சர்வதேச மகளிர் தினம் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8 அன்று கொண்டாடப்படுகிறது. பாலின சமத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், பெண்களின் சம உரிமையை நிலைநாட்டுவதும் இந்நாளின் நோக்கமாகும். இன்றைய தினம் இந்தியா பெண்களுக்கு ஊக்கமளிக்கக்கூடிய வகைகள் என்னென்ன மாதிரியான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது என அறிந்து கொள்ளுங்கள்….
இந்தியா பெண்களின் சமூக, பொருளாதார, கலாச்சார மற்றும் அரசியல் சாதனைகளைக் கொண்டாடுகிறது மேலும் அவர்களுக்கு அதிகாரம் அளிக்க பல திட்டங்களையும் தொடங்கியுள்ளது.
கல்வி, பாதுகாப்பு மற்றும் நிதி சுதந்திரத்தின் தேவையை நிவர்த்தி செய்ய அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட 5 திட்டங்கள் குறித்த முழு விவரங்கள் இதோ…
1. மகிளா சம்மான் பச்சத் பத்ரா திட்டம்:
மகிளா சம்மான் சேமிப்பு சான்றிதழ் திட்டம், 2023ம் ஆண்டு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனால் மத்திய பட்ஜெட்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டம் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு பொருளாதார ரீதியாக மேம்படுத்துவதை நோக்கமாக கொண்டதாகும். புதிய சேமிப்பு திட்டமான இதில் அனைத்து வயது பெண்களும் அதிகபட்சமாக 2 லட்சம் வரை டெபாசிட் செய்யலாம். இதற்கு 7.5 சதவீத வட்டி வழங்கப்படுகிறது. பெண்களுக்கான சிறப்பு திட்டமான இது 2025ம் ஆண்டு வரை செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
2. சுகன்யா சம்ரித்தி யோஜனா (SSY):
தமிழகத்தில் பொதுவாக செல்வ மகள் சேமிப்புத் திட்டம் என அழைக்கப்படும் இது, மத்திய அரசால் பெண் குழந்தைகளுக்காகவே தொடங்கப்பட்ட பிரத்யேக சேமிப்பு திட்டமாகும். இத்திட்டத்தின் கீழ், 10 வயது அல்லது அதற்கு குறைவான வயதுடைய பெண் குழந்தைகளுக்கு தபால் நிலையங்களில் கணக்கு தொடங்கலாம். இந்தத் திட்டம் பல வரிச் சலுகைகளுடன் அதிக வட்டியையும் தருகிறது. இத்திட்டத்தில் சேர பெண் குழந்தையின் பெற்றோர் அல்லது பாதுகாவலர் கணக்கை தொடங்கலாம். குறைந்தபட்சம் 250 ரூபாய் முதல் அதிகபட்சம் 1,50,000 ரூபாய் வரை ஃடெபாசிட் செய்யலாம். ஒரு பெண் குழந்தைக்கு ஒரு கணக்கு மட்டுமே தொடங்க முடியும். ஒரு குடும்பத்தில் அதிகபட்சமாக இரு பெண் குழந்தைகளுக்கு மட்டுமே இத்திட்டத்தின் கீழ்கணக்கைத் தொடங்கலாம்.
இத்திட்டத்தில் கணக்கு தொடங்கப்பட்டிருக்கும் பெண் 10ஆம் வகுப்பு நிறைவு செய்த பிறகு அல்லது 18 வயது நிறைவடைந்த பிறகு மேற்படிப்புக்காக, கணக்கில் இருக்கும் மொத்த தொகையில் 50% வரை பணத்தை எடுக்கலாம்.
3. சகி நிவாஸ்:
பணிபுரியும் பெண்களுக்கு பாதுகாப்பான மற்றும் வசதியான தங்குமிடத்தை வழங்குவதற்காக, சகி நிவாஸ் என்ற திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. புதிய விடுதிக் கட்டிடங்கள் கட்டுதல், ஏற்கனவே உள்ள விடுதிக் கட்டிடங்களை விரிவுபடுத்துதல் மற்றும் வாடகை வளாகத்தில் உள்ள விடுதிக் கட்டிடங்களை பராமரித்தல் ஆகியவை மேற்கொள்ளப்படுகிறது. இத்திட்டம் மூலமாக சாதி, மதம், திருமண ஆனவர், ஆகாதவர் போன்ற எவ்வித பாகுபாடும் இன்றி வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு தங்க தேவையான இடம் வழங்கப்படுகிறது.
4. மகிளா சக்தி கேந்திரா திட்டம் (MSK):
‘மகளிர் சக்தி மையம்’ எனப்படும் இத்திட்டம் கிராமப்புற பெண்களின் வாழ்க்கைத்திறனை மேம்படுவதற்காக மத்திய அரசால் உருவாக்கப்பட்டதாகும். திறன் மேம்பாடு, வேலைவாய்ப்பு, டிஜிட்டல் கல்வியறிவு, சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்துக்கான வாய்ப்புகளுடன் கிராமப்புற பெண்களின் வளர்ச்சிக்கான அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் வழங்கப்படுகிறது. கிராமப்புற பெண்கள் தங்கள் உரிமைகளைப் பெறுவதற்காக அரசாங்கத்தை அணுகுவதற்கும், விழிப்புணர்வு உருவாக்கம், பயிற்சி மற்றும் திறன் மேம்பாடு ஆகியவற்றின் மூலம் அவர்களுக்கு அதிகாரமளிப்பதற்கும் உதவுகிறது.
இத்திட்டம் பெண்களை மையப்படுத்திய திட்டங்கள் மற்றும் அரசின் திட்டங்களை செயல்படுத்துவதற்காக உள்ளூர் நிர்வாகம், மாநில அரசு மற்றும் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் ஆகியவற்றுக்கு இடையேயான இணைப்பு பாலமாக செயல்படுகிறது. கல்வி, சுகாதாரம், வேலை முன்னேற்றம் மற்றும் அரசியல் மற்றும் பொருளாதார முடிவெடுப்பதில் பிரதிநிதித்துவம் ஆகியவற்றில் பெண்களுக்கும் ஆண்களுக்கும் சம வாய்ப்புகளை வழங்குவதை இந்த திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
5. பெண்கள் ஹெல்ப்லைன் திட்டம்:
தனியார் அல்லது பொது இடங்களில் வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு 24 மணி நேர அவசர உதவிகளை வழங்குவதை இந்த திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள பெண்களுக்கு உடனடி உதவியை வழங்கும் ஒற்றை இலவச எண் (181) மூலம் ஒவ்வொரு மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசத்திலும் பெண்களுக்கான உதவி எண்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.