“இப்போ எல்லாம் யாரு சார் ஜாதி பாக்குறா?”… ஈரோட்டில் பட்டியலின மக்களுக்கு அரங்கேறிய அவலம்!

ஈரோடு அருகே பட்டியலின மக்களை பொது குழாயில் தண்ணீர் பிடிக்க அருகில் வசிப்போர் அனுமதிக்க மறுப்பதாக புகார் எழுந்துள்ளது. ஈரோடு, பவானி சாலையில் வசித்து வந்த வீடற்ற பட்டியலினத்தை (குறவர் இனத்தவர்) சேர்ந்த 36 குடும்பத்தினர்க்கு கடந்த 2018 ம் ஆண்டு சித்தோடு அருகே கன்னிமார்காடு என்ற இடத்தில் வீட்டுமனை வழங்கப்பட்டது.

ஊர் ஊராக சென்று கேஸ் அடுப்பு சர்வீஸ், பிளாஸ்டிக் பொருள் விற்பனை வேலை செய்யும் இவர்கள், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட அந்த இடத்தில் குடிசைகள் அமைத்து வசித்து வருகின்றனர். இந்நிலையில் இவர்களின் குடியிருப்புக்கு அருகே உள்ள சிலர், 36 குடும்பத்தினரையும் சாதிய பாகுபாட்டுடன் நடத்துவதாக குடியிருப்புவாசிகள் புகார் அளித்துள்ளனர்.

குழந்தைகளுடன் குடும்பமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த அவர்கள், பொது குடிநீர் குழாயில் தங்களை தண்ணீர் பிடிக்க பிற சமூகத்தினர் அனுமதிக்க மறுப்பதாகவும், மீறி தண்ணீர் பிடித்தால் குழாய்களை கழுவி விடுவதாகவும் கூறினர்.

முன் பின் அறிமுகம் இல்லாத நபர்கள் இரவு நேரங்களில் வந்து வீடுகளின் கதவுகளை தட்டுவதாகவும், தங்களை அங்கிருந்து அப்புறப்படுத்தும் நோக்கத்துடன் சிலர் செயல்படுவதாகவும் அதிகாரிகளிடம் முறையிட்டனர்.

சாதிய பாகுபாட்டுடன் தங்களை அச்சுறுத்தும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், வாழ்வாதார உரிமையை பாதுகாக்கவும் அவர்கள் கேட்டுக்கொண்டனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment