பெற்றோர்களை கவலைக்குள்ளாக்கும் ADHD.. கவனக்குறைவு மற்றும் உயர் செயல்திறன் குறைபாடு என்றால் என்ன?

குழந்தை பருவத்தில் ஒரு சில குழந்தைகள் ADHD ( Attention-Deficit/ Hyperactivity Disorder) என்று சொல்லக்கூடிய நரம்பியல் வளர்ச்சி சம்பந்தப்பட்ட குறைபாட்டுக்கு ஆளாகிறார்கள்.

ADHD

இது ஒரு நோய் அல்ல என்பதை முதலில் பெற்றோர்கள் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். இது குழந்தைகளின் நடத்தையில் ஏற்படக்கூடிய குறைபாடுகள் ஆகும். இந்தக் குறைபாடு ஆனது குழந்தை பருவத்தில் கண்டறியப்படக்கூடிய ஒன்று. ஆனால் இது முதிர் வயது வரை நீடிக்கும் என்று கூறப்படுகிறது.

அதிக குறும்புத்தனத்துடன் சுறுசுறுப்பாய் இருத்தல், கவனக்குறைவாய் இருத்தல் குழந்தைகளின் இயல்பு என்றாலும்  ADHD உடைய குழந்தைகள் நடத்தையில் இந்த பாதிப்பு அதிகம் காணப்படும்.

முதலாவதாக கவனம் செலுத்துவது. ADHD உடைய குழந்தைகளால் ஒரே விஷயத்தில் அதிக நேரம் கவனம் செலுத்துவது என்பது இயலாத காரியம். ஒரு செயலில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் பொழுதே வேறு எங்கேயும் சத்தம் கேட்டால் அங்கு ஓடி விடுவர். இதனால் இவர்களால் படிப்பில் அதிக அளவு கவனம் செலுத்த இயலாமல் போய் விடக்கூடிய வாய்ப்பு உள்ளது. அவர்களிடம் ஒப்படைக்கப்படும் வேலைகளில் முழு கவனம் செலுத்த இயலாமல் அதிக அளவு பிழைகளை செய்திடவும் வாய்ப்பு உள்ளது.

இரண்டாவதாக தங்களின் நடத்தையை கட்டுப்படுத்துவது. குழந்தைகள் வளர வளர பொது இடத்தில் நடந்து கொள்ளும் முறையை புரிந்து நடந்து கொள்ள தொடங்கி விடுவார்கள். ஆனால் ADHD யால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் வீட்டிலும் பொது இடத்தில் எப்படி நடந்து கொள்வது? சூழ்நிலையை எப்படி சமாளிப்பது? என்ற புரிதல் இன்றி செயல்படுவர். இடம் பொருள் ஏவல் என்று எதையும் பாராமல் தாங்கள் நினைத்ததை நடத்தியே தீர வேண்டும் என்ற எண்ணம் உடையவராக இருப்பார்கள். அழுகை, கோபம் என அனைத்தும் அதிகம் ஏற்படும் மூட் ஸ்விங்க் உடையவர்களாக இருப்பார்கள்.

அடுத்ததாக அதிவேக திறன். வழக்கமான குழந்தைகளை விட அளவுக்கு அதிகமான சுறுசுறுப்புடன் இருப்பர். ஒரே இடத்தில் அமர்வது என்பது இவர்களால் இயலாத காரியம். வகுப்பறையிலோ வீட்டிலோ பொது இடங்களிலோ எங்கு இருந்தாலும் சுற்றிக் கொண்டே இருப்பர். 

psychologist

இந்த ADHD என்பது குணப்படுத்த முடியாத குறைபாடு தான் என்றாலும் பெற்றோர்களோ ஆசிரியர்களோ இவர்களை கையாளும் முறையை தெரிந்து கொண்டால் இவர்கள் நடத்தையை நம்மால் கட்டுப்படுத்த இயலும். பெற்றோர்கள் இது குறித்து அச்சம் கொள்ளாமல் ADHD உடைய குழந்தைகளின் நடத்தையால் எரிச்சல் அடையாமல் அவர்களை கையாள்வது எப்படி? என்ற வழிமுறைகளை அறிந்து குழந்தை வளர்ப்பில் சில மாற்றங்களை செய்தாலே போதும். அந்த குழந்தைகளை இந்த சமுதாயத்தில் சிறந்த படி வளர்க்க இயலும்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.