வேலை கிடைக்காத விரக்தி… சோலியை முடிக்க பார்த்த கும்பல்.. ஆடிப்போன ஃபாக்ஸ்கான் இந்தியா விளக்கம்

சென்னை: திருமணமான பெண்களை பணியமர்த்தவில்லை என்ற குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுத்துள்ள ஃபாக்ஸ்கான் இந்தியா , தங்கள் நிறுவனத்தில் புதிதாக பணியமர்த்தப்பட்டவர்களில் 25% பேர் திருமணமான பெண்கள் என்று தற்போது விளக்கம் அளித்திருக்கிறது. முன்னதாக மத்திய அரசு ஊடகங்களில் வந்த செய்திகளின் அடிப்படையில் நோட்டீஸ் அனுப்பி இருந்தது.

ஆப்பிள் ஐபோன் தொழிற்சாலையான ஃபாக்ஸ்கான் இந்தியா நிறுவனத்தில் திருமணமான பெண்கள் பணியாற்ற அனுமதிப்பதில்லை என்று சில ஊடகங்களில் செய்திகள் வெளியானது.இதனை அடிப்படையாக வைத்து மத்திய தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம், ஃபாக்ஸ்கான் இந்தியா நிறுவனத்தில் ஆய்வு செய்து விரிவான அறிக்கை தாக்கல் செய்யுமாறு தமிழக அரசின் தொழிலாளர் நலத்துறைக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

1976-ம் ஆண்டின் சமவேலைக்கு சமஊதியம் சட்டத்தின் பிரிவு-5ன் படி ஆண் மற்றும் பெண் தொழிலாளர்களை பணிக்கு அமர்த்தும் போது, பாகுபாடு காட்டக்கூடாது என்பது விதியாகும். இந்தச் சட்டத்தின் அம்சங்களை அமல்படுத்துதல் மற்றும் நிர்வகித்தலுக்கு உரிய அதிகாரம் கொண்டது மாநில அரசு ஆகும். எனவே அதனிடமிருந்து அறிக்கை கோரப்பட்டுள்ளது என்று நோட்டீஸ் குறித்து மத்திய அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் ஃபாக்ஸ்கான் இந்தியா, தங்களது நிறுவனத்தில் புதிதாக பணியமர்த்தப்பட்டவர்களில் 25% பேர் திருமணமான பெண்கள். மொத்தப் பெண் பணியாளர்களில் மூன்றில் ஒரு பங்கினர் திருமணமானவர்கள் என்பதே இதன் அர்த்தம் என்றும், நிறுவனத்தின் மொத்த பணியாளர்களில் 70% பெண்கள் தான் என்றும் கூறியுள்ளது. 30% மட்டுமே ஆண்களே தங்கள் நிறுவனத்தில் வேலை செய்வதாகவும், தங்கள் நிறுவனத்தில் வேலை கிடைக்காத சிலர் இதுபோன்ற வதந்திகளை பரப்பியிருக்கலாம் என்று ஃபாக்ஸ்கான் இந்தியா மறுத்துள்ளது.

அதுமட்டுமின்றி நாட்டிலேயே பெண்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் மிகப்பெரிய தொழிற்சாலையாக தமிழகத்தில் அமைந்துள்ள ஃபாக்ஸ்கான் இந்தியா உருவெடுத்துள்ளது என்றும் கூறியுள்ளது. ஆலையில் பணியாற்றும் பணியாளர்கள் எந்த அடையாள சின்னங்களையும் அணிய தடை விதிக்கப்பட்டிருப்பதாக எழுந்த குற்றச்சாட்டை மறுத்துள்ள ஃபாக்ஸ்கான் இந்தியா, “மதம் சார்ந்து இந்த தடை விதிக்கப்படவில்லை என்றும் பாதுகாப்பு காரணமாகவே இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளது.

உற்பத்தி நிறுவனம் என்பதால், பணியாளர்கள் எந்தவித உலோகங்களையும் அணியக்கூடாது என்று கூறப்பட்டுள்ளது. அனைத்து மதத்தினருக்கும் இந்த தடை பொதுவானது தான் என்றும் பல நிறுவனங்களில் இதுபோன்ற நடைமுறை வழக்கத்தில் உள்ளதாகவும் பாக்ஸ்கான் இநதியா கூறியுள்ளது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews