரை தனது அடுத்தடுத்த படங்களில் இசையமைப்பாளராக அறிமுகப்படுத்தினார். ஆம்பள, கத்தி சண்டை போன்ற படங்களுக்கு இசையமைத்தார். எனினும் இவரது புகழ் தனி ஒருவன் படத்தின் மூலம் உலகெங்கும் பரவியது. இப்படத்தின் ஆல்பம் ஹிப் ஹாப் ஆதியை பிரபலப்படுத்தியது.

இவரது தந்தை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணிபுரிகிறார். தன் மகனின் இசை ஆர்வத்தை ஊக்குவித்து சென்னை அனுப்பி அவரது வளர்ச்சிக்கு உற்ற துணையாக இருந்திருக்கிறார். இதனை அடிப்படையாக வைத்தே மீசைய முறுக்கு படத்தை இயக்கி நடித்து, இசையமைத்தார் ஹிப் ஹாப் ஆதி.

இத மட்டும் நான் செய்யாம இருந்திருந்தா.. திருமண வாழ்க்கை குறித்து ரேவதி உடைத்த ரகசியம்

இந்தப் படம் விமர்சன ரீதியாகவும், வசூல்ரீதியாகவும் வெற்றி பெற்றது. தொடர்ந்து சில படங்களில் நடித்தார். எனினும் அப்படங்கள் சரியாகப் போகவில்லை. இந்நிலையில் கடந்த மாதம் ரிலீஸ் ஆன PT சார் படம் இவருக்கு நல்ல அடையாளத்தினைக் கொடுத்தது.

இப்படத்தில் உடற்கல்வி ஆசிரியர்களைப் பெருமைப்படுத்தும் விதமாக நடித்திருந்தார் ஆதி. எனவே தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர்கள் சங்கம் மற்றும் உடற்கல்வி இயக்குநர்கள் சங்கம் சார்பில்இவருக்குப் பாராட்டு விழா நடைபெற்றது. இதில் பேசிய ஆதி, நான் ஒரு ஆசிரியராக நடித்த போதுதான் அந்தப் பணி எவ்வளவு ஆத்மார்த்தமானது என்பதைப் புரிந்து கொண்டேன். எனது தந்தையும் ஒரு பேராசிரியர்தான்.

இன்னும் மூன்று வருடங்களுக்கு நான் சினிமாவில் நடிப்பேன். தற்போது பி.எச்.டி படித்துக் கொண்டிருக்கிறேன். அது முடிந்த பின் எனது தந்தை வழியில் ஆசிரியர் பணியைத் தொடர விரும்புகிறேன் என்று அந்த நிகழ்ச்சியில் கூறினார் ஆதி. வணிகவியல் மேலாண்மையில் முதுகலைப் பட்டம் முடித்துள்ள ஆதி தற்போது ஒப்புக் கொண்ட படங்களுக்கு இசைப் பணிகள், நடிப்பு முடித்து விட்டு ஆசிரியர் பணியைத் தொடர்வார் என்று எதிர்பார்க்கலாம். மேலும் நுழைவுத் தேர்வுகளிலும் சிறந்த மதிப்பெண்களைப் பெற்றிருக்கிறார் ஆதி.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews