தென்னாப்பிரிக்க நாட்டில் தோன்றி இன்று உலகமெங்கும் வேகமாக பரவி மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை உருவாக்கி கொண்டு நிலவுகிறது ஒமைக்ரான். இவை இந்தியாவிலும் கடந்த சில வாரங்களில் அதிக அளவு பாதிப்பு எண்ணிக்கையை உருவாக்கிக் கொண்டே வருகிறது. இதனால் ஒவ்வொரு மாநில அரசும் பல கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர்.
அவற்றில் பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு மீண்டும் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் கூடுதல் கட்டுப்பாடுகள் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் இன்று மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். அதில் ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் வார இறுதி நாட்களில் வழிபாட்டுத் தலங்களில் கூடுவதற்கு கூடுதல் கட்டுப்பாட்டு விதிகள் விதிக்கப்படுவது தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது என்ற தகவல் வெளியாகியுள்ளது.
மருத்துவ நிபுணர்கள் மட்டுமின்றி தமிழக அரசின் உயர் அதிகாரிகளும் இந்த கூட்டத்தில் பங்கேற்றிருந்தனர். கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் இரவுநேர பொது முடக்கத்தை அமல்படுத்துவது குறித்து ஆலோசித்ததாக தகவல் கிடைத்துள்ளது.
வழிபாட்டுத் தலங்களில் வெள்ளி, சனி, ஞாயிறு கிழமைகளில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுவது தொடர்பாகவும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இதில் கடைகள் மற்றும் நிறுவனங்கள் இயங்கும் நேரத்தை குறைப்பது பற்றியும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
பள்ளி மற்றும் கல்லூரிகளில் நேரடி முறை வகுப்பு தவிர்த்து மீண்டும் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தலாமா? என்றும் ஆலோசிக்கப்பட்டது. பார்வையாளர்கள் இன்றி ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்தலாமா? எனவும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது