ஏழை மற்றும் நடுத்தர மக்களின் நலனை கருத்தில் கொண்டு ஆன்லைன் விளையாட்டுக்களை உடனடியாக தடை செய்வதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ஃபேன்டசி, ரம்மி, லூடோ, போக்கர், கால் பிரேக், கேரம் என பல ஆன்லைன் விளையாட்டுகளால் பணத்தை இழந்த விரக்தியில் பலர் தற்கொலை செய்து கொண்டதன் காரணமாக ஆன்லைன் விளையாட்டுகளை தடைசெய்து சட்டப்பேரவையில் கடந்த ஆண்டு சட்டம் இயற்றப்பட்டது.
ஆனால் சென்னை உயர்நீதி மன்றம் இந்த சட்டத்தை ரத்து செய்தது. இதன் காரணமாக ஆன்லைன் விளையாட்டுக்கள் மீண்டும் தலை தூக்க ஆரம்பித்தது அதில் ஈடுபடுபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.
இதனால் இளைஞர்கள் கல்வி மற்றும் வேலை வாய்ப்பினை தேடுவதில் நாட்டம் செலுத்துவதைத் தவிர்த்து அடிமைத்தனத்திற்கு ஆளாக வதாகவும் ஆபத்தை ஏற்படுத்தும் இந்த விளையாட்டால் ஏழை மக்கள் பெரிதும் பாதிப்படுவதாக கூறினார்.
எனவே இந்த விவகாரத்தில் முதலமைச்சர் உடனடியாக தலையிட்டு ஆன்லைன் விளையாட்டிற்கு தடை விதிக்கும் வகையில் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்யவும் அல்லது சூதாட்டத்தை ஒழிக்கும் வகையில் புதிய சட்டத்தை இயற்றவும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.