விநாயருக்கு படைக்கும் அவல், பொரி, அப்பத்தின் தத்துவம் தெரியுமா?!

விநாயகரை வணங்கிய பிறகே எந்த செயலையும் துவங்குகிறோம். விநாயகருக்கு அப்பம், அவல், பொரி, மோதகம், பழங்கள் வைத்து படைப்பது வழக்கம். இந்த ஒவ்வொரு பொருட்களுக்கும் ஒவ்வொரு காரணம் இருக்கின்றது.

சைவ சமய வழிபாட்டில் சரியை, கிரியை, யோகம், ஞானம் என்ற நான்கு நிலைகள் உண்டு. சரியை என்றால் பக்குவமில்லாத பக்தி என தரும். நம்மில் பெரும்பாலும் செய்யும் வழிபாடு சரியை வகையை சார்ந்தது. சிவனுக்கு இறைச்சியை வைத்து படைத்த கண்ணப்பரின் வழிபாட்டை சார்ந்தது. இந்த தெய்வத்திற்கு இப்படித்தான் செய்யவேண்டுமென்ற விதிமுறைகளுக்கு உட்படாத வழிபாட்டு முறையாகும். அறியாதவர்களுக்கு எடுத்து சொல்வதுதானே சரியாகும்.

விநாயகருக்கு படைக்கும் அவல், பொரி, மோதகத்தின் காரணத்தினை பார்க்கலாம்..

பழங்கள்: மனிதா! நீ இறைவனால் படைக்கப்பட்டவன். மொட்டு, அரும்பாகி, பூவாகி, காயாகி, கனிந்து பழமாகி என்னை வந்தடைவதைப்போல என்றேனும் ஒருநாள் அந்த இறைவனை அடைந்துதான் ஆக வேண்டும். அதற்குரிய முன்னேற்பாட்டை நீ செய்துக்கொள். வாழ்க்கை சக்கரம் ஓட அவசியமான பொருள்தேடி அலைவதிலோ, 24 மணி நேரமும் உழைப்பதிலோ எந்த தவறும் கிடையாது. ஆனால், அந்த உழைப்பின் பலனை என்னவாக மாற்றி இருக்கிறாய் என்று பார். வெறும் பொருளினை மட்டும் உனக்கும், உன் குடும்பத்தாருக்கும் சேமித்து வைப்பதில் பலனில்லை, இறைவழிபாட்டிற்கும், தானதர்மங்களுக்கும் குறிப்பிட்ட தொகையை செலவு செய்ய வேண்டும். அப்படி செய்யாமல் இருந்தால் அதை இன்றே செய்துவிடு. ஏனெனில் நீயும் ஒருநாள் எனக்கு படைக்கப்பட்ட கனி போல பழுத்துவிடுவாய். பழுத்தகனி மரத்திலிருந்து உதிர்ந்துவிடும். அதாவது, உன் வாழ்க்கை அழிந்துபோகும். அதற்கு முன்னதாக நீ காய் பருவத்திலேயே (வாழும்போதே) நல்லதைச் செய்துவிடு, என்பதைக் குறிப்பால் காட்டுவதற்கு ஆகும்..

அவல்: விநாயகருக்கு படைக்கப்படும் அவலை அரிசியிலிருந்து தயாரிக்கப்படுகிறது. அது உரலில் அங்கும் இங்குமாக புரண்டு மிகக்கடுமையாய் இடிபடும். எந்த அளவுக்கு இடிபடுகிறதோ அந்த அளவுக்கு சுவையான அவல் கிடைக்கிறது. அரிசி உரலுக்குள் இடிபடுவதுபோல, மனிதனாகப் பிறந்தவனும் பசி, பட்டினி, வறுமை, நோய் நொடி என வாழ்க்கைச் சூழலில் சிக்கி இடிபட்டுத்தான் ஆகவேண்டும். அதற்காக இறைவன்மீது வருத்தப்படக்கூடாது. இந்த துன்பங்களுக்கு காரணம் அவரவர் வினைகளே. அவற்றினால் பக்க்குவப்பட்டால் என்னை வந்தடையலாம்..

அப்பம்: அரிசி மாவிலிருந்து அப்பம் தயாராகிறது. அரிசியை ஊறவைத்து, தூசி, கல் நீக்கி, மாவாக இடித்து, வெல்லம் சேர்த்து பக்குவப்படுத்தினால் அப்பம் மாவு தயார். அதை அப்படியே வைத்திருந்தால் இரு நாளுக்குமேல் தாங்காது. அதை உருட்டி, இலையில் வைத்து தட்டையாக்கி, எண்ணெய்ச்சட்டியில் போட்டு எடுக்கிறோம். பச்சை மாவு உருண்டை எண்ணெய்ச்சட்டிக்குள் விழுந்ததும் சடசடவென கொதிக்கும். பாவம் செய்த மனமும் இதுபோல்தான் பதறித் துடிக்கும். எதற்கும் பயப்படும். பரபரப்பு அடையும். சற்று வெந்ததும் மாவின் சத்தம் அடங்கி போகும். வாழ்க்கையிலும் அனுபவப்பட்டுவிட்டால் வெந்த அப்பத்தைப் போல மனம் பக்குவப்பட்டுவிடும். பக்குவப்பட்ட மனமுடையவனுக்கு இறையருள் எளிதில் கிடைத்து விடும். இப்படி தயாரான அப்பம் வாய்க்கும் ருசியாய் இருக்கும். பசியையும் போக்கும். மனிதனும் இப்படித்தான் பக்குவப்பட்டு அடுத்தவருக்கு உதவ வேண்டும்.

பொரி: விநாயகருக்கு பொரி படைப்பதன் நோக்கம் மீண்டும் பிறவி எடுக்கக்கூடாது என்பதற்காகத்தான். நெல்லை நிலத்தில் போட்டால் முளைக்கும். அதையே வறுத்து பொரியாக்கி நிலத்தில் போட்டால் விளையாது. நீ நெல் போல இருக்காதே; பொரியாக மாறிவிடு. பொரிக்கு எப்படி வளரும் சக்தி கிடையாதோ அதுபோல் மறுபிறவி என்ற சொல்லையே மறந்துவிட்டு இறைவனுடன் ஐக்கியமாகிவிடு, என்பதே இதன் பொருள்.

எந்தவொரு செயலையும் ஆய்ந்து ஆராயந்து செய்யவேண்டும். அதுவே சிறந்தது. அது வழிபாட்டிற்கும் பொருந்தும். பெரியவர்கள் செய்கிறார்களே என அப்படியே பின்பற்றாமல் காரண காரியத்தை அறிந்துக்கொண்டு பின்பற்றினால் வழிபாடு நிறைவடையும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews