தேனி, கோவை, கன்னியாகுமரியில் காய்கறி விற்பனை வளாகம்!! உள்நாட்டு மீன் வளர்ப்புக்கு 5 கோடி ஒதுக்கீடு!! இதனால் பயன் என்ன?
இன்று காலை தமிழகத்தின் சட்டப்பேரவையில் 2022 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தமிழகத்தின் வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தாக்கல் செய்து கொண்டு வருகிறார்.
அவர் இதில் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், விவசாயிகளுக்கு தார்ப்பாய் வழங்கும் திட்டம், டிஜிட்டல் விவசாயம் உள்ளிட்ட பல திட்டங்கள் பற்றியும் அதற்கான நிதி ஒதுக்கீட்டினை பற்றியும் அறிவித்தார்.
அந்த வகையில் தற்போது தேனி, கோவை, கன்னியாகுமரியில் காய்கறி விற்பனை வளாகம் அமைக்க உள்ளதாக கூறியுள்ளார். தேனி, கோயம்புத்தூர், கன்னியாகுமரியில் பொது, தனியார் பங்களிப்புடன் மொத்த காய்கறி விற்பனை வளாகம் அமைக்கப்படும் என்றும் கூறினார்.
தமிழக விவசாயிகளிடம் இருந்து பிற மாநில வியாபாரிகள் நேரடியாக காய்கறி கொள்முதல் செய்ய விற்பனை வளாகம் அமைக்க உள்ளதாகவும் அவர் கூறினார்.
அதோடு மட்டுமில்லாமல் மாநில வேளாண் வளர்ச்சித் திட்டம் புதிதாக செயல்படும் என்றும் அதற்காக 71 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளதாகவும் கூறினார். இந்த நிலையில் உள்நாட்டு மீன் வளர்ப்புக்கு ரூ 5 கோடி ஒதுக்கீடு செய்துள்ளதாக அவர் கூறியுள்ளார். அயிரை, செல் கெண்டை, கல்பாசி போன்ற உள்நாட்டு மீன் வகை வளர்ப்புக்கு ரூபாய் 5 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக அவர் கூறினார் .
