நம் நாட்டை விட வெளிநாட்டில் வேலைக்கு சென்றால் அதிக அளவு வருமானம் கிடைக்கும் என்ற எண்ணம் இந்தியாவில் உள்ள அனைத்து தரப்பு மக்களிடமும் காணப்படுகிறது. இதனால் படித்த இளைஞர்கள் கூட தங்கள் படிப்பை முடித்துவிட்டு வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்று விடுகின்றனர்.
ஒருசிலர் குடும்ப கஷ்டத்தின் காரணமாக வெளிநாடுகளில் வேலை பார்த்து வருகின்றனர். இத்தகு கஷ்டத்தில் செல்லும் இவர்களை பல போலி ஏஜெண்டுகள் ஏமாற்றி விடுவர். இதனால் அவர்கள் வெளிநாடுகளில் கொத்தடிமைகளாகிவிடுவர்.
இதுகுறித்து உச்சநீதிமன்றம் பல கேள்விகளை கேட்டு உள்ளது. வெளிநாடுகளில் சிக்கியுள்ள தமிழக தொழிலாளர்களை மீட்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று கேட்டுள்ளது.
முருகலிங்கம் என்பவர் தொடர்ந்த வழக்கில் தமிழக அரசு மற்றும் மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியது உச்சநீதிமன்றம். வெளிநாடுகளில் சிக்கியுள்ள தொழிலாளர்களின் மறுவாழ்வுக்கு என்ன திட்டங்கள் உள்ளன என்றும் நீதிபதிகள் கேள்வி கேட்டனர். மாவட்ட வாரியாக எவ்வளவு பேர் பாதிப்பு என்பது பற்றி ஜனவரி 3ஆம் தேதிக்குள் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.