காவல் அதிகாரி பணியை விட்டுவிட்டு நடிப்பு.. வினு சக்கரவர்த்தியின் திரை பயணம்..!

தமிழ் சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசையில் பலர் அரசு வேலை உள்பட முக்கிய வேலைகளை விட்டு விட்டு வந்திருக்கின்றனர். அந்த வகையில் காவல்துறை அதிகாரியாக இருந்த வினு சக்கரவர்த்தி, சினிமா மீது உள்ள காதல் காரணமாக வேலையை ராஜினாமா செய்து விட்டு சினிமாவில் நுழைந்து அதன் பிறகு தனக்கென ஒரு இடத்தை பிடித்து ரசிகர்கள் மனதில் இடம்பெற்றார்.

1945 ஆம் ஆண்டு உசிலம்பட்டியில் பிறந்த வினு சக்கரவர்த்திக்கு 5 வயதிலிருந்து நடிப்பதற்கு ஆர்வம் அதிகமாக இருந்தது. அவர் உசிலம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் திருவிழாக்களில் நடந்த தெருகூத்துகளில் நடித்துள்ளார்.

எம்ஜிஆர்- சிவாஜி, கமல்-ரஜினி.. இரு தலைமுறை நடிகர்களுக்கு வெற்றிப்படம் கொடுத்த இயக்குனர்..!

வீட்டுக்கு தெரியாமல் அவர் நாடகம் பார்ப்பது நாடகத்தில் நடிப்பது என்பதில் ஈடுபட்டிருந்தார். இது ஒரு கட்டத்தில் அவரது பெற்றோருக்கு தெரிந்த நிலையில் நாடகங்கள் எல்லாம் நமக்கு வேண்டாம், நன்றாக படிக்க வேண்டும் அப்போதுதான் நல்ல எதிர்காலம் கிடைக்கும் என்று அறிவுறுத்தினர்.

அப்பாவின் மனதை புண்படுத்தாமல் ஒரு பக்கம் நன்றாக படித்துக்கொண்டு இன்னொரு பக்கம் நாடகத்திலும் நடித்துக் கொண்டிருந்தார். இதனால் அவர் தந்தை மகன் நாடகங்களில் நடித்து இப்படி கெட்டுப் போகிறானே என்று வருத்தம் அடைந்து அவரை உறவினர் இருக்கும் சென்னைக்கு படிக்க அனுப்பினார்.

சென்னை வந்த பின்னரும் அவருக்கு நாடக ஆர்வம் விடவில்லை. சென்னை பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும் போது அவர் நாடகத்திலும் நடித்துக் கொண்டிருந்தார். அதன் பிறகு ஜெயின் கல்லூரியில் படிக்கும் போதும் அவர் நாடகம் ஒன்றை நடித்து இயக்கினார்.

அவர் இயக்கிய நாடகத்தை டிஜிபி தலைமை ஏற்று நடத்தி வைத்தார். இந்த நிகழ்ச்சிக்கு தலைமை தாங்க வந்த டிஜிபி வினுசக்கரவர்த்தியின் நடிப்பை பாராட்டி உனது உடல்வாகு போலீஸ் அதிகாரிக்கு ஏற்றதாக இருப்பதால், நீ போலீசில் சேரலாம் என்று அறிவுரை கூறினார். எனவே கல்லூரி படிப்பு முடிந்ததும் என்னை வந்து பார், நீ காவல்துறை அதிகாரி ஆக நான் உதவி செய்கிறேன் என்று கூறினார்.

ரஜினி படத்தில் அறிமுகம்.. ராமராஜனுடன் திருமணம்.. நடிகை நளினியின் திரையுலக பாதை..!

அதேபோல் கல்லூரி படிப்பு முடிந்ததும் அந்த டிஜிபி அலுவலகத்தில் அவரை சந்தித்து காவல்துறை அதிகாரியானார். சென்னை ஐஸ்ஹவுஸ் காவல்நிலையத்தில் காவல்துறை அதிகாரியாக அவர் பணியாற்றினார். ஆனால் சினிமா மீது ஆர்வம் இருந்ததை அடுத்து அவர் ஆறு மாதத்தில் காவல்துறை அதிகாரி வேலையை ராஜினாமா செய்து விட்டு நாடகத்தில் நடிக்க தொடங்கினார். கன்னட இயக்குனர் ஒருவரை சந்தித்து அவர் மூலம் சினிமாவில் சேர்வதற்கான முயற்சியில் ஈடுபட்டார்.

இதன் மூலம் அவர் கன்னட திரைப்படம் ஒன்றில் அறிமுகம் ஆகி அதன் பிறகு அதே ஆண்டு மலையாள திரைப்படத்திலும் நடித்தார். வினு சக்கரவர்த்தி நடித்த முதல் தமிழ் திரைப்படம் ரோசாப்பூ ரவிக்கைக்காரி. இந்த படம் நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் அவர் அடுத்ததாக வண்டிச்சக்கரம் என்ற திரைப்படத்தில் நடித்தார். இந்த படத்தில் நடித்தது மட்டுமின்றி இந்த படத்தின் கதையை எழுதியதும் வினிச்சக்கரவர்த்தி தான்.

அதன் பிறகு பல திரைப்படங்களில் குணச்சித்திர கேரக்டர், வில்லன் மற்றும் காமெடி வேடங்களில் நடித்தார். குறிப்பாக ரஜினி கமல் ஆகிய இருவரது படங்களிலும் வில்லன், காமெடி வேடத்தில் கலக்கினார். குரு சிஷ்யன் திரைப்படத்தில் இவரது காமெடி இன்றும் சிரிக்க வைக்கும் அளவுக்கு இருக்கும்.

தமிழ் மலையாளம் கன்னடம் தெலுங்கு என பல மொழிகளில் நடித்த இவர் வண்டிச்சக்கரம், கோயில் புறா, பொண்ணுக்கு ஏத்த புருஷன் ஆகிய படங்களுக்கு கதையும் எழுதினார். தமிழ் சினிமாவில் சிலுக்கு ஸ்மிதாவை அறிமுகப்படுத்தியவர் வினு சக்கரவர்த்தி தான்.

வினுசக்கரவர்த்தி ஒருமுறை ஏவிஎம் ஸ்டுடியோவின் வாசலில் நின்று கொண்டிருந்த போது அவரை கடந்து ஒரு 16 வயது பெண் சென்றார். அந்த பெண்ணின் கண்ணை பார்த்தவுடனே இந்த பெண் சினிமாவுக்கு ஏற்ற பெண் என்றும், இவர் சினிமாவுக்கு வந்தால் மிகப்பெரிய புகழை பெறுவார் என்பதையும் கணித்தார்.

அந்த பெண்ணை கூப்பிட்டு நீ யார்? உனக்கு சினிமாவில் நடிக்க விருப்பமா? என்று கேட்டார். நல்ல கேரக்டர் வந்தால் நடிக்க தயார், ஆனால் அதே நேரத்தில் நான் என்னுடைய உறவினர் வீட்டில் தங்கி இருக்கிறேன், அவர்களிடம் அனுமதி கேட்க வேண்டும் என்று கூறினார்.

வினுசக்கரவர்த்தி அந்த பெண்ணின் உறவினரிடம் அனுமதி கேட்டு வண்டிச்சக்கரம் திரைப்படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க வைத்தார். அவர்தான் பின்னாளில் தமிழ் சினிமாவையே கலக்கிய சில்க் ஸ்மிதா. ஒரு கட்டத்தில் சில்க் ஸ்மிதா வினு சக்கரவர்த்தியின் கட்டுப்பாட்டில் தான் இருந்ததாகவும் கூறப்பட்டது.

சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தை இயக்க வேண்டும் என்பது வினு சக்கரவர்த்தியின் கனவாக இருந்தது. ஆனால் அது கடைசி வரை நிறைவேறவில்லை. ஆனால் சில்க் ஸ்மிதா என்ற ஒரு நடிகை திரையுலகில் நுழைவதற்கு காரணமாக இருந்தவர் வினு சக்கரவர்த்தி.

சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக வெளிவந்த தி டர்ட்டி பிக்சர்ஸ் என்ற படத்தின் இயக்குனரை அவர் கடுமையாக விமர்சனம் செய்தார். அதுமட்டுமின்றி அந்த படத்தில் சில்க் ஸ்மிதாவை பற்றிய தவறான கருத்துக்கள் பதிவு செய்யப்பட்டதாகவும் அவர் கூறினார். மேலும் அவர் பல பேட்டிகளில் அடுத்த பிறவி ஒன்று இருந்தால் எனக்கு மகளாக சில்க் ஸ்மிதா பிறக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

மேலும் அவர் தனது குழந்தைகளிடம் எந்த நேரத்திலும் நான் வினு சக்கரவர்த்தியின் மகன், மகள் என்று யாரிடமும் சொல்ல வேண்டாம் என்றும் கூறியிருந்தார். இதனை அடுத்து இருவருக்குமே சினிமா மீது ஆர்வம் இல்லாமல் போக இருவருமே தங்களுக்கு பிடித்த துறையில் தேர்ந்தெடுத்தனர். வினு சக்கரவர்த்தியின் மகன் லண்டனில் மருத்துவராகவும் மகள் அமெரிக்காவில் பேராசிரியராகவும் வேலை பார்க்கிறார்கள்.

கார், பங்களா என ஆடம்பர வாழ்க்கை.. கடைசி காலத்தில் வறுமை.. நடிகை பிந்துகோஷ் கதை..!

திரை உலகில் தனக்கென ஒரு பாணியை அமைத்துக் கொண்டு நடிப்பில் முத்திரை பதித்த வினு சக்கரவர்த்தி 2017 ஆம் ஆண்டு உடல் நலக் குறைவால் காலமானார். அவர் மறைந்தாலும் அவர் நடித்த திரைப்படங்களை ரசிகர்கள் என்றும் மறக்க மாட்டார்கள்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews