பணியில் சேர்ந்த முதல் நாளே செய்த தரமான சம்பவம்…. மதுரை காவலருக்கு குவியும் பாராட்டு…..

காவல்துறை உங்களின் நண்பன். மக்களுக்கு சேவை செய்வதே காவல்துறையின் கடமை என்பதெல்லாம் கேட்பதற்கு மட்டுமே நன்றாக இருக்கும். ஆனால் ஒரு சில கசப்பான சம்பவங்களால் காவல்துறை மீது மக்களுக்கு அதிருப்தி ஏற்பட்டு வருகிறது. இருப்பினும் அனைத்து காவலர்களும் அப்படி அல்ல என்பதை ஒரு சில காவலர்கள் அவர்களின் செயல் மூலம் நிரூபித்து வருகிறார்கள்.

mmm

அப்படி ஒரு தரமான சம்பவம் தான் தற்போது மதுரையில் நடந்துள்ளது. அதாவது மதுரை மாவட்டம், ஒத்தக்கடையில் காவல் ஆய்வாளராக பணிபுரிந்து ஆனந்த தாண்டவன் என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இந்நிலையில் அவருக்கு பதில் சரவணன் என்பவர் புதிய காவல் ஆய்வாளராக பணியில் சேர்ந்துள்ளார்.

சரவணன் பணியில் சேர்ந்ததும் முதல் வேலையாக அந்த போலீஸ் ஸ்டேஷனில் நுழைவு வாயிலில் அறிவிப்பு பலகை ஒன்றை வைத்துள்ளார். இந்த பலகையை பார்த்து சக காவலர்கள் மட்டுமல்ல பொதுமக்களும் ஆச்சரியத்தில் மூழ்கி உள்ளனர். இந்த காலத்தில் இப்படி ஒரு காவலரா என அதிர்ச்சியில் உறைந்து உள்ளனர்.

அப்படி அந்த பலகையில் என்ன உள்ளது என்று தானே கேட்கிறீர்கள். அதில், ”ஒத்தக்கடை காவல் நிலைய பொறுப்பு அதிகாரியாக பொறுப்பேற்றுள்ள பி.சரவணன் ஆகிய நான் யாரிடமும் லஞ்சம் (கையூட்டு) பெறுவதில்லை. என் பெயரை சொல்லிக் கொண்டு காவல் நிலையத்தில் கொடுத்த புகாரை சுமூகமாக முடித்துத் தருவதாக கூறி, யாரிடமும் எந்த வித பொருளோ, பணமோ கொடுக்கவேண்டாம் என்றும், கொடுக்கும் பட்சத்தில் அதற்கு நான் எவ்விதத்திலும் பொறுப்பில்லை என, தெரிவிக்கிறேன்” என்று அதில் எழுதப்பட்டுள்ளது.

பணிக்கு சேர்ந்த முதல் நாளே காவலர் சரவணன் செய்துள்ள இந்த சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் காவல் ஆய்வாளர் மீதும் நல்ல மதிப்பு உருவாகியுள்ளது. சக காவலர்களும் சரவணனை பாராட்டி வருகிறார்கள்.

சரவணனை போன்ற ஒரு சில கறை படியாத காவல்துறை கரங்களால் தான் இன்றும் மக்கள் காவல்துறை மீது நம்பிக்கை கொண்டிருக்கிறார்கள். அனைத்து காவலர்களும் இப்படி இருந்து விட்டால் உண்மையாகவே காவலர்கள் பொதுமக்களின் நண்பன் தான்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment