போனி கபூர் தயாரிப்பில், ஹெச் வினோத் இயக்கத்தில் ‘வலிமை’ படத்தைத் தொடர்ந்து நடிகர் அஜித் நடித்து வரும் திரைப்படம் ‘ஏகே 61’. 

இந்தப் படத்தில் மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி, ஜான் கொக்கன், பகவதி பெருமாள், மகாநதி சங்கர், ஜி.எம். சுந்தர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.  

இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத், சென்னை உள்ளிட்டப் பகுதிகளில் நடைபெற்று வருகிறது. ‘ஏகே 61’ படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கைதராபாத்தில் முடிவடைந்தநிலையில், ஐரோப்பியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட அஜித், பின்னர் இரண்டாம் கட்ட படப்பிடிப்புக்காக விசாகப்பட்டிணம் சென்றார். 

இதனைத் தொடர்ந்து அடுத்தக்கட்ட படப்பிடிப்பு வெளிநாடுகளில் நடைபெற உள்ளநிலையில், தற்போது மீண்டும் இமயமலைப் பகுதிகளில் பைக்கில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார் நடிகர் அஜித். 

குறிப்பாக லடாக் பகுதியில் நடிகர் அஜித் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வரும் புகைப்படங்கள் வெளியாகி வருகின்றன. இந்த சுற்றுப் பயணத்தில் நடிகை மஞ்சு வாரியரும், அவரது குழுவினருடன் இணைந்துள்ளார்.  

இந்தப் பயணத்தின் போது கார்கில் போர் நினைவிடத்துக்கு சென்று அஜித் சல்யூட் அடித்து மரியாதை செய்தார். அங்கு ராணுவ வீரர்கள் அஜித்துடன் நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டனர். 

மேலும் புத்தர் கோவிலுக்கும் சென்று நடிகர் அஜித் வழிப்பட்டார். புத்த விகாரத்தை அஜித் சுற்றி வந்து வழிபடும் வீடியோ வெளியானநிலையில், தற்போது உலகப் புகழ்பெற்ற பத்ரிநாத், கேதார்நாத் கோவில்களுக்கு சென்று வழிபாடு செய்துள்ளார் நடிகர் அஜித்.  

அங்கு ரசிகர்களுடன் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரலாகி வருகிறது.  

இந்தப் பயணம் முடிவடைந்த உடன் ‘ஏகே 61’ படத்தின் டப்பிங் பணியை அஜித் மேற்கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.