இது குட்டீஸ்களுக்கான ரெசிபி..கொண்டாடுங்க உங்க சமையலை உங்க செல்ல சுட்டிகளோடு!

வித விதமா உணவு செய்து நாம நிறைய சாப்பிட்டு இருப்போம். அந்த ஸ்டைல் இப்ப உள்ள குழந்தைகளுக்கு வாய்ப்பதில்லை. இது அந்தக்காலத்தைப் போல சத்தான உணவு இல்லை. என்றாலும் ஒரு சில சத்தான பொருள்களைக் கொண்டு உணவு தயாரிக்கும் போது ஓரளவுக்கு நமது உடலுக்குத் தேவையான சத்துக்களை பூர்த்தி செய்யலாம்.

என்ன தான் இருந்தாலும், நாமே பட்டினியா கிடந்தாலும் நம்ம குழந்தை நல்லா சாப்பிடணும்…நல்லா வளரணும்கற எண்ணம் தான் எல்லா பெற்றோர்களுக்கும் இருக்கும்.

அவங்களோட ஆசையே சத்தான பாரம்பரியமிக்க உணவு வகையறாக்களை நம்ம செல்ல குட்டீஸ்களுக்கும் கொடுத்து மகிழ வேண்டும் என்பது தான். நாம ஒரு சில பட்டியல்களை அவங்களுக்காக பார்ப்போமா..

பால் பொங்கல்

தேவையான பொருள்கள்:

அரிசி – 200 கிராம்,
பால் – 500 மில்லி,
சர்க்கரை – 200 கிராம்,
ஏலக்காய்த்தூள் – சிறிதளவு,
முந்திரிப் பருப்பு – 10,
நெய் – 2 டீஸ்பூன்.

எப்படி செய்வது?

அரிசியுடன் ஒரு பங்குக்கு மூன்று பங்கு என்ற அளவில் தண்ணீர் விட்டு குக்கரில் வைத்து 4 விசில் விட்டு இறக்குங்க. பாலை சுண்டக் காய்ச்சி, சாதத்துடன் சேர்த்து மசித்து, சர்க்கரை சேர்த்துக் கலந்து கொதிக்கவிட்டு… ஏலக்காய்த்தூள், நெய்யில் வறுத்த முந்திரிப் பருப்பு போட்டு கலந்து, இறக்கி வச்சிருங்க. அவ்ளோ தான். பால் பொங்கல் ரெடி.

அன்னாசிப்பழ கேசரி

தேவையான பொருள்கள்:

ரவை – 200 கிராம்,
சர்க்கரை – 150 கிராம்,
அன்னாசிப்பழத் துண்டுகள் – ஒரு கப்,
நெய் – 100 மில்லி,
கேசரி பவுடர் – ஒரு சிட்டிகை,
ஏலக்காய்த்தூள் – சிறிதளவு,
முந்திரிப் பருப்பு – 10.

எப்படி செய்வது?

ரவையை நெய் விட்டு சிவக்க வறுத்துக்கோங்க. அன்னாசிப்பழத் துண்டுகளை மிக்ஸியில் அரைங்க. வாணலியில்; ஒரு பங்கு ரவைக்கு இரு பங்கு என்ற அளவில் தண்ணீர் விட்டு… அன்னாசிப் பழ விழுது சேர்த்து, கொதித்ததும் ரவையை தூவிக் கிளறி வேகவிடுங்க.

நன்கு வெந்ததும், சர்க்கரையைப் போட்டுக் கிளறி… ஏலக்காய்த்தூள், கேசரி பவுடர் சேருங்க. முந்திரியை நெய்யில் வறுத்து இதனுடன் சேர்த்துக் கிளறி இறக்குங்க.

தேங்காய் அரிசி பாயசம்

Rice coconut payasam
Rice coconut payasam

தேவையான பொருள்கள்:

:தேங்காய் துருவல் – ஒரு கப்,
அரிசி – ஒரு கைப்பிடி அளவு,
பொடித்த வெல்லம் – 200 கிராம்,
காய்ச்சிய பால் – 500 மில்லி,
ஏலக்காய்த்தூள் – சிறிதளவு,
வறுத்த முந்திரி – 10,
வாழைப்பழம் – ஒன்று.

எப்படி செய்வது?

அரிசி, தேங்காய் துருவலை சேர்த்து சிறிதளவு நீர் விட்டு கொரகொரப்பாக அரைங்க. வாணலியில் தண் ணீர் விட்டு அரிசி – தேங்காய் விழுதை சேர்த்து கைவிடாமல் கிளறிக் கொண்டே இருங்க.

நன்கு வெந்ததும், பொடித்த வெல்லத்தை சேருங்க. எல்லாம் சேர்ந்து கொதித்தவுடன், காய்ச்சிய பாலை சேர்த்து, ஏலக்காய்த் தூள், வறுத்த முந்திரி போட்டு இறக்கிடுங்க. வாழைப்பழத்தை பொடியாக நறுக்கி சேர்க்கலாம்.

காய்கறி வடை

veg vada
veg vada

தேவையான பொருள்கள்:

கடலைப்பருப்பு, துவரம்பருப்பு – தலா ஒரு கப்,
உளுத்தம்பருப்பு – ஒரு டீஸ்பூன்,
கோஸ் துருவல், கேரட் துருவல் – தலா 2 டீஸ்பூன்,
பொடியாக நறுக்கிய இஞ்சி, கறிவேப்பிலை – சிறிதளவு,
பச்சை மிளகாய் – 2,
மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை,
பெருங்காயத்தூள் – சிறிதளவு,
உப்பு – தேவையான அளவு,
எண்ணெய் – 250 மில்லி.

எப்படி செய்வது?

பருப்புகளை ஒன்றாக ஊற வைத்து, தண்ணீர் வடித்து, உப்பு, பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்து கெட்டியாக அரைங்க. இதனுடன் மஞ்சள்தூள், பெருங்காயத்தூள், கறிவேப்பிலை, கேரட் துருவல், கோஸ் துருவல் சேர்த்துப் பிசைந்து விடுங்க. வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், அடுப்பை மிதமான தீயில் வைத்து, மாவை வடைகளாகத் தட்டிப் போட்டு, பொன்னிறமாக வேகவிட்டு எடுங்க. கீரை சேர்த்தும் வடை தயாரிக்கலாம்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews