முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த வீடான போயஸ் கார்டனின் வேதா இல்லத்தை திறக்கலாம், ஆனால் பொதுமக்கள் பார்வையிட அனுமதி இல்லை என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த வீடு வேதா இல்லத்தை அரசு கையகப்படுத்தி அதனை ஜெயலலிதா நினைவு இல்லமாக மாற்றியது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா மற்றும் அண்ணன் மகன் தீபக் ஆகியோர் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு கடந்த சில வாரங்களாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் ஜெயலலிதா வாழ்ந்த இல்லத்தில் பொது மக்களை அனுமதிக்க கூடாது என்று தீபா மற்றும் தீபக் மனு கொடுத்து இருந்த நிலையில் இந்த மனுவின் மீதான விசாரணை இன்று நடைபெற்றது. இதனை அடுத்து தற்போது வெளியான உத்தரவு ஒன்றில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட நினைவு இல்லத்தை நாளை திறந்து வைக்க எந்தவித தடையும் இல்லை என்றும் ஆனால் அதே நேரத்தில் பொது மக்களை நினைவு இல்லத்தில் அனுமதிக்கக் கூடாது என்றும் தீபக், தீபா தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
இதனையடுத்து நாளை முதல் ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை நேரில் பார்க்கலாம் என்று ஆசையிலிருந்த பொதுமக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்