ஆந்திராவிலும் பெண்களுக்கு இலவச பேருந்து பயண திட்டம் – தேர்தல் வாக்குறுதியாக அறிவிப்பு!

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த பெண்களுக்கான இலவச பேருந்து பயணத் திட்டத்தை முன்னுதாரணமாக கொண்டு ஆந்திராவில் முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தேர்தல் வாக்குறுதி அறிவித்துள்ளார்.

ஆந்திராவில் அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தலோடு சேர்ந்து சட்டப்பேரவை தேர்தலும் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்காக தெலுங்கு தேசம் கட்சி இப்போதே தயாராகி வருகிறது. கிழக்கு கோதாவரி மாவட்டம் ராஜ மகேந்திரபுரத்தில் நடைபெற்ற என்.டி ராமராவ் நூற்றாண்டு விழா மற்றும் தெலுங்கு தேச கட்சியின் மாநாட்டில் சந்திரபாபு நாயுடு முதல் கட்ட தேர்தல் வாக்குறுதியை வெளியிட்டார்.

அதன்படி தெலுங்கு தேசம் கட்சி ஆட்சிக்கு வந்தால் ஒவ்வொரு விவசாயிக்கும் ஆண்டுக்கு 20 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கப்படும் என்று அறிவித்தார். ஒவ்வொரு குடும்பத்திலும் 18 வயது நிரம்பிய பெண்களின் வங்கி கணக்கில் மாதத்திற்கு 1500 ரூபாய் நேரடியாக டெபாசிட் செய்யப்படும், படிக்கும் குழந்தைகளுக்கு ஆண்டு 15,000 உதவித்தொகை வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஆண்டிற்கு மூன்று இலவச கேஸ் சிலிண்டர்கள், புதிதாக 20 லட்சம் வேலை வாய்ப்புகள், வேலையில்லாத இளைஞர்களுக்கு மாதம் 3 ஆயிரம் ரூபாய் ரொக்கம் ஆகிய வாக்குறுதிகளை சந்திரபாபு நாயுடு அறிவித்திருக்கிறார்.

இவற்றில் குறிப்பாக அனைத்து பெண்களுக்கும் உள்ளூர் பேருந்துகளில் இலவச பயண வசதி வழங்கப்படும் என அறிவித்துள்ளார். தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் பெண்களுக்கான இலவச பேருந்து பயணத் திட்டத்தை அமல்படுத்திய நிலையில் அதனை தொடர்ந்து கர்நாடகா, தற்போது ஆந்திராவில் தேர்தல் வாக்குறுதியாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.