கொல்கத்தா ஃபைனல்ஸ் போன வருசத்தில் வெளியான விஜய் படங்களின் ரிசல்ட்.. கோட் படத்தின் முடிவை இப்போதே சொன்ன ரசிகர்கள்..

ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறிய ஆண்டுகளில் எல்லாம் நடிகர் விஜய் படங்களின் ரிசல்ட் தொடர்பான ஒற்றுமை பற்றி தான் தற்போது பார்க்கப் போகிறோம். கடந்த 2012 ஆம் ஆண்டு, முதல் முறையாக கௌதம் கம்பீர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இறுதி போட்டிக்கு முன்னேறி இருந்தது. இந்த போட்டி சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றிருந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்த்து அவர்கள் அபார வெற்றி பெற்றிருந்தனர்.

தொடர்ந்து 2014 ஆம் ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்த்து ஆடி இருந்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ். இந்த போட்டியிலும் கடைசி ஓவரில் திரில்லிங் வெற்றியை பெற்றிருந்த கொல்கத்தா அணி, இரண்டாவது முறையாக அதே கம்பீர் தலைமையில் கோப்பையை கைப்பற்றி இருந்தது.

இதனைத் தொடர்ந்து, 2021 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின் இறுதி போட்டிக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி முன்னேறி இருந்தது. ஆனால், இந்த சீசன் அவர்களுக்கு கோப்பையைத் தேடிக் கொடுக்கவில்லை. சிஎஸ்கே அவர்களை வீழ்த்தி நான்காவது முறையாக ஐபிஎல் கோப்பையை கைப்பற்றியது. அப்படி ஒரு சூழலில், நான்காவது முறையாக தற்போது தான் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறி உள்ளது.

அப்படி இருக்கையில் 2012 ஆம் ஆண்டு கொல்கத்தா அணி கோப்பையை வென்ற சமயத்தில் விஜய்யின் இரண்டு திரைப்படங்கள் அதே ஆண்டு ரிலீஸ் ஆகியிருந்தது. ஷங்கர் இயக்கத்தில் நண்பன் திரைப்படமும், ஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் துப்பாக்கி திரைப்படமும் விஜய்யின் நடிப்பில் வெளியாகியிருந்த நிலையில் இரண்டு படங்களுமே பிளாக்பஸ்டர் ஹிட்டாக அமைந்திருந்தது.

இதனைத் தொடர்ந்து, 2014 ஆம் ஆண்டு, விஜய் நடிப்பில் வெளியான ஜில்லா படம் சூப்பர் ஹிட் திரைப்படமாகவும் அமைய, அதனைத் தொடர்ந்து அதே ஆண்டில் வெளியான கத்தி திரைப்படம், விஜய்யின் திரை பயணத்தில் மிக முக்கியமான ஒரு மைல்கல்லாகவும் அமைந்திருந்தது. இதனிடையே 2021 ஆம் ஆண்டு கொல்கத்தா அணி மூன்றாவது முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறிய சமயத்தில், விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் மாஸ்டர்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் முதல் முறையாக விஜய் நடித்த இந்த திரைப்படமும் பெரிய அளவில் வரவேற்பை பெற்றிருந்த நிலையில், இந்த ஆண்டு விஜய்யின் திரைப்படங்கள் இதுவரை எதுவும் வெளியாகவில்லை. இந்நிலையில் தான், செப்டம்பர் ஐந்தாம் தேதி வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் ‘கோட்’ திரைப்படம் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக கொல்கத்தா அணி இறுதி போட்டிக்கு முன்னேறிய மூன்று ஆண்டுகளில் வெளியான விஜய் திரைப்படங்கள் பெரிய ஹிட் ஆகியிருந்த நிலையில், கோட் திரைப்படமும் அதே வரிசையில் பிளாக்பஸ்டர் ஹிட்டாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews