சபரிமலை செல்லும் பக்தர்கள் என்னென்ன செய்வார்கள்? அவர்களது கடமைகள் என்ன?

கார்த்திகை மாதம் மாலை அணிந்து நேர்த்தியாகவே விரதமிருந்து பார்த்த சாரதியின் மைந்தனே உனை பார்க்க வேண்டியே தவமிருந்து…என்ற ஐயப்பனின் பாடல் நம் செவிகளைக் குளிரச் செய்வதுண்டு. அந்த புனிதமான யாத்திரையை நாமும் ஒருதடவையாவது மேற்கொள்ள வேண்டும் என்று அனைவரின் மனதிலும் நிச்சயம் ஒரு எண்ணம் வரும்.

பக்தர்கள் சரணகோஷம் முழங்கப் பாடும்போது நமக்குள் ஒரு பக்தி பரவசம் வந்துவிடும். கன்னிசாமிகள் வீட்டில் கன்னி பூஜை நடத்திப் பாடல்கள் பாடும்போது அங்கு இருக்கும் அனைத்துப் பக்தர்களுக்கும் சாமி வந்து விடும். அதை நாம் இன்றும் கண்கூடாகப் பார்க்கலாம்.

இருமுடிக் கட்டிச் சபரிமலைக்குச் செல்லும் சுவாமிகளைப் பார்த்து விட்டால் நமக்கு அவர் யாரென்றே தெரியாது. இருந்தாலும் நாமும் சேர்ந்து வழியனுப்புவோம். அப்படிப்பட்ட சக்திவாய்ந்த பக்தர்களின் கடமைகள் என்னென்ன என்று பார்ப்போம்.

சபரிமலைக்கு கார்த்திகை மாதம் விரதமிருந்து மாலை போட்டு சபரி பக்தர்கள் செல்வது வழக்கம். முதன் முதலாக செல்லும் பக்தர்களை கன்னி சுவாமி என்று அழைப்பர். அதேபோல் 3ம் வருடம், 18ம் வருடம், 36ம் வருடம் செல்லும் பக்தர்கள் மற்றும் அவர்களது கடமைகளைப் பற்றி இப்போது பார்ப்போம்.

முதல் வருடம்…கன்னி சுவாமி

தாய், தந்தை, குரு அவர்களுடன் பரிபூரணமான ஆசீர்வாதங்கள் பெற்று….முதல் வருடம் சபரிமலைக்கு செல்பவரை கன்னி சுவாமி என்று அழைப்பார்கள். முதல் வருடம் சபரிமலை செல்வதால் அனைத்து விரதமுறைகளையும் குருசுவாமிகளிடம் கேட்டு தெரிந்து கொண்டு அதை பின்பற்ற வேண்டும்.

ஐயப்ப சுவாமிகள் பூஜையின்போதும், அன்னதானத்தின் போதும், இருமுடிகட்டும் போதும், சபரிமலையில் இருமுடியை பிரிக்கும் போதும் கன்னி சுவாமிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றனர்

எருமேலியில் பேட்டைதுள்ளி, சரம்குச்சி ஒன்றை வாங்கி பத்திரமாக வைத்துக் கொண்டு அதை சபரி பீடம் தாண்டி சரம் குத்தி என்ற இடம் வரும். சரம் குத்தி என்றால் சரம் குத்துவதற்க்காக ஏற்படுத்தபட்ட இடம். இந்த இடம் வரும் அங்கு அந்தக் குச்சியை சொருகி நாம் முதல்முறையாக சபரிமலைக்கு வந்ததை தெரிவிப்பது கன்னி சுவாமியின் கடமை.

மூன்றாம் வருடம்…மணிகண்டன் சாமி 

மூன்றாம் வருடம் செல்லும் சுவாமிமார்கள் விரத முறைகளை ஓரளவு தெரிந்து கொணடிருப்பார்கள். இருமுடி சமயத்தில் பித்தளையால் ஆன சிறிய மணியை மாலையாக கழுத்தில் அணிந்து சபரிமலையில் தரிசனம் முடிந்த பின் சன்னிதானத்தின் பின்புறம் கட்டுவார்கள். மூன்றாம் வருடம் சபரி யாத்திரை செல்லக்கூடிய பக்தர்களை மணிகண்டன் சாமி என்று அழைப்பார்கள்

இது ஏனென்றால், ஐயனே மூன்று வருடங்கள் பூர்த்தியாகி விட்டது. இனி மேல் நான் சபரிமலைக்கு வருவது உன் கருணையில் தான் நடக்கவேண்டும் சுவாமி. நான் கட்டும் இந்த மணியோசை கேட்டு எனக்கு அருள்புரிவாய் சுவாமி என்று வேண்டிக் கொள்வார்கள்.

மணியை சிறிய அளவில் கட்டினால் போதும் சில சுவாமிகள் பெரிய அளவில் எடுத்துக் கொண்டு மலையை சிரமத்துடன் கடந்து மணியை பூட்டு போட்டுக் கட்டுகிறார்கள். இது போல் செய்வதைத் தவிர்க்கலாம்.

இந்த மணியை சன்னிதானத்தில் கட்டுவதை விட மஞ்சமாத கோயில் வளாகத்தில் உள்ள மணிமண்டபத்தில் கட்டுவது சிறப்பாகும். தற்பொழுது சன்னிதானத்திற்கு பின்னே உள்ள ஸ்ரீமகா கணபதி கோவில் ஐயப்ப சாமிமார்கள் மணி கட்டுகிறார்கள்.

இந்த மணியைக் கட்டியவுடன் மற்ற சுவாமிகள் போட்டி போட்டுக் கொண்டு பறிப்பார்கள். பறித்த மணியை நாம் அணியக்கூடாது.

சபரி மலை யாத்திரை முடிந்தபின்பு நம் வீட்டில் உள்ள பூஜை அறையில் வைத்து வழிபடவேண்டும். ஏனென்றால் ஐயப்பசாமியின் சன்னிதானத்தை தொட்ட மணியாதலால் ஐயப்பனாக எண்ணி வழிபாடு செய்யலாம்.

மேலும் குழந்தை இல்லாதவர்களுக்கு இந்த மணியைக் கொடுத்தால் மணிகண்ட பாலன் பிறப்பார் என்பது குருசாமிகள் சொல்வதுண்டு.

Iyppa devotees
Iyppa devotees

பதினெட்டாம் வருடம்…குருசுவாமி 

சபரிமலைக்கு விரதம் இருந்து இருமுடி கட்டி வருடாவருடம் சென்று 18 வருடங்கள் தொடர்ந்து சென்று வந்தவர்களை குருசுவாமி என்று அழைப்பார்கள். 18 வருடம் சென்றால் தான் குருசுவாமியா ? 17, 19 வருடங்கள் சென்றால் குருசுவாமி ஆக முடியாதா? என்ற சந்தேகம் வரலாம்.  18 பதினெட்டாம் ஆண்டு சபரிமலை யாத்திரை என்பது நாம் செய்த கோடி புண்ணியத்திற்கு சமமாகும்.! ஏனென்றால், ஐயப்பசாமி வரலாற்றில் 18 முக்கியமானது.

18 படிகள் உணர்த்தும் தத்துவங்கள்

18 படிகளை 5 இந்திரியங்கள், 5 புலன்கள், 5 கோசங்கள், 3 குணங்கள் என வகைப்படுத்தி உள்ளனர். 18 படிகளிலும் 18 திருநாமங்களுடன் ஐயன் அமர்ந்து இருப்பதாக ஐதீகம்.

ஐயப்பன் தன்னுடைய 18 கருவிகளை வைத்து 18 படிகளை உருவாக்கியதாக கூறப்படுகிறது. அவை வில், வாள், வேல் கதை, அங்குசம், பரசு. பிந்திபாவம், பரிசை, குந்தகம், ஈட்டி, கைவாள், சுக்குமாந்தடி, கடுத்திவை, பாசம், சக்கரம், ஹலம், மழுக், முஸல ஆகிய 18 போர் கருவிகள்.

18 steps
18 steps

18 படிகள் 18 வகை தத்துவங்களை குறிப்பதாகவும் கூறுகிறார்கள்.

மெய், வாய், கண், மூக்கு, செவி, சினம், காமம், பொய், களவு, வஞ்சநெஞ்சம், சுயநலம், பிராமண, சத்திரிய, வைசிய, சூத்ர, தாமஸ, ராஜஸ என்ற 18 வகை குணங்களைத் தாண்டினால் பகவான் ஐயப்பனைக் காணலாம் என்று கூறப்படுகிறது.

கோயிலைச் சுற்றியுள்ள 18 மலை தெய்வங்களை குறிப்பதுதான் 18 படிகள். சபரிமலையைச் சுற்றி 18 மலைகள் உள்ளன. அந்த 18 மலை தெய்வங்கள் 18 படிகளாக, ஐயப்பன் சன்னதிக்கு முன்பாக இருப்பது மிகவும் விசேஷமானது.

18 படி தத்துவத்தை புனிதத்தை இன்னும் சிறப்புடன் சொல்லிக் கொண்டே போகலாம். மேலும் 18ம் வருடம் சபரிமலை யாத்திரையின் போது சிறிய தென்னங்கன்று ஒன்றை எடுத்துச் செல்வார்கள். இதைக் கண்டதும்
குருசுவாமி எண எண்ணி மற்ற சுவாமிமார்கள் பணிந்து ஆசி வாங்குவார்கள். இதனால் தான் 18 ம் வருடம் சபரிமலை யாத்திரையை புனித யாத்திரை என்று அழைக்கின்றனர்.

36 ம் வருடம்… மகா குருசுவாமி 

18 ம் வருடம் எப்படி அற்புதங்களை உடையதோ அது போல் இந்த 36ம் வருட சபரிமலை யாத்திரையை புனித யாத்திரை என்று அழைக்கின்றனர்.

மேலும் தொடர்ந்து 36 வருடங்கள் சென்று வந்த சுவாமிகளை மகா குருசுவாமி என்று அழைக்கின்றனர்.

தென்னிந்திய திரைப்பட மிகப்பெரிய நட்சத்திரம் நடிகரமான நம்பியார் தொடர்ந்து 60 ஆண்டுகளுக்கு மேலாக சபரிமலை யாத்திரை சென்ற பழம் பெறும் மகா குருநாதர். அவரது புனிதமான பக்தி சேவையைக் கண்டு இன்றைக்கு அவர் நம்மை விட்டு மறைந்தாலும்  ஒரு வழிகாட்டியாகவே திகழ்கின்றார்.

இதில் இன்னொரு உண்மை என்னவென்றால்…உலகில் எங்கும் இல்லாத தனிப்பெரும் சிறப்பு சபரிமலைக்கு உண்டு.

ஒருமுறை சபரிமலை யாத்திரை சென்று வந்தால் மறுமுறை செல்ல ஆன்மீக ஆவலைத் தூண்டும் சக்தி வாய்ந்த புனிதமான யாத்திரை. ஐயப்பன் மனது வைத்தால் மட்டுமே நாம் மாலை போட்டு சபரிமலைக்கு செல்லமுடியும்.

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews