ஒரு ஆட்டின் விலை 15 லட்சமாம்..! அப்படி அந்த ஆட்டில் என்ன ஸ்பெஷல் தெரியுமா?

தற்போது நம் நாட்டில் இறைச்சி வகைகளில் ஆடு தான் அதிக விலைக்கு விற்கப்பட்டு வருகிறது. ஒரு கிலோ ஆட்டிறைச்சி 1000 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் பார்த்தால் நம் நாட்டில் வளர்க்கப்படும் ஆட்டினங்களிலேயே ஜமுனாபுரி ஆடுகள் தான் அதிக விலைக்கு விற்பனையாகி வருகிறது.

தோராயமாக 80 கிலோ எடையுள்ள ஒரு ஜமுனாபுரி ஆடு சுமார் 50 ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஆனால், ஒரே ஒரு ஆடு 15 லட்ச ரூபாய்க்கும் அதிகமாக விற்பனையாகியுள்ளது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆமாங்க நிஜம் தான் நம்புங்க. ஆனால் இந்த சுவாரசிய சம்பவம் நம் நாட்டில் நடக்கவில்லை. ஆஸ்திரேலியாவில் நடந்துள்ளது.

சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஏலம் ஒன்றில் மாரகேஷ் என்ற வகையை சேர்ந்த ஆடு ஒன்று சுமார் 21000 டாலருக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளது. இதன் இந்திய மதிப்பு சுமார் 15.6 லட்சம் ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது. ஆண்ட்ரு மோஸ்லி என்பவர் தான் இவ்வளவு பெரிய தொகை கொடுத்து அந்த ஆட்டை ஏலத்தில் எடுத்துள்ளார்.

சாதாரண ஒரு ஆட்டை ஏன் இவ்வளவு விலை கொடுத்து வாங்க வேண்டும் என்று தானே உங்களுக்குள் கேள்வி எழுகிறது. அதற்கும் ஆண்ட்ரு பதிலளித்துள்ளார். அவர் கூறியதாவது, “மாரகேஷ் ஏன் விலை அதிகமாக ஏலம் கேட்கப்பட்டது என்றால், அந்த வகை ஆடுகள் மிகவும் அரிதான இனத்தை சேர்ந்தது. கோபாரில் நடந்த விற்பனையில் இந்த இனத்தை சேர்ந்த ஆடுகள் 17 மட்டுமே இருந்தன.

நான் இப்போது வாங்கி இருக்கும் ஆடு நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதால் நல்ல இனப்பெருக்க தன்மையை கொண்டிருக்கும். எனவே, தான் மாரகேஷை அதிக விலைக்கு ஏலம் எடுத்தேன். முன்னதாக ப்ராக் என்ற ஆடு அதிக விலைக்கு கேட்கப்பட்டது. அந்த சாதனையை மாரகேஷ் முறியடிக்கும் என நினைத்தேன். ஆனால் இரு மடங்கு விலையில் ஏலம் முடியும் என்று நான் நினைக்கவில்லை” என கூறியுள்ளார்.

இதற்கு முன்னதாக கோபார் ஏலத்தில் ப்ராக் என்ற ஆடு தான் அதிக விலைக்கு ஏலம் போனது. அந்த ஆடு இந்திய மதிப்பில் சுமார் 6.40 லட்சத்திற்கு ஏலம் போனது. ஆனால் தற்போது மாரகேஷ் ஆடு அதைவிட இருமடங்கு அதிக தொகைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டு அந்த சாதனையை முறியடித்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment