வளர்ந்து வரும் நவீன காலக்கட்டத்திற்கு மத்தியில் இயற்கையான முறையில் குழந்தை பிறக்கும் நிகழ்வுகள் என்பது சவாலாக அமைந்துள்ளது. இதன் காரணமாக பலர் செயற்கை முறையில் குழந்தை பெற்றெடுக்க நினைப்பது உண்டு.
இந்நிலையில் அமெரிக்காவில் உள்ள ஒரேகான் மாகாணத்தில் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன் கிட்டத்தட்ட -200 டிகிரி திரவ நைட்ரஜனில் உறையவைக்கப்பட்ட கருக்களில் இருந்து இரட்டை குழந்தைகள் பெற்றெடுத்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
குறிப்பாக இதுவே உலகின் மிகவும் நீண்டகாலம் உறைந்த கருவாக இருக்கலாம் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இதனிடையே கடந்த ஏப்ரல் 22, 1992 ஆண்டு இந்த கருமுட்டை உறையவைக்கப்பட்டதாக தெரிகிறது.
தற்போது பிலிப் மற்றும் ரேச்சல் ரிட்ஜ்வே என்ற தம்பதியினர் கருமுட்டையை தானமாக பெற்றுள்ளனர். பின்னர் IVF முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு செயற்கை முறையில் இரட்டை குழந்தை பெற்றெடுத்துள்ளனர்.
ஏற்கனவே டினா மற்றும் பென் கிப்சன் என்ற தம்பதியினர் 24 ஆண்டுகள் முன் உறைந்திருந்த கருமுட்டையில் இருந்து குழந்தை பெற்றெடுத்தது குறிப்பிடத்தக்கதாகும்.