நாட்டிலேயே முதன் முறையாக அரசு திட்டங்களையும், சேவைகளையும் இருக்கும் இடத்தில் இருந்தே அறிந்து கொண்டு பொதுமக்கள் பயனடையும் வகையில் பிரத்யேக வாட்ஸ் எண்ணை விருதுநகர் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
நாட்டில் வளர்ந்து வரும் தொழில்நுட்பத்திற்கு ஏற்ப மக்கள் இருந்த இடத்தில் இருந்தே அரசின் திட்டங்கள், சேவைகள் மற்றும் குறைகளை தெரிவிக்க “விரு” என்ற வாட்ஸ் அப் எண் சேவையை விருதுநகர் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. இதற்காக அறிவிக்கப்பட்டுள்ள பிரத்யேக எண்ணான 94884 00438 என்ற எண் மூலமாக விருதுநகர் மாவட்ட மக்கள் அரசு திட்டங்கள் குறித்து அறிந்து கொள்ள முடியும்.
இந்த சேவையை விருதுநகர் மாவட்ட ஆட்சியர், வாட்ஸ் அப் இந்தியா குழுவுடன் சேர்ந்து பிரத்யேக விருதுநகர் மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையில் வடிவமைத்துள்ளார். இதன் மூலம் மக்களுக்கு பயனுள்ள பல சேவைகளை வழங்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
‘விரு’ என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பிரத்யேக எண்ணான ‘94884 00438’ இந்த வாட்ஸ் அப் எண்ணுக்கு ‘ஹாய்’ என்று மெசெஜ் அனுப்பினால், ‘வணக்கம் விருதுநகர்’ என்ற மெசெஜ் வரும், அதில் மாவட்ட அளவில் கிடைக்கக்கூடிய சேவைகள் மற்றும் அரசின் திட்டங்கள் உள்ளிட்ட தகவல்கள் இடம் பெற்றிருக்கும். இதன் மூலமாக பட்டா மாறுதல் முதல் குறைகளை கூறுவது வரை அனைத்தையும் மக்கள் இருந்த இடத்தில் இருந்தே செய்ய முடியும்.