“சாகச விளையாட்டு போதை” பற்றி உங்களுக்கு தெரியுமா?

ஓடும் ரயிலுக்கு அருகில் செல்ஃபி எடுப்பது, சாலையில் செல்லும் வாகனத்துடன் சேர்ந்து ஸ்கேட்டிங் செய்வது, டூவீலர் ரேசிங், வீலிங், விமானத்தில் இருந்து பாராசூட் மூலம் குதித்து காற்றில் பறப்பது, கடலுக்கடியில் ஸ்கூபா டைவிங் செல்வது, உயரமான கட்டிடங்களை எந்தவித பாதுகாப்பு உபகரணங்களும் இல்லாமல் தாண்டி தாண்டி செல்வது போன்ற சாகச விளையாட்டுக்களின் விடியோக்களை சமீபத்தில் பார்க்க நேரந்தது. இவற்றை பார்க்கும் யாருக்கும் நாமும் இதை செய்து பார்க்கலாமே என்ற ஆசை இயல்பாக எழுகிறது.

விளையாட்டை வெறும் பொழுது போக்காக பார்க்காமல் ஒருவித அதிகப்படியான ஆர்வத்தால் உயிரை பணயம் வைத்து விளையாடக்கூடிய விளையாட்டுகள் மீது இளைஞர்கள் தங்கள் கவனத்தை திருப்பியுள்ளனர்.

உடலை பயன்படுத்தி விளையாடும் விளையாட்டுக்கள் மற்றும் மூளையைப்பயன்படுத்தி விளையாடும் விளையாட்டுக்கள் என இரண்டு வகையில் உள்ள விளையாட்டுகளில் மேற்கூறப்பட்ட ஆபத்துக்கள் நிறைந்த சாகச விளையாட்டுகள் பற்றியும் அதன்மேல் ஆர்வம் எப்படி ஏற்படுகிறது அதற்கான மனரீதியான காரணங்கள் என்ன என்பதெல்லாம் பற்றி நாம் விரிவாக பார்ப்போம்.

மனிதனாக பிறந்த ஒவ்வொருவருக்கும்  “அட்டென்ஷன் சீக்கிங்” எனப்படும் தன்னை முன்னிலைப்படுத்தி அனைவரது கவனமும் நம் மேல் விழவேண்டும் என்று விரும்பும் விதமான ஆழ்மனது ஆசை உள்ளது. இந்த அடிப்படையான ஆசையை ஒரு சிலர் பொருட்படுத்துவதில்லை மற்றும்  வேறு சிலர் எவ்வாறு செய்வது என்று தெரியாமல் விட்டு விடுகின்றனர். இதுபோன்ற சாகச விளையாட்டுகளுக்கு உடலுறுதியுடன் சேர்த்து மன உறுதியும் அதிகமாக தேவை.  மனத்தையும் உடலையும் ஒரே சமயத்தில் ஒருங்கிணைத்து விளையாடும் போது எந்த விதமான ஆபத்தாக இருந்தாலும் அதிலிருந்து தப்பிக்க முடிகிறது.

இதுபோன்ற சாகச விளையாட்டுகளுக்கு எடுத்துக்காட்டாக பங்கி ஜம்பிங், ஸ்கை டைவிங், பார்க்கர், ஸ்கேட்டிங் ஆன் ரோட் போன்றவற்றைக்கூறலாம். இப்போது மிகவும் ட்ரெண்டிங்காக உள்ள பார்க்கர் (உயரமான கட்டிடங்களில் இருந்து குதித்து தாண்டி வேகமாக ஓடுதல்-எந்த வித பாதுகாப்பு உபகரணங்களும் இல்லாமல்) கற்றுக்கொள்ள ஆர்வமாக உள்ளவர்களின் எண்ணிக்கை கோடிக்கணக்கில்.

உயிரைப் பணயம் வைத்து ஆபத்தான விளையாட்டுகளை விளையாடுவது என்பது இயல்புக்கு மாறானது என விஞ்ஞானிகளும் மனோதத்துவ நிபுணர்களும் ஒப்புக்கொள்கிறார்கள். மேலும் பெரும்பாலோனோர் தங்கள் உயிர் போகும் அளவுக்கு படுகாயமடைந்து, சிகிச்சை பெற்ற பிறகும், மறுவாழ்வு மையங்களிலும் நீண்ட காலம் தங்கியிருந்த பின்பும் இந்த ஆபத்தான விளையாட்டுகளில் மறுபடியும் ஈடுபட துவங்குவது என்பது, அவர்களது சிந்தனைத் திறன் அல்லது உளவியலில் உள்ள குறைபாட்டையே காட்டுகிறது.

சரி இதெல்லாம் வெளி நாட்டு சமாச்சாரம் என்றாலும், ஒகேனக்கலில் உயரமான பாறை மீதிருந்து ஆற்றுக்குள் அப்படியே டைவ் அடிக்கும்  சிறுவர்களைப் பார்த்து இருக்கிறீர்களா? ஆமாம் அதுவும் கூட ஒருவகை சாகச விளையாட்டுதான். மேலும் உலக மக்கள் கவனத்தையே ஈர்த்த நம் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு? ஆபத்தானது என்று நாம் அனைவரும் அறிவோம். உயிருக்கு ஆபத்தானவிளையாட்டு என்று தெரிந்தும் ஏன் அதை மீண்டும் மீண்டும் விளையாடுகிறார்கள்.

மற்றவர்களின் கவனத்தை ஈர்க்க வேண்டும், பாராட்டை பெற வேண்டும், அதில் இரு த்ரில் இருக்கிறது, சுவாரஸ்யமாக இருக்கிறது, என் நண்பர்களை உற்சாகப்படுத்துகிறேன், என்னை யாரும் கட்டுப்படுத்த முடியாது-எனக்கு விருப்பமானதை செய்கிறேன்;செய்வேன் என்பன போன்ற பல்வேறு பதில்களை இது போன்ற சாகச விளையாட்டு வீரர்கள் தெரிவிக்கிறார்கள்.

இணையத்தில் பதிவேற்றப்படும் இவ்வகையான விளையாட்டுகளின் வீடியோக்களால் கவரப்பட்டு நாமும் இதுபோல செய்ய வேண்டுமென்ற ஆர்வம் ஏற்படுவதாக இவ்விளையாட்டுகளில் ஈடுபவர்கள் தெரிவிக்கின்றனர்.

காரணங்கள் என்ன?

அதிகபட்சமாக டீனேஜ் முதல் 25 வயதுக்குட்பட்டவர்களே மிகுந்த ஆர்வத்துடன் இதில் ஈடுபடுகின்றனர். மனிதன் மட்டுமல்லாது பல்வேறு உயிரினங்களும் பாலின ஈர்ப்பை ஏற்படுத்துவதற்காக பல்வேறு சாகசங்களைச் செய்கின்றன. பல்வேறு சாகசங்களை செய்து காட்டுவதன் மூலம் தன்  இணையை கவர்தல் என்பதன் ஒரு மாறிய வடிவம் தான் இது.

வளரிளம் பருவத்தின் போது உடலில் ஏற்படும் உயிரியல் மற்றும் வேதியியல் மாற்றங்கள் அபாயகரமான விளையாட்டுகள் மீது ஆர்வம் ஏற்பட ஒரு முக்கிய காரணியாக விளங்குகின்றன. மூளை மற்றும் உடலில் சுரக்கும் ஹார்மோன்களால் நடைபெறும் இந்த செயல்முறைகளால் உளவியல் மற்றும் சமூகத்தில் ஏற்படும் தாக்கங்கள் ஆகியவற்றின் சூழலில் புரிந்து கொள்ளப்பட வேண்டும்.

சிறு வயதில் இதுபோன்ற சாகச விளையாட்டுக்களை கணினி அல்லது மொபைல் போனில் விளையாடும் குழந்தைகள் பெரியவர்களானதும் உண்மையாக ஏற்படும் ஆபத்தை உணராமல் நிஜ விளையாட்டுக்களில் ஈடுபடும்போது பாதிக்கப்படுகிறார்கள்.

பெற்றோர்களால் புறக்கணிக்கப்படும் பிள்ளைகள் அல்லது பெற்றோர்களின் வார்த்தைகள் மற்றும் அறிவுரைகளை பொருட்படுத்தாத பிள்ளைகள் சீக்கிரமாகவே இதற்கு அடிமையாகி விடுகின்றனர்.

நண்பர்களின் ஊக்கம் காரணமாகவும் அவர்கள் அளிக்கும் அதீத பாராட்டுகளாலும் கவரப்படுகின்றனர். வளரிளம் பருவத்தில், வயதானவர்களை விட மூளையின் பகுதிகளில், துயரத்தைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் குறைவாகவே இருக்கிறது. தங்கள் நண்பர்களை விட்டு தள்ளி இருப்பது அல்லது விலக்கப்படுவதை தடுக்க இது போன்ற ஆபத்தான நடத்தைகளில் அவர்கள் பெரும்பாலும் ஈடுபடுகின்றனர்.

பல ஆண்டுகளுக்கு முன்னர் சக்திமான் என்ற தொலைக்காட்சி தொடரை பார்த்த சிறுவர்கள் தானும் அதே போன்று செய்ய முயன்று கீழே விழுந்து அடிபட்ட நிகழ்வுகளின் தொடர்ச்சி தான் இந்த விளையாட்டுக்களின் நீட்சி.

காரணங்கள் என்று சிலவற்றைக் கூறினாலும் சில நிமிட உற்சாகம் மற்றும் அது கொடுக்கும் த்ரில் அனுபவம் ஆகியவை தான் இது போன்ற உயிரை துச்சமாக நினைத்து விளையாடும் விளையாட்டுகளில் முக்கிய கவர்ச்சியூட்டும் விஷயமாக உள்ளது.

இவ்விளையாட்டுக்கள் மீதான அதீத ஆர்வம் கல்வி உள்ளிட்ட இன்னும் பிற திறன்களில் பின்னடவை ஏற்படுத்துகின்றன. வயதில் மூத்தவர்களின் அறிவுரை மற்றும் வழிகாட்டலைகளை ஏற்கக்கூடிய மனநிலை இல்லாமல் போகிறது.

சாகச விளையாட்டுகளில் பங்கேற்பவர்களை பெரும்பாலும் எதிர்மறையான முறையில், அவர்களுக்கு பைத்தியம் பிடித்து விட்டது என்பது போன்ற ரீதியில் குடும்பம் மற்றும் நண்பர்களல் சித்தரிக்கப்படுகிறார்கள்.

என்ன செய்ய வேண்டும்?

  • பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் எந்தவொரு சாகச விளையாட்டிலும் ஈடுபட கூடாது.
  • முறையான பயிற்சி எடுக்காமல் விளையாட ஆரம்பிக்க கூடாது.
  • படிப்படியாக ஈடுபடவேண்டும்.
  • உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் ஏற்படும் மாற்றங்களைக் கண்டறிந்து அவற்றை சரியான வழியில் கையாள வேண்டும்.
  • இந்த விளையாட்டு நமக்கு தேவையா இல்லையா என சரியாக முடிவெடுக்க வேண்டும். ஒருவேளை உங்களால் சரியான முறையில் விளையாட முடியாது என்று தோன்றினால் கண்டிப்பாக பங்கேற்க கூடாது.
  • பயத்தை உதாசீனம் செய்யக் கூடாது. பயப்பட வேண்டியவற்றுக்கு பயம் தேவைதான்.
  • உங்கள் உடலும் மனமும் பயத்தை எதிர்கொள்ளத்தக்க அளவுக்கு உறுதியாக இருக்கவேண்டும். இல்லாவிட்டால் பயம் மற்றும் பதட்டத்தினாலேயே எந்தவிதமான விபரீதங்களும் கூட நிகழக்கூடும்.
  • சாகச விளையாட்டில் பங்கேற்பவர்கள் இவற்றை செயல்படுத்துவதை நிறுத்தும்போது, மூளையில் நல்ல வேதிப்பொருட்கள் சுரப்பு தடைபடும். இவற்றில் இறுதியில் பெறும் வெற்றியால் டோபமைன் “இயற்கை உயர்த்தி” என்ற ஹார்மோன் தூண்டப்பட்டு சுரக்கப்படும். நேர்மறையான விளைவுகள் மிகவும் வலுவானவை மற்றும் அவை நீண்ட கால கடுமையான காயம் அல்லது மரணத்தின் அபாயத்தை வெற்றிகரமாக வென்றெடுக்கின்றன

இந்த விளையாட்டுக்களை ஆரம்பிக்கும் முன்:

எந்தவொரு ஆபத்தான செயலிலும் ஈடுபடுவதற்கு முன்பு, அதில் என்னென்ன ஆபத்துகள் இருக்கின்றன என்று தெரிந்துகொள்ளுங்கள்.

‘இதை செய்வதால் என் உயிருக்கு ஆபத்து வருமா, ஏதாவது பலமான அடிபடுமா?’ என்று உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள். மேலும் பலமாக அடிபட்டால் அதிலிருந்து மீண்டு வரும் அளவுக்கு மன உறுதியும் பொருளாதார வசதியும் இருக்கிறதா? நம் பெற்றோர் அல்லது சார்ந்தவர்களுக்கு இதனால் என்ன பிரச்சனைகள் ஏற்படும்?, வழக்கமான வாழ்க்கையில் இதனால் ஏற்படும் இடையூறுகள் என்ன? 

உங்கள் நண்பர்கள் இது போன்ற ஆபத்தான சாகசங்களில் ஈடுபட ஆசைபட்டால் அவர்களுக்கு உற்சாகமும் ஊக்கமும் அளிக்க வேண்டாம். எந்தவொரு ஆபத்தான செயலிலும் ஈடுபடும்படி உண்மையான நண்பர்கள் தூண்ட மாட்டார்கள்.

இறைவன் அளித்த உயிரையும் உடலையும் பழுதாக்கி கொள்ள எந்த வித உரிமையும் இல்லை.

நீங்கள் இந்த சாகசத்திற்கு அடிமையாகிவிடக்கூடும். இதில் பங்கேற்பது சிறிது நேரத்துக்கு அதிக மகிழ்ச்சியை அளித்தாலும், இன்னும் இன்னும் கூடுதல் அனுபவத்தைப் பெற வேண்டும் என்ற தீராத ஆசையை உங்களுக்குள் ஏற்படுத்தக் கூடும்.

சாகச விளையாட்டுக்கள் பற்றிய தகவல்களை இன்டர்நெட்டில் வெளியிடுவதன் மூலம் சிலர் மற்றவர்களுக்கு அழுத்தம் தருகிறார்கள். இந்த விளையாட்டுகளில் ஈடுபடுகிறவர்களைப் பற்றி புகழ்ந்து பேசுகிறார்கள்; மேலும் இதனால் பெரிய ஆபத்து எதுவும் இல்லை என்றும் சொல்கிறார்கள். இது அவர்களுக்கு பேரையும் புகழையும் பெற்றுத்தருகிறது. ஆனால் இவ்வாறு செய்வது தவிர்க்கப்பட வேண்டும்.

உயிருக்கு ஆபத்து வராத வகையில் உள்ள எந்தவொரு திறமையையும் வெளிப்படுத்துபவரே புத்திசாலி. உங்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளை எப்படி நீங்கள் எதிர்கொள்கிறீர்கள் என்பதில் தான் உங்கள் திறமை உள்ளதேயன்றி; நீங்கள் செய்யும் ஆபத்தான சாகசங்களில் அல்ல. உங்கள் மீது உண்மையான அக்கறை உடையவர்கள் எப்போதுமே இது போன்ற உங்களின் முட்டாள் தனத்துக்கு உதவி செய்ய மாட்டார்கள்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...