8 வருசத்துல இந்தியாகிட்ட மட்டும் பலிக்காத ஜாம்பாவின் பாச்சா.. எல்லாத்துக்கும் காரணம் கோலி, ரோஹித்தா..

டி20 உலக கோப்பை தொடரின் முதல் அரை இறுதி போட்டி முடிவுக்கு வந்திருந்த நிலையில் ஆப்கானிஸ்தான் அணி, 56 ரன்களில் ஆல் அவுட்டாக, மிக எளிதாக இலக்கை எட்டிப்பிடித்ததுடன் முதல்முறையாக ஐசிசி தொடரின் இறுதி போட்டிக்கும் முன்னேறி இருந்தது மார்க்ரம் தலைமையிலான தென்னாபிரிக்க அணி. இதனிடையே இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் இரண்டாவது அரையிறுதி போட்டி மீதும் மிகுந்த எதிர்பார்ப்பு உருவாகி உள்ளது.

2022 ஆம் ஆண்டு அரை இறுதி போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக தோல்வி அடைந்ததற்கு பழிதீர்க்கவும் இந்திய அணியின் ரோஹித் படை காத்து வருகிறது. இதனால் இந்த போட்டி மீது ஆவல் அதிகமாக இருந்து வரும் அதே வேளையில் மழை காரணமாக போட்டி ரத்தாகலாம் என்றும் தகவல்கள் வெளியாகி வருகிறது.

இரண்டாவது அரை இறுதி போட்டி நடைபெற உள்ள கயானா மைதானம் மழையால் சூழப்பட்டு இருக்கும் நிலையில் இரவு போட்டி தொடங்கும் நேரத்தில் எப்படி வானிலை எப்படி இருக்கும் என்பதும் புதிராக தான் உள்ளது. நிலைமை எப்படியாக இருந்தாலும் இந்திய அணி வெற்றி பெற்று இறுதிப் போட்டியில் தென் ஆப்பிரிக்காவை சந்திக்க வேண்டும் என்று தான் அனைவரும் எதிர்பார்த்து வருகின்றனர்.

இங்கிலாந்து அணியை எப்படி அரையிறுதி போட்டியில் பழி வாங்க வேண்டுமென ரசிகர்கள் காத்துக் கொண்டிருந்தார்களோ அதே போல தான் சூப்பர் 8 சுற்றின் ஒரு போட்டியும் அமைந்திருந்தது. கடந்த ஆண்டு இரண்டு ஐசிசி கோப்பைகளை ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இறுதி போட்டியில் இழந்திருந்தது இந்திய அணி.

அப்படி ஒரு நிலையில், அவர்களுக்கு எதிராக சூப்பர் 8 சுற்றில் இந்திய அணி ஆட இருப்பது உறுதியான நாள் முதலே இந்த போட்டி மீதான எதிர்பார்ப்பும் அதிகமாக இருந்தது. அது மட்டுமல்லாமல், இந்தியாவுக்கு எதிராக ஆஸ்திரேலியா தோல்வி அடைந்தால் அவர்களின் அரையிறுதி வாய்ப்பும் பறிபோகும் என்ற சூழலும் இருந்தது.

முதலில் பேட்டிங் ஆடிய இந்தியா, ரோஹித்தின் அதிரடியால் 205 ரன்கள் எடுக்க, அதனை எட்ட முடியாமல் தோல்வி அடைந்து தங்களின் அரையிறுதி வாய்ப்பையும் பின்னர் இழந்திருந்தது ஆஸ்திரேலியா. அப்படி ஒரு முடிவு இங்கிலாந்திற்கு அமைய வேண்டும் என்பது தான் பலரின் விருப்பமாக உள்ளது. இதனிடையே, டி 20 உலக கோப்பையில் இந்தியாவிற்கு எதிராக மட்டும் பலிக்காமல் போன ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் ஆடம் ஜாம்பாவின் மேஜிக் பற்றி தற்போது பார்க்கலாம்.

கடைசியாக ஆடம் ஜாம்பா ஆடிய 20 டி 20 உலக கோப்பை போட்டிகளில் 18 ல் அவர் விக்கெட் எடுத்திருந்தாலும் 2 போட்டிகளில் மட்டும் அவரால் விக்கெட் எடுக்க முடியவில்லை. 2016 ஆம் ஆண்டு மற்றும் நடப்பு டி 20 உலகக் கோப்பை தொடர் என இந்தியாவுக்கு எதிரான 2 போட்டிகளில் தான் ஜாம்பாவால் அது நிறைவேறாமல் போனது. மேலும், 2016 ல் கோலியும், 2024ல் ரோஹித்தும் அதிரடி ஆட்டத்தை ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கையில் எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews