பக்தர்களின் சூடான பிரச்சனைகளைத் தீர்த்து வைக்க குளிரக் குளிர கோடையின் முடிவில் வரும் வசந்த உற்சவம்

முருகப்பெருமானுக்கு உரிய அற்புத விசேஷமான திருநாள் வைகாசி விசாகம். முருகப்பெருமானின் அவதார திருநட்சத்திரம் வைகாசி மாதத்தில் வருவது அதிவிசேஷமானது.

நாளை (2.6.2023) வெள்ளிக்கிழமை அன்று இந்த விசேஷம் வருகிறது. சிவபெருமானுக்கு பஞ்ச திருமுகங்கள் உண்டு. அதோடு அதோ முகம் என்கிற ஆறாவது முகம் தோன்ற அந்த 6 நெற்றிக்கண்களில் இருந்தும் அருட்பெருஞ்ஜோதிகள் பரவ அதிலிருந்து வந்தவர் தான் ஆறுமுகம் என்கிற முருகப்பெருமான்.

Lord Muruga 3 1
Lord Muruga 3

அதோ முகம் மறைந்து இருந்ததால் அம்பிகையின் அருள்சக்தியுடன் இணைந்து தான் முருகப்பெருமான் வெளிப்பட்டார். அவருடைய அவதார திருநட்சத்திரம் விசாகம். அதிலும் வைகாசி விசாகம் சிறப்புப் பெற்றது. மயில் மீது பறந்து வந்து வேண்டுவோருக்கு வேண்டும் வரத்தை அருளக்கூடியவர் முருகப்பெருமான். அருணகிரிநாதர் இதை தம் பாடலில் அடிக்கடி சுட்டிக்காட்டுவார்.

நமது பிரச்சனைகளைப் போக்குவதற்கு மயில் மீது ஏறிவந்து உடனடியாக வந்து அனுக்கிரகம் செய்வார். எவ்வளவு பிரச்சனைகள் வந்தாலும் முருகப்பெருமானைக் குளிர குளிர வழிபட்டால் நமது பிரச்சனைகள் தீரும். அதனால் தான் இந்த வைகாசி விசாகத்தை வசந்த உற்சவமாகக் கொண்டாடுகிறார். அதனால் முருகப்பெருமான் நமக்கு ஒரு குளுமையான நிலையை ஏற்படுத்தித் தரும் விழா தான் இந்த வைகாசி விசாகம்.

விரதம் இருப்பது எப்படி?

குழந்தை வேண்டும் என்று விரதம் இருப்பவர்கள் இந்த வைகாசி விசாகத்தன்று இருக்கலாம். கணவன்-மனைவி பிரச்சனைகள் சரியாகு விரதம் இருக்கலாம். தொழிலில் வளர்ச்சி அடையாதவர்கள் விரதம் இருக்கலாம்.

காலை எழுந்ததும் முதலில் குளித்து விட்டு நமது உடல்நிலையைப் பொறுத்து நாள் முழுவதும் விரதம் இருக்கலாம். நமது ஆரோக்கியத்தைப் பொறுத்த விஷயம் அது. காலை அல்லது மாலையில் கோவிலுக்குச் செல்லலாம். கோவிலுக்குச் சென்றால் அரை லிட்டர் பால் வாங்கி அபிஷேகத்துக்குக் கொடுக்கலாம்.

சுடச்சுட நமது பிரச்சனைகளிலிருந்து விடுபட குளிர்ச்சியான பாலைக் கொடுத்து அபிஷேகத்துக்குக் கொடுக்க மறந்து விடாதீர்கள். அன்று பல கோவில்களில் பால் குடம் எடுத்து வழிபடுவார்கள். கோடையின் முடிவில் இந்த விசேஷம் குளிர குளிர வருவதுதான் அதிவிசேஷம்.

Lord Muruga
Lord Muruga

நைவேத்தியமாக சர்க்கரைப்பொங்கல், பருப்புப்பாயாசம் என ஏதாவது ஒன்றை வைத்துக் கொள்ளலாம். காலை அல்லது மாலை என எந்த வேளையிலும் வைக்கலாம். விரதம் இருப்பவர்கள் மாலை நைவேத்தியம் வைத்து வழிபாடு முடித்து அதை சாப்பிட்டு விரதத்தைப் பூர்த்தி செய்யலாம். அன்று மறக்காமல் நாம் செய்ய வேண்டியது தானம்.

அன்றைய நாளில் கோடையைத் தணிக்கக்கூடிய பொருள்களைத் தானம் செய்யலாம். கொடை, விசிறி, நீர் மோர், அன்னதானம் என எது வேண்டுமானாலும் செய்யலாம். இவை அனைத்தையும் நாம் செய்தால் பல மடங்கு பலன்கள் நமக்குக் கிடைக்கும். வாய்ப்பு இல்லாதவர்கள் ரெண்டு பேருக்காவது சாப்பாடு வாங்கிக் கொடுங்க. அன்றைய நாளில் சஷ்டி கவசம் பாராயணம் படித்து தீப தூப ஆராதனைகள் செய்து வழிபடலாம்.

வழிபாட்டு நேரம்

2.6.2023 அன்று அதிகாலை 5.55 மணிக்கு விசாகம் நட்சத்திரம் துவங்குகிறது. காலையில் 6 மணி முதல் 7 மணி வரையும், 9.30 மணி முதல் 10.30 மணி வரையும், மதியம் 1.30 மணியில் இருந்து 2.30 மணி வரையும், மாலை 6 மணிக்கு மேல் பூஜை செய்து கொள்ளலாம்.

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews