வீட்டில் பிறந்த அல்லது சிறு குழந்தைகள் இருந்தால் அவர்கள் வளரும் காலத்தில் அவர்களுக்குப் போதுமான ஊட்டச்சத்து கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். 

பிறந்த குழந்தைக்கு முதல் ஆறுமாதங்கள் தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும். 

குழந்தை பிறந்து ஒரு மணி நேரத்தில் தாய்ப்பாலூட்டத் தொடங்க வேண்டும். சீம்பாலைக் கொடுக்கத் தவறக்கூடாது. அது குழந்தைக்கு நோய்த்தடுப்பு ஆற்றலை அளித்துப் பல தொற்றுக்களைத் தடுக்கிறது. 

தாய்ப்பால் மட்டுமே கொடுத்து வருவதால் குழந்தைக்குப் பாதுகாப்பான ஊட்டம் கிடைத்து தொற்று ஆபத்து குறைவதோடு குழந்தைகள் முழு வளர்ச்சி பெற வழி வகுக்கிறது. 

தாய்ப்பால் அருந்தும் குழந்தைக்கு கூடுதலாகத் தண்ணீர் கொடுக்க வேண்டியதில்லை. 

தாய்ப்பாலைத் தொடர்ந்து கொடுத்து வரும் வேளையில் ஆறு மாதத்துக்குப் பின் கூடுதல் உணவை அளிக்கத் தொடங்கலாம். 

கூடுதல் உணவில் ஊட்டச்சத்துக்கள் போதுமான அளவிற்கு இருக்க வேண்டும். இந்தக் கூடுதல் உணவை  தானியம் (கோதுமை, அரிசி, சோளம், தினை), பருப்பு வகை, கொட்டை, எண்ணெய்வித்து (நிலக்கடலை, எள்), எண்ணெய் (கடலை எண்ணெய், எள் எண்ணெய்), சர்க்கரை மற்றும் கருப்புக்கட்டி இவற்றை வைத்து சமைக்க வேண்டும்.  

குழந்தைக்கு மென்மையான பொருட்களான உருளைக்கிழங்கு, கஞ்சி, தானியம் அல்லது முட்டையும் கூட அளிக்கலாம்.