கால பைரவருக்கு உகந்த அஷ்டமி வழிபாட்டின் சிறப்புகள் பற்றி தெரியுமா…?

சிவபெருமானின் அம்சமான பைரவர் என்றால் பக்தர்களின் பயத்தை நீக்குபவர் என்று பொருள். காலத்தின் கடவுளான கால பைரவர் தலை விதியை மாற்றக் கூடிய ஆற்றல் கொண்டவர். நவகிரஹங்களையும், நட்சத்திரங்களையும், கட்டுப்படுத்தும் வல்லமை கால பைரவருக்கு உண்டு. நாய் வாகனத்துடன் நின்ற கோலத்தில் பன்னிரு கைகளுடன் நாகத்தை பூணூலாகவும், சந்திரனை தலையில் வைத்தும், சூலாயுதம், பாசக் கயிறு, அங்குசம் ஆகிய ஆயுதங்களை தாங்கி காட்சித் தருபவர்.

சனீஸ்வர பகவானின் குரு கால பைரவர் என்பதால், இவரை வணங்கும் பொழுது சனீஸ்வரன் மகிழ்ந்து நமக்கு அதிக துன்பங்களைத் தரமாட்டார். சனிக்கிழமைகளில் கால பைரவரை வணங்கி வர சனி பகவானால் ஏற்படும் ஏழரை சனி, அஷ்டம சனி, அர்த்தாஷ்டம சனி, கண்ட சனி ஆகியவற்றின் பதிப்புகளில் இருந்து விடுபடலாம். கால பைரவரின் அருள் இருந்தால் அஷ்ட சித்தியும் கைகூடும் என்பது ஐதீகம்.

கால பைரவர் அவதரித்த நாளான கார்த்திகை மாதம் வரக்கூடிய தேய்பிறை அஷ்டமி நாள் மகா காலபைரவாஷ்டமியாக வழிபாடு செய்யப்படுகிறது. அது மட்டுமல்லாமல் ஒவ்வொரு மாதமும் வரக்கூடிய தேய்பிறை அஷ்டமி மற்றும் வளர்பிறை அஷ்டமி நாட்கள் கால பைரவரை வழிபடுவதற்கு உகந்த நாட்களாகும். அந்த நாட்கள் பைரவாஷ்டமி என்று சொல்லப்படுகிறது.

பன்னிரண்டு ராசிகளையும் தன் உடம்பில் அங்கங்களாக கொண்டவர் கால பைரவர். தீராத பிரச்சனை, வாழ்வில் துன்பங்களால் அவதிப்படுபவர்கள் தேய்பிறை அஷ்டமி அன்று கால பைரவரை வழிபட்டு வந்தால் நம் பிரச்சனைகள் எல்லாம் தேய்ந்து காணாமல் போகும். அதே போல் வளர்பிறை அஷ்டமி அன்று வழிபட்டால் நம் தொழில், இன்பம், செல்வம் பன் மடங்காக பெருகும். அன்று எக்காரணம் கொண்டும் நம் குறைகளை கூறி வழிபடக்கூடாது. கால பைரவருக்கு மிளகு தீபம் ஏற்றி வழிபடுவது சிறப்பான ஒன்றாகும்.

தாமரைப்பூ மாலை, வில்வ மாலை, தும்பைப்பூ மாலை, சந்தன மாலை, ஆகியவை கால பைரவருக்கு உகந்தது ஆகும். மல்லிகை பூக்களை தவிர மற்ற பூக்களை கால பைரவருக்கு சமர்ப்பிக்கலாம். வீட்டிலே கால பைரவரை வழிபட நினைப்பவர்கள் தேய்பிறை அஷ்டமி அன்று ராகு கால வேளையில் வீட்டு பூஜையறையில் ஐந்து எண்ணெய் விளக்கேற்றி செந்நிற மலர்கள் சாற்றி மிளகில் செய்த நெய்வேத்தியத்தைப் படைத்து காலபைரவாஷ்டகம் சொல்லியும், பைரவர் போற்றியை துதித்தும் ஆத்மார்த்தமாக நமது கஷ்டங்களைச் கூறி பிரார்த்தனை செய்யலாம்.

மேலும் அஷ்டமி வழிபாட்டிற்குப் பின்பு கால பைரவரை நினைத்துக் கொண்டு கருப்பு நிற தெரு நாய்களுக்கு உணவு, பிஸ்கட் வழங்குவது மற்றும் இயலாதவர்களுக்கு அன்னதானம் வழங்குவது அனைத்து கிரக தோஷங்களில் இருந்து நம்மளை விளக்கி மேன்மையான வாழ்வை கால பைரவர் வழங்குவார் என்பது சாஸ்திர உண்மையாகும்.

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.